ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின், கொட்டம் ஒடுங்குகிறது
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு தற்போது, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பாதி சம்பளமே வழங்கப்படுவதோடு, சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேற்கு ஆசிய நாடுகளான, சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உலகையே அச்சுறுத்தி வருகின்ற, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு. இணையதளம் மூலம் விளம்பரம் செய்து, பணம் மற்றும் பெண் ஆசை காட்டி, பல நாடுகளைச் சேர்ந்த வாலிபர்களை தங்கள் அமைப்புக்கு சேர்த்து வருகிறது; அவர்களுக்கு பயங்கரவாத பயிற்சியும் அளிக்கிறது. இவ்வாறாக பயிற்சி பெற்றவர்கள் மூலம் சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட பல நாடுகளில், பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த அமைப்பு, பயங்கரவாத தாக்குதல்களுக்கு சிறுவர்களையும் பயன்படுத்தி வருகிறது. சிரியாவில், ரக்கா உட்பட்ட சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்த அமைப்பினர், அந்த நகரங்களில் பிரத்யேக கரன்சியை அறிமுகப்படுத்த முடிவு செய்தனர். இந்நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளின் ராணுவத்தினர், சிரியாவில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலாலும், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைக்காத வகையில் பல நாடுகள் எடுத்த நடவடிக்கையாலும், ஐ.எஸ்., அமைப்பு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதனால், நிறைய சம்பளம், சலுகைகள் மற்றும் போனஸ் தரப்படும் என, கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு தங்கள் அமைப்பில் சேர்க்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு, அவற்றை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகி உள்ளது.
முக்கிய காரணம் என்ன?
சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கடும் நிதி நெருக்கடியை சந்திப்பதற்கான முக்கிய காரணமாகும். மேலும் அமெரிக்க படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில், ஐ.எஸ்., கட்டுப்பாட்டில் இருந்த எண்ணெய் வளங்கள், வினியோகம் செய்யும் குழாய்கள் நாசமாகிவிட்டன. அத்துடன், பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை ஈராக் அரசு நிறுத்தியதும், நிதி நெருக்கடிக்கு காரணமாகும்.
சம்பளம் பாதியானது; சலுகைகள் ரத்து :
*ஐ.எஸ்., அமைப்பில் இணைந்தவர்களுக்கு, முதலில் தருவதாக கூறப்பட்ட சம்பளத்தில் பாதி தான் தற்போது வழங்கப்படுகிறது
*சம்பளத்தை தவிர வழங்கப்பட்டு வந்த அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன
*இந்த நிதி நெருக்கடியால் வரவு - செலவு கணக்கை, அமெரிக்க டாலர்களிலேயே மேற்கொள்ள ஐ.எஸ்., முடிவு செய்துள்ளது
*மின் கட்டணம், குடிநீர் கட்டணம் மற்றும் வரிகளை எல்லாம், அமெரிக்க டாலர்களிலேயே செலுத்த வேண்டும் என, ரக்கா நகரமக்களுக்கு உத்தரவிட்டு உள்ளது
*தங்கள் பிடியில் உள்ள பிணை கைதிகளை, 500 டாலர், அதாவது, 33 ஆயிரம் ரூபாய்பெற்றுக் கொண்டு விடுவித்தும் வருகின்றனர்
*வான்வெளி தாக்குதலில் இழந்த ஆயுதங்களை மீண்டும் வாங்குவதற்கான பணம் இல்லாமல் திண்டாடுகின்றனர்
*ரக்கா நகர மக்கள் செய்யும் பணிகளுக்கான சம்பளமும் பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.
பல மணி நேரம் இருட்டு:
ரக்கா நகரத்திலிருந்து வெளியேறி, தற்போது துருக்கியின் காஜியன்டேப் நகரில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், 'மின் வினியோகம் இல்லாமல், ரக்கா நகரம், தினமும் பல மணிநேரம் இருளில் மூழ்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை, வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. கோர்ட்டுகள் முதல் பள்ளிகள் வரை பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு, இரண்டு மாதங்களாக, 50 சதவீத சம்பளமே வழங்கப்படுகிறது' என்றார்.
தாக்குதலை நிறுத்தவில்லை :
இது பற்றி அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது:ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தங்களின் செயல்பாடுகளையும் செலவுகளையும் மிகவும் குறைத்துள்ளனர். எனினும் சிரியாவின் பல பகுதிகளை, ஐ.எஸ்., தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சிரியா அரசு, பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் தற்போது சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. அதே நேரத்தில், தங்களது பயங்கரவாத தாக்குதல்களையும், தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு பணம் வழங்குவதையும், ஐ.எஸ்., இன்னும் நிறுத்தவில்லை.இவ்வாறு அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.S
Post a Comment