Header Ads



இராணுவப் புரட்சி குறித்து, மைத்திரி - ரணில் அச்சம்

பலவீனமுற்றிருந்த இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான காலஅவகாசத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு நோர்வேயின் உதவியைப் பெற்றுக் கொண்டது.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

யாழ்ப்பாணத்தில் இராணுவ கட்டளை அதிகாரியாகச் செயற்பட்ட மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுடனான சூடான விவாதத்தைத் தொடர்ந்து கொழும்பு இராணுவத் தலைமையகத்திற்கு கடந்த வாரம் இடம்மாற்றப்பட்டார். ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணையகத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவில் இரண்டு இராணுவ அதிகாரிகளை உள்ளடக்குவதற்கு வெளியுறவு அமைச்சர் மறுத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட விவாதத்தின் காரணமாகவே யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரி இராணுவத் தலைமையகத்திற்கு இடம்மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவில் சாஜி கல்லகே முன்னர் கடமையாற்றியிருந்தார். 2010ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த வெற்றியடைந்த பின்னர், அப்போதைய ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சாஜி கல்லகே சிறிலங்கா இராணுவத்திற்குள் மகிந்தவால் தரமுயர்த்தப்பட்டார். அத்துடன் அதிபர் பாதுகாப்புப் பிரிவின் தலைவராகச் செயற்பட்ட சாஜி கல்லகே மகிந்தவால் இராணுவப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், இராணுவத்திற்குள் செயற்படும் மகிந்த ஆதரவு விசுவாசிகள் மைத்திரி-ரணில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஜெனீவாவால் முன்வைக்கப்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு இந்த அரசாங்கம் தயாராக உள்ளது. மைத்திரி சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன் காரணமாகவே இவ்வாறானதொரு சூழல் உருவாகியுள்ளது. இராணுவத்திற்குள் உள்ள மகிந்தவின் விசுவாசிகள் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொள்ளலாம் என மைத்திரி-ரணில் அரசாங்கம் அச்சம் கொண்டிருக்கலாம்.

திருகோணமலைக் கடற்படைத் தளம்:

2002ல், இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றை ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது திருகோணமலை கடற்படை முகாமிற்குப் பொறுப்பாக இருந்த கட்டளை அதிகாரி வசந்த கரனன்கொட, பாதுகாப்பற்ற ஒரு இடத்திலேயே திருகோணமலைக் கடற்படைத் தளம் அமைந்துள்ளதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தவிற்கு தகவல் வழங்கினார். இறுதியாக, சிறிலங்காவின் அப்போதைய அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு கரன்னகொடவால் மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட தகவலைப் பயன்படுத்தத் தீர்மானித்தார். திருகோணமலைக் கடற்படைத் தளமானது அச்சுறுத்தலை முகம்கொள்வதாக சந்திரிக்கா ஊடகங்களில் பரப்புரை செய்தார். இதன்மூலம் இவர் ரணில் அரசாங்கத்தின் கீழிருந்த பாதுகாப்பு மற்றும் ஏனைய இரு அமைச்சுக்களைத் தன்வசப்படுத்தினார். இதனை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தனது நூலான My Belly is White  என்பதில் பின்வருமாறு விபரித்துள்ளார்:

‘அரசியல் நலன்கள் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டும் முடிவுறவில்லை. தெற்கில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்கு எதிர்க்கட்சியினர் விரும்பினர். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கவிடம் திருகோணமலைக் கடற்படைத் தளத்தை நேரடியாகச் சென்று பார்வையிடவுள்ளதாகத் தெரிவித்தார். மகிந்தவின் இந்த வேண்டுகோளுக்குப் பின்னால் ஏதோவொரு நகர்வு உள்ளது என்பதை நான் ஊகித்துக் கொண்டேன். ஏனெனில் எது எங்கு நடந்தாலும் அதை மகிந்த தெரிந்துகொள்ளக் கூடிய சூழ்ச்சி மிக்க அரசியற் திறனைக் கொண்டுள்ளார் என்பதை நான் அறிவேன்.

