உத்தேச இலங்கை - இந்திய ஒப்பந்தம்: எதிர்ப்பு வலுக்கிறது
-BBC-
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார, தொழில்நுட்ப கூட்டுறவுக்கான ஒப்பந்தம் (ECTA) தொடர்பில் இலங்கையில் தொழில்சார் நிபுணர்களும் வணிகத்துறை சமூகத்தினரும் தொழிற்சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்த ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்கள் அடங்கலாக இருநாடுகளுக்கும் இடையில் சேவைகளை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பது தான் அதற்கு காரணம்.
இந்த எதிர்ப்பை சமாளிப்பதற்காக, மருத்துவர்கள்,பொறியியலாளர்கள், தொழில்நுட்ப தொழில்சார் நிபுணர்கள் மற்றும் வணிக சமூகத்தினரை உள்ளடக்கிய 45 பிரதிநிதிகளின் கூட்டுக்குழு ஒன்றை அமைத்து பேச்சு நடத்துவதற்கு அரசாங்கம் இப்போது இணங்கியுள்ளது.
தங்களுடன் பேச்சு நடத்தக் கோரி மருத்துவர்கள் அடங்கலாக ஆயிரக் கணக்கான தொழில்சார் நிபுணர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியிருந்த நிலையிலேயே அரசாங்கம் இதற்கு சம்மதித்திருக்கிறது.
இதனிடையே, இந்த எதிர்ப்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அணியான பொது எதிரணி என்று அழைத்துக்கொள்ளும் கூட்டமைப்பும் தீவிரமாக இறங்கியுள்ளது.
முன்னர் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்ட, இந்தியா- இலங்கை இடையிலான சீபா என்ற ஒப்பந்தத்துக்கும் இந்தப் புதிய ஒப்பந்தத்துக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை என்பது தான் அவர்களின் வாதம்.
புதிய ஒப்பந்தம் நிறைவேற முன்னதாகவே, இந்தியாவிலிருந்து சேவைகளை இலங்கை பெறத் துவங்கிவிட்டதாகவும் பொது எதிரணிக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இந்திய நிறுவனம் ஒன்றின் அம்பியூலன்ஸ் அவசர சேவை ஒன்று ஏற்கனவே இலங்கையில் துவங்கப்பட்டுள்ளதாகவும் அதனால் உள்ளூரில் தனியார் அம்பியூலன்ஸ் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூரில் அரசாங்க மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் அம்பியூலன்ஸ் சேவைகளை விரிவாக்காமல் இந்திய நிறுவனத்தை வரவழைத்துள்ளதாகவும் அந்த அறிக்கை குற்றம்சாட்டுகின்றது.
இலங்கையின் பொருளாதாரத்தை அந்நிய மயமாக்கும் வேலை இது என்றும் மகிந்த ராஜபக்ஷ ஆதரவு அணி கூறியுள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் கடுமையாக மறுத்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு இலங்கை வந்தபோது, இந்தியா அளித்திருந்த அன்பளிப்பே அந்த அம்பியூலன்ஸ் சேவை என்று துணை வெளியுறவு அமைச்சர் ஹர்ஷ டி சில்வா பிபிசியிடம் கூறினார்.
அவ்வாறே, புதிதாக வரக்கூடிய இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்தால் உள்ளூர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற விமர்சனத்தையும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மறுத்துப் பேசினார்.
இலங்கையில் இயங்கக்கூடிய சில தொழில்களுக்கு இந்தியாவிலிருந்து நிபுணர்களை வரவழைக்கும் தேவை இருந்தால், அந்தத் துறைகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டும் அதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று துணை வெளியுறவு அமைச்சர் கூறினார்.
உள்ளூர் தொழில்கள் தொடர்பில் துறைசார் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியே இந்தியத் தொழிலாளர்களை வரவழைக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
Post a Comment