நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, சம்பந்தனுடன் சந்திப்பு
(NFGG ஊடகப்பிரிவு)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தலைமைத்துவ சபை எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுடன் ஒரு விசேட சந்திப்பினை இன்று (16.02.2016) மேற்கொண்டது. எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இச்சந்திப்பு இடம் பெற்றது.
இச்சந்திப்பின் போது அரசியலமைப்பு மாற்றம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம் பெற்றன. குறிப்பாக, வட கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு வடிவம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் நியாயமான அபிலாசைகளையும் நலன்களையும் உத்தரவாதப்படுத்தும் பொருட்டு ஆலோசிக்கப் படத்தக்க பல்வேறு அதிகாரப் பரவலாக்கல் வடிவங்கள் தொடர்பிலும் அதன் சாத்தியப்பாடு தொடர்பிலும் பேசப்பட்டது.
தமிழ், முஸ்லிம் சமூகங்களின் நியாயமான எதிர்பார்ப்பகளுக்கேற்ற அரசியல் தீர்வு யோசனைகளை முன் மொழிகின்ற அதே நேரம் அதனை தென்னிலங்கை மக்களின் அங்கீகாரத்துடன் சாத்தியப்படுத்தத்தக்க அணுகுமுறைகளை தமிழ், முஸ்லிம் தலைமைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதனையும் NFGG இச்சந்திப்பின் போது எடுத்துக் கூறியது.
அத்தோடு, தமிழ், முஸ்லிம் தலைமைகள் இணைந்து அதிகாரப் பகிர்வு யோசனைகள ஒரு பொது உடன் பாட்டுடன் முன்வைக்க வேண்டிய அவசியமும், இச்சந்திப்பின் போது இரு தரப்பினராலும் பரஸ்பரம் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பான பரஸ்பரக் கலந்துரையாடல்களை எதிர்காலத்திலும் தொடர்வதென முடிவு செய்யப்பட்டது.
இசந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் பங்கெடுத்திருந்தார்.
NFGG சார்பாக அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பொதுச் செயலாளர் நஜாமுஹமட், வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் மற்றும் பொறியியலளர் பழ்லுல் ஹக் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
Post a Comment