எனினும், செப்ரெம்பர் 20, 2003 அன்று மகிந்த திருகோணமலையைத் தளத்தைப் பார்வையிடுவதற்கான உலங்குவானூர்தியை ஒழுங்குபடுத்துமாறு ரணில் என்னிடம் அறிவித்தார். ரணில் விக்கிரமசிங்க நல்ல மனமுள்ள, மிகத் தீவிரமான நுண்ணறிவுள்ள ஒருவர். ஆனால் மகிந்தவின் இந்த விடயத்தில் ரணில் மிகவும் மோசமான தீர்மானத்தை எடுத்திருந்தார். ரணில் தனது இத்தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்கான காரணங்களையும் கொண்டிருந்தார்.

நான் பிரதமரின் கட்டளையை நிறைவேற்றுவதற்கான நிலையைக் கொண்டிருந்த அதேவேளையில் எனது சந்தேகத்தை அவரிடம் தெரிவித்த போது, மகிந்தவின் திருகோணமலைக் கடற்படைத் தளத்திற்கான பயணமானது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கான ஒன்றாகவோ அல்லது  தனது ஆட்சிக்கு ஊறுவிளைவிக்கும் ஒரு நகர்வாகவோ ரணில் விக்கிரமசிங்க நோக்கவில்லை. இதற்காக என்னால் முன்வைக்கப்பட்ட எவ்வித காரணங்களையும் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொள்ளவில்லை.

நான் பிரதமரின் கட்டளைக்கு எதிராகச் செயற்பட முயற்சிக்கவில்லை. ஆனால், எனது ஆழ்மனதில் ரணில் விக்கிரமசிங்கவின் இத்தீர்மானத்தை எதிர்த்தேன். மகிந்த ராஜபக்ச திருகோணமலைக்கான தனது பயணத்தை மேற்கொள்ளும் போது அவருடன் நானும் செல்வேன் என பிரதமரிடம் உறுதியளித்தேன். இதற்கு ரணில் விக்கிரமசிங்க எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை. மகிந்த ராஜபக்சவின் இப்பயணமானது பொதுமக்களைச் சமாதானப்படுத்தும் ஒன்றல்ல என்பதையும் இது தொடர்பில் எம்மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படும் என்பதையும் நான் அனுமானித்தேன். இதை விட வேறு எதனை சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து ஒருவர் எதிர்பார்க்க முடியும்? மரியாதையின் நிமித்தம் நான் திருகோணமலைக்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இது தொடர்பாக நான் தொலைபேசி மூலம் மகிந்த ராஜபக்சவிற்கு அறிவித்தேன். ஆனால் அவர் நான் திருகோணமலை செல்வது தொடர்பில் மகிழ்ச்சியடையவில்லை. உங்களுக்கு ஏன் இந்தச் சிரமம் என மகிந்த என்னிடம் வினவினார். நான் ஒரு இராஜதந்திரி என்ற வகையில், தங்களுக்கு உதவுவதற்காகவே நான் அங்கு வருகை தருவதாகத் தெரிவித்தேன். மகிந்தவுடன் நான் ஏன் திருகோணமலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்கான காரணத்தை நான் நியாயப்படுத்தினேன். எனினும் அவர் எனது வருகையை விரும்பவில்லை.

நான் பிறிதொரு உலங்குவானூர்தியில் திருகோணமலைக்குப் பயணித்தேன். திருகோணமலையில் மகிந்தவின் கலந்துரையாடல்களை நான் ஒட்டுக்கேட்டு விடுவேன் என அவர் சந்தேகித்தார். அத்துடன் நான் திருகோணமலையில் பிரசன்னமாகியதால் மறைமுகமாக அது கடற்படை அதிகாரிகளை உளவியல் ரீதியாகத் தாக்கலாம் எனவும் மகிந்தவால் கருதப்பட்டது.

