சமூகத்தை விடவும் தமது தலைவர் பதவிகளும், கட்சிகளின் வளர்ச்சியுமா முக்கியம்..???
(அப்துல் கையும்)
முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளிடம் என்றுமில்லாதவாறு இன்று காணப்படும் போட்டி அரசியல் காரணமாக சமூகத்தின் எதிர்காலம் பாரிய கேள்விக்குறிக்குள்ளாகிவிடுமோ எனும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர். இத்தலைமைகள் சமூகத்தின் நன்மைகருதி ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் செயற்படாவிட்டால் முஸ்லிம்களைப் பிரித்தாள முனையும் தீயசக்திகளுக்கு அது சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துவிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசைனை பிரதான முஸ்லிம் கட்சித் தலைமைகள் எதுவும் சந்திக்க முடியாமற் போனதற்கு கட்சித் தலைமைகளிடையே காணப்படும் போட்டித்தன்மையே பிரதான காரணமாக அமைந்திருந்தது எனவும் புத்திஜீவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். நாட்டிலுள்ள ஏனைய பிரதான இனங்களான சிங்கள மற்றும் தமிழ்க் கட்சிகள் தமக்குள் கூட்டணி அமைத்து ஒற்றுமையாகச் செயற்படுகையில் முஸ்லிம் தலைவர்கள் மட்டும் கட்சி மற்றும் பிரதேச வேறுபாடுகளைக் காரணங்காட்டிப் பிரிந்து செயற்பட்டு வருவது வேதனை அளிப்பதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
குறிப்பாக முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகளான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் என்பன இணைந்து செயற்பட முன்வர வேண்டும். கட்சி ரீதியாக அது முடியாவிடினும் சமூகம்சார் தேவையான விடயங்களுக்கு தமக்கிடையே ஒரு கூட்டணியை ஏற்படுத்திச் செயற்பட இவர்கள் நிச்சயம் முன்வர வேண்டும். அவ்வாறு செயற்பட்டிருந்தால் அவர்களால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்தித்து முஸ்லிம் மக்கள் சார்பாக கலந்துரையாட நிச்சயம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கும். இதிலிருந்து இந்தத் தலைவர்கள் தவறிவிட்டார்கள் என முஸ்லிம் கல்விமான்களும், புத்திஜீவிகளும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தத் தலைவைர்களுக்கு சமூகத்தை விடவும் தமது தலைவர் பதவிகளும், கட்சிகளின் வளர்ச்சியுமே முக்கியம் என்றே எண்ணத் தோன்றுகிறது. இவர்களது ஒற்றுமையின்மை காரணமாக கிடைத்த ஓர் அரிய சந்தர்ப்பத்தை முஸ்லிம் சமூகம் தவற விட்டுள்ளது. எமக்குள் தவறை வைத்துக் கொண்டு சந்திக்க நேரம் தரப்படவில்லை என அவர்களை பொய்யாகக் குற்றம் சுமத்துவது முறையல்ல எனவும் சுட்டிக் காட்டிய புத்திஜீவிகள் ஐ.நா ஆணையாளரைச் சந்தித்திருந்தால் வடபுல முஸ்லிம்களின் நிலை, ஏனைய பிரதேச முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அவருக்கு எடுத்துரைத்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
முஸ்லிம்களாகிய நாம் இந்நாட்டில் சிறுபான்மை அதுவும் 2வது சிறுபான்மை என்பதை உணர வேண்டும்.
ReplyDeleteமத தனித்துவம் என்பது வேறு அரசியல் தனித்துவம் என்பது வேறு.
மதரீதியான அரசியல் இலங்கை முஸ்லீம்களுக்கு சாத்தியமானதா என அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும்.
மதரீதியான அரசியல் கட்சிகள் தடைசெய்யப்படுமாயின் நமது நிலை என்ன என்பதும் கவனத்தில் கொள்ளப்
படுதல் அவசியம்.
மதரீதியான அரசியல் எம்மை எவ்வாறான சிக்கல்களுக்கு முகம்கொடுக்கச் செய்துள்ளது என்பதனை காய்தல்,உவத்தலற்று சீர்தூக்க வேண்டும்.
கண்கெட்டபின்னான சூரிய நமஸ்காரிகளாக இல்லாது அல்லாஹ் நமது சமூகத்தை பாதுகாப்பானாக.