மெஸ்சியை சந்திக்க முடியாமல் ஏமாற்றம்
ஓரிரு வாரங்களுக்கு முன்பு, கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயர் எழுதப்பட்ட ஒரு உடையை அணிந்துகொண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு சிறுவன் கால்பந்து விளையாடினான். அதைத் தொடர்ந்து, மெஸ்ஸியின் ரசிகனான அச்சிறுவனுக்கு, அவரது பெயர் பதித்த உண்மையான பார்சிலோனா அணியின் உடையும், அவ்வணியிடமிருந்தும், மெஸ்ஸியிடமிருந்தும் இ-மெயில்களும் பறந்தன. அதுமட்டுமின்றி அச்சிறுவனை நேரில் காணப்போவதாக மெஸ்ஸி தெரிவிக்க உலகமே அவரை மெச்சியது.
ஆனால் சமீபத்தில், ஒரு 11 வயது ரசிகையை, மெஸ்ஸியை சந்திக்க வைக்க ஒப்புதல் அளித்து, பின்னர் மறுத்து மனமுடைய வைத்துள்ளது பார்சிலோனா கால்பந்து அணி.
இங்கிலாந்தின் ஸ்டோக் நகரைச் சார்ந்தவர் லிசா மெக்லேன். அவரது 11 வயது மகள் ஹன்யா சஜாத். வளர்ச்சிக்கான ஹார்மோன் குறைபாட்டால் இருதயப் பிரச்னையோடு பிறந்தார் ஹன்யா. இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட இவருக்கு, பார்சிலோனா கால்பந்து அணியின் நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி தான் ஹீரோ. காரணம், தனது 10 வயதில் மெஸ்ஸியும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட நோயிலிருந்து குணமடைந்து உலகையே கலக்கி வரும் தனது ஆதர்சன நாயகனைப் பார்க்க வேண்டுமென்று ஹன்யா ஆசைப்பட்டுள்ளார். இதனால் ஹன்யாவின் தாயார் லிசா, பார்சிலோனா அணியிடம் இ-மெயில் மூலம் அனுமதி பெற்றுள்ளார். அந்த ரசிகையின் ஆசையை நிறைவேற்ற பார்சிலோனா அணியும் உடனே ஒப்புக்கொள்ள, தனது பெற்றோருடன் புறப்பட்டார் ஹன்யா. அவருக்கென சிறப்பு இருக்கைகள், பார்சிலோனா அணி வீரர்களுடன் உரையாடி புகைப்படம் எடுத்துக்கொள்ள நேரமும் ஒதுக்கித்தந்துள்ளது அவ்வணி நிர்வாகம்.
ஆனால், ஹன்யாவின் பயணமோ சோகத்தில் முடிவடைந்தது. சிறப்பு நுழைவுச்சீட்டால் பிரச்னை ஏற்பட ஆட்டத்தின் முதல் 20 நிமிடங்களை அவர்களால் காண முடியவில்லை. இன்னும் சோகமாக, ஆவலோடு எதிர்பார்த்திருந்த மெஸ்ஸியின் சந்திப்பும் கிடைக்கவில்லை. 2 மணி நேரம் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னர் வந்த அணி அலுவலர்கள், மீட்டிங் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகக் கூற, மனமுடைந்தார் ஹன்யா. “இது மிகவும் வருத்தமானதாக இருந்தது. அவள் மனமுடைந்து போய்விட்டாள். தனது கனவு நனவாகும் என்று காத்திருந்தவளால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்பொழுதும் புன்னகை பூத்துக்கொண்டேயிருக்கும் அவளது முகம், இப்பொழுது பொய்யாகவே சிரிக்கிறது” என்று தன் மகளின் வருத்தத்தை வெளிப்படுத்தினார் ஹன்யாவின் தாயார் லிசா.
பார்சிலோனா அணியின் ஊழியர் ஒருவர், “இந்த விஷயத்தில் ஏற்பட்ட பிரச்னையை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். விரைவில் அவர்கள் குடும்பத்தோடு பேசி, நல்லதொரு முடிவுக்கு வருவோம்” என்று தெரிவித்துள்ளார். இவ்விஷயம் கேள்விப்பட்டதும், ஹன்யாவின் சொந்த ஊரான ஸ்டோக் நகரைச் சார்ந்த ‘ஸ்டோக் சிட்டி கால்பந்து கிளப்’ அணி ஹன்யாவை உற்சாகப்படுத்த, அவ்வணி விளையாடும் அடுத்த போட்டியைக் காண ஹன்யாவுக்கு வி.ஐ.பி அனுமதியும், தங்கள் வீரர்களோடு பேசும் வாய்ப்பும் அளிப்பதாக உறுதியளித்துள்ளது.
11 வயது சிறுமி ஒருவரின் ஆசையை உடைத்து வருத்தப்படச்செய்த பார்சிலோனா அணியின் இச்செயல் கால்பந்து அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டை உயிருக்கு உயிராய் நேசிப்பவர்களும், வீரர்களை தங்கள் நாயகனாகப் பாவிப்பவர்களும் உலகின் எல்லா மூளைகளிலும் உண்டு. அனைவருக்கும் அவ்வீரர்கள் காட்சி தர முடியாமல் போனாலும், மரணத்தோடு விளையாடும் இத்தகைய ரசிகர்களுக்காக அவர்கள் இறங்கி வருவது தான் அறம். இவ்விஷயத்தில் மெஸ்ஸி தானாக முன்வந்து தனது ரசிகையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும். அதுவே அந்த மன உளைச்சலுக்கான மருந்தாக அமையும்.
மு.பிரதீப் கிருஷ்ணா
உப்புச் சப்பில்லாத செய்திகளை தவிர்த்துக் கொள்வது நல்லது.
ReplyDelete