செய்த் அல் ஹுசைன் இலங்கை வந்தார் - வெற்றிலை கொடுத்து வரவேற்றார் மங்கள
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ஹுசைன் இன்று காலை 8.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்
நாளையதினம் யாழ்ப்பாணம் செல்லும் ஆணையாளர், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் அதிகாரிகளை முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து பேசவுள்ளார்.
இதனையடுத்து வட மாகாண ஆளுநர் பலிஹக்காரவை அவரின் அலுவலகத்தில் சந்திக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையாளர், யாழ். நல்லூர் ஆலயத்திற்கும் சமூகமளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் ஒரு மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளக இடம்பெயர்ந்தோர் முகாமிற்கு சென்று நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார்.
பிற்பகல் இரண்டு மணியளவில் திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், அங்குள்ள விமானப்படை முகாமை பார்வையிடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
பின்னர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோரை சந்தித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கலந்துரையாடவுள்ளார்.
திருகோணமலையிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
நாளை மறுதினம் காலை கண்டிக்கு விஜயம் செய்யும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், ஶ்ரீதலதா மாளிகைக்கு விஜயம் செய்வதுடன், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளார்.
கண்டியிலிருந்து பிற்பகல் கொழும்பை வந்தடைந்த பின்னர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைகளின் தளபதிகளை, மனித உரிமைகள் ஆணையாளர், பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேசவுள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அங்கத்தவர்களுடன் பகல்போசன விருந்தில் கலந்துகொள்ளும் ஹுசேய்ன், மனித உரிமை விவகாரங்கள் குறித்து ஆணைக்குழுவினருடன் கலந்துரையாடலிலும் ஈடுபடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அன்றையதினம் மாலை இலங்கைக்கான ஐ.நா அலுவலக வளாகத்தில் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் தேசிய ஆலோசனை செயலணி உறுப்பினர்களை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சந்திக்கவுள்ளார்.
எதிர்வரும் 9 ஆம் திகதி தமது இலங்கை விஜயம் தொடர்பில் ஊடகங்களைத் தெளிவுபடுத்தும் பொருட்டு ஊடவியலாளர் சந்திப்பொன்றை ஹுசேய்ன் நடத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
Post a Comment