மகிந்தவின் முதலாவது எடுகோள் சரியானதே. ஆனால் இரண்டாவது எடுகோள் தவறானது. திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் பணியாற்றிய திறமைமிக்க மற்றும் அர்ப்பணிப்பு மிக்க அதிகாரியான வசந்த கரன்னகொடவுடன் நாங்கள் கலந்துரையாடலை மேற்கொண்டோம். மணிராசன்குளத்தில் அமைந்துள்ள புலிகளின் முகாம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அவர் எம்மிடம் விளக்கினார். இதனால் திருகோணமலைத் துறைமுகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பன எவ்வாறான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்பது தொடர்பான விளக்கம் மகிந்தவிற்கு வழங்கப்பட்டது.

சண்டே ரைம்ஸ் ஊடகத்தில் வெளியிடப்பட்ட வரைபடத்தில் குறிக்கப்பட்ட சில தரவுகள் எமது பயணத்தின் போது ஆராயப்பட்டது. ஆனால் இதனால் திருகோணமலைக் கடற்படைத் தளத்திற்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லை என்பதைக் கூற நான் விரும்பவில்லை. ஏனெனில், வரைபடத்தில் காண்பிக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் எவையும் பாதுகாப்பு அமைச்சால் எமக்கு தெரியப்படுத்தப்படவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ அதிகாரிகள்:

2002ல் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சியில் சந்திரிக்கா தனக்கு நெருக்கிய இராணுவ அதிகாரிகளைப் பயன்படுத்தினார். ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளை சில இராணுவ அதிகாரிகள் எதிர்த்ததால் சந்திரிக்காவின் முயற்சி இலகுவாகியது. உண்மையில், அப்போது இராணுவக் கட்டளைச் சங்கிலியில் உயர் பதவிகள் வகித்த அதிகாரிகளாலேயே உள்நாட்டு யுத்தமானது சீர்குலைக்கப்பட்டது. அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சிறிலங்கா இராணுவத்தினரின் பல முகாம்கள் வீழ்ச்சியுற்றன. இதனால் சிறிலங்கா இராணுவத்தினர் பலவீனமுற்றிருந்தனர்.

இந்தவேளையில், புலிகள் அமைப்பு மிகவும் பலம் பெற்றிருந்தது. நோர்வே சமாதான நடவடிக்கைகளுக்கு அனுசரணையாளராகச் செயற்பட வேண்டுமென சந்திரிக்கா அழைப்பு விடுத்தார். பலவீனமுற்றிருந்த இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான காலஅவகாசத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு நோர்வேயின் உதவியைப் பெற்றுக் கொண்டது. இதன் காரணமாகவே புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2003ல் நிகழ்த்திய மாவீரர் தின உரையில், போர் நிறுத்த உடன்படிக்கையானது அரசாங்கப் படைகள் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே உதவியுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முரணாக, ரணில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு சந்திரிக்கா தனக்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகளைப் பயன்படுத்த முயற்சித்தார்.

மைத்திரி-ரணில் அரசாங்கம் 2015ல் ஆட்சியைப் பொறுப்பெடுத்த போது, போர்க் குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா இராணுவப் படையினர் அனைத்துலக விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர். மகிந்த அரசாங்கத்தின் மேற்குலக எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு சிறிலங்கா இராணுவத்தினர் விலை பேசப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் வெளிநாடுகளுக்கான இராஜதந்திரிகளாக அனுப்புவதற்குக் கூட தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

சில அனைத்துலக நாடுகள் எமது இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தடைவிதித்துள்ளனர். மைத்திரி-ரணில் அரசாங்கமானது யுத்த மீறல்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனது நாட்டு இராணுவத்தினரை அதிலிருந்து விலக்கி அவர்களின் நற்பெயரைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடும் அதேவேளையில், மகிந்த இதற்கு ஊறுவிளைவிக்கும் முகமாகத் தனக்கு நெருங்கிய இராணுவ அதிகாரிகளைக் குழப்பிவிட்டு மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்குப் பழிச்சொல் ஏற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

இவ்வாறான சிக்கலான விடயம் தொடர்பில் மைத்திரி-ரணில் அரசாங்கம் முழுமையான கவனத்தைச் செலுத்தாவிட்டால், 2004ல் ரணில் அரசாங்கத்தால் சந்தித்த இக்கட்டான சூழலைத் தற்போது சந்திக்க வேண்டியேற்படும்.

No comments

Powered by Blogger.