"முஸ்லிம் அரசியல்" சலுகை அரசியலாக மாறியதன விளைவு
பொது நன்மைக்காக ஒன்றுபட வேண்டும்
இன்று -23- வெளியாகியுள்ள விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்
இலங்கை முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் தமது கட்சி, கொள்கை வேறுபாடுகளுக்கப்பால் மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் எனும் கோரிக்கைகள் இப்போது வலுப் பெற்று வருகின்றன.
இலங்கையின் அரசியல் தற்போது புதிய அத்தியாயத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஆட்சியாளர்கள் சிறுபான்மையினரின் நலன்களைப் புறந்தள்ளி நடக்கின்ற நிலை மாறி அரவணைத்துச் செல்கின்ற நிலை தோற்றம் பெற்றிருக்கிறது.
எனவேதான் இந்த சாதகமான அரசியல் சூழலை மிகச் சரியாகப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு நமது அரசியல் பிரதிநிதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை இன்று அரசியலமைப்பு மாற்றம் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளது. எனவே அமையப்பெறவுள்ள புதிய அரசியலமைப்பில் முஸ்லிம்களின் நலன்களை உறுதிப்படுத்த வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடப்பாடாகும். இது மக்கள் பிரதிநிதிகள் முன்னுள்ள பிரதான சமூகக் கடமையாகும்
அதேபோன்று எல்லைகள் மீள் நிர்ணயம், உள்ளூராட்சி மன்ற தேர்தல், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் காணிகளை விடுவித்தல், சர்வதேச தீவிரவாத சக்திகளுடன் இலங்கை முஸ்லிம்களை தொடர்புபடுத்தும் பிரசாரத்தை முறியடித்தல், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத,மதவாத பிரசாரங்களை எதிர்கொள்தல் போன்ற பல்வேறு சமூக நலன்சார்ந்த விடயங்களில் நமது முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாக மாறியுள்ளது.
அரசியல் கட்சிகளாயினும் சரி, ஏனைய பொது நிறுவனங்களாயினும் சரி அவ்வப்போது கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த காலங்களில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பல பிளவுகளைக் கண்டுள்ளன. இதன் விளைவாக பல புதிய அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் தோன்றியுள்ளன.
இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. அதன் ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ரப் இக் கட்சியை தோற்றுவித்து சுமார் ஒன்றரை தசாப்த காலம் பல சவால்களுக்கு மத்தியில் அதனை வழிநடத்திய போதிலும் அவரது மறைவுக்குப் பிற்பாடு அக் கட்சி பல பிளவுகளைக் கண்டது. பின்னாளில் பலர் பிரிந்து நின்று முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் பலத்தை சிதறடித்தனர்.
அதேபோல் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் மத்தியில் நிலவிய பதவி ஆசைகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பெரும்பான்மை கட்சிகள் முஸ்லிம் அரசியல் பலத்தை சிதறடிப்பதில் கங்கணம் கட்டிச் செயற்பட்டன. இதன் விளைவு, உரிமைக் கோஷத்துடன் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம் அரசியல் பின்னர் சலுகை அல்லது சரணாகதி அரசியலாக மாற்றம் பெற்றது. அதன் விளைவையே இன்று முஸ்லிம் சமூகம் அனுபவித்து வருகிறது.
முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையை வலியுறுத்தியும் இக் கட்சிகளுக்குள்ளே நிலவும் உட்பூசல்களை களைய வேண்டியதன் அவசியம் பற்றியும் கடந்த காலங்களில் பல்வேறு தருணங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன. இக் கட்சிகளை ஓரணியில் கொண்டுவருவதற்கான செயற்பாட்டு ரீதியான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும் அவை பெரியளவில் வெற்றியளிக்கவில்லை.
எனினும் நாம் மேற்சொன்னவாறு, அரசியல் சூழல் கனிந்துள்ள இக் காலகட்டத்தை பயன்படுத்தி சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அனைவரும் ஒன்றுபட முன்வர வேண்டும்.
இன்று பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் எம்.பி.க்கள் அங்கம் வகிக்கிறார்கள். இவர்கள் தமது கட்சிகளில், கொள்கைகளில் இருக்கத்தக்கதாக சமூக விவகாரங்களில் மாத்திரம் ஒற்றுமைப்பட்டுச் செயற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முஸ்லிம் சிவில் சமூக நிறுவனங்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும். இதனை காலத்தின் தேவை கருதிய அழைப்பாகவும் கருத வேண்டும்.
Post a Comment