Header Ads



வடமாகாண முஸ்லிம்களுக்கு ஆதரவாக, கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

 வட மாகாண முஸ்லிம், தமிழ், சிங்கள மக்களின் மீள் குடியேற்றத்தை நிறைவு செய்வதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ள கிழக்கு மாகாண சபையில் தீர்மானம்.
 
 கடந்த 25 வருடங்களுக்கு முன் வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்ட போதும் இனவாத கருத்துக்களை முன்வைத்து வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் பல நிகழ்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு பல இன்னல்களைக் கடந்த 25 வருட காலமாக அனுபவித்துவரும் வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தினை அவசரமாக நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை தீர்மானம் எடுத்து கோரிக்கை விட வேண்டுமென கிழக்கு மாகாண சபை அமர்வு செவ்வாய்கிழமை (23) தவிசாளர் சந்திரதாச  கலபதி தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தனி நபர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
 வட மாகாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லிம்கள் இரவோடு இரவாக ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டு கடந்த 25 வருட காலமாக பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்ற போது இனவாத நோக்குடன் செயற்படும் சில அமைப்புக்கள் இம்மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்துவதுடன், முஸ்லிம் மக்கள் தொடர்பாக பொய்யான விபரங்களை மக்கள் மத்தியில் பரப்பி இவர்கள் தங்களின் கிராமங்களில் மீளக்குடியமவர்தனை தடுத்தும் வருகின்றனர். 

எனவே, வட மாகாண முஸ்லிம்  மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெறுவதற்கு கிழக்கு மாகாண சபை ஏகமனதாக தீர்மானம் எடுத்து கோரிக்கை விட வேண்டும். இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வட மாகாண சபையும், வட மாகாண தமிழ் மக்களும் தங்களின் பூரண ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
 
வட மாகாண முஸ்லிம் மக்கள் தங்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக ஐ.நா ஆணையாளர் அல் - ஹூசைன் இலங்கைக்கு வந்த போது நல்லூர் கோவில் முன் நின்று ஆர்ப்பாட்டம் செய்து வீதியில் வைத்து சந்திக்கும் நிலைமை முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஐ.நா சபையின் காரியாலயம் சென்று ஆர்ப்பாட்டம் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
 
 வட – மாகாண முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக கிழக்கு மாகாண சபையின் தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்க முடியாது என சில கட்சிகளின் தலைவர்கள் கூறிய போது நான் ஆச்சரியம் அடைந்தேன். கிழக்கு மாகாண சபை எல்லைக்குள் நடைபெறும் விடயங்கள் மாத்திரம் தான் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கலாம் எனக் குறிப்பிட்டார்கள். இது குறித்து கவலையடைந்தேன். கடந்த காலங்களில் கிழக்கு மாகாண சபையில் வட மாகாண மக்கள் தொடர்பாக பல பிரேரணைகள் சமர்ப்பித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
 
 தமிழ் மக்கள் தாக்கப்பட்ட போதும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போதும், தமிழ் கோவில்கள் உடைக்கப்பட்ட போதும் ஏகமனதாக குரல் கொடுத்துள்ளோம் என்பதனை சிலர் மறந்து பேகினார்கள். பேசுகின்ற போது இன உறவைப் பற்றி பேசுகின்றீர்கள். வட மாகாண முஸ்லிம் மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பான விடயத்தினை முன் வைத்த போது சிலரின் மனநிலையை அறிய எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. யுத்தத்தினால் தமிழ் மக்கள் பெரும் பாதிப்பினை அடைந்துள்ளனர். தமிழ் சமூகத்திற்கு வழங்க வேண்டிய அதிகாரங்கள், அபிவிருத்தி பணிகள் வழங்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகம் ஒரு போதும் எதிராக செயல்படவில்லை.
 
 யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்ற விடயத்தில் தமிழ் மக்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒத்துழைப்பு வழங்கி தமிழ், முஸ்லிம் சமூகங்களின் உறவினை வளர்த்தெடுக்க வேண்டும். இது தொடர்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்றிய பின் வட மாகாண முஸ்லிம், தமிழ், சிங்கள மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிமேதகு ஜனாதிபதி, பிரதமமந்திரி, மத்திய அரசாங்க மீள் குடியேற்ற அமைச்சர் ஆகியோருக்கு கிழக்கு மாகாண சபையின் ஏகமனதான தீர்மானத்தை அனுப்பவதாக தீர்மானிக்கப்பட்டது

No comments

Powered by Blogger.