Header Ads



மைத்திரி விலகிச் செல்வார் - மகிந்தவை வீழ்த்திய மக்களுக்கு, ரணிலை அனுப்புவதும் கடினமல்ல

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிடங்களில் இடம்பெறும் அரசியல் செயற்பாடுகளின் போதும் அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் இணைப்பாளர் லால் காந்த குற்றம் சாட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்பாராத விதத்தில் ஆட்சி கவிழ்த்திய இந்நாட்டு மக்களுக்கு பிரதமரை வீட்டிற்கு அனுப்புவது கடினமான செயலல்ல என்பதை அவர் மறந்து செயற்படக்கூடாது  எனவும் அவர் குறிப்பிட்டார்..

கொழும்பு சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கை, இந்தியா வர்த்தக மற்றும் பொருளாதார உடன்படிக்கை தொடர்பில் சண்டித்தனமான போக்கை கடைப்பிடிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கான களமாக பாராளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்கின்றார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாது என பிரதமர் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் தற்போது யார் எதிர்த்தாலும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவோம் என்கிறார். இவை வேடிக்கையான விடயங்கள் என்று பார்க்க முடியாது. பிரதமர் கடுமையான போக்கை கடைபிடிக்கின்றார்.

இதனை எதிர்ப்பவர்களுக்கு எதிராக தானும் மக்களை வீதியில் இறக்கி போராட்டம் நடத்துவேன் என்றும் பிரதமர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இது ஐக்கிய தேசிய கட்சியின் கடந்த காலங்களை மீட்டிப் பார்ப்பதாகவுள்ளது.

இன்று வெளிநாடுகள் எமது நாட்டை ஆக்கிரமித்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வாறான நிலையில் மக்கள் .எதிர்ப்பின் மத்தியில் இந்தியாவுடனான பொருளாதார ஒப்பந்தம் அவசியமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த உடன்படிக்கையில் சீபா என்ற பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது என்பதை பிரதமர் மறுக்கவும் முடியாது.

கடந்த காலங்களில் ஒரு நபருக்கு சேறு பூசுவதற்காக அவரை புலியாக அடையாளப்படுத்தினர். அது மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற சம்பவம். ஐக்கிய தேசிய கட்சியில் ஒருவருக்கு சேறு பூச வேண்டும் என்றால் ஜே.வி.பி. முத்திரை குத்துவர். ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டில் தற்போதும் மாற்றம் இல்லை.

தற்போது மஹிந்த உள்ளிட்டவர்களுக்கு துணைபோக வேண்டாம் என்று ஊடகங்களை பகிரங்கமாக விமர்சிக்கும் பிரதமர் ஊடகங்கள் அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்றா குறிப்பிடுகின்றார்?

இந்நிலையில் தேசிய அரசாங்கத்தில் நிலைகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதநத்திர கட்சியினர் விரைவில் விலகிச் செல்வர். அவ்வாறு அவர்கள் விலகிச் செல்லும் நாள் வரவேண்டும் என்றே நாமும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு மிகப்பெரிய அரச பலம் உள்ளது என்ற அதிகார போக்கில் செயற்படுகின்றார். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்பாராத விதத்தில் ஆட்சி கவிழ்த்திய இந்நாட்டு மக்களுக்கு பிரதமரை வீட்டிற்கு அனுப்புவது கடினமான செயலல்ல என்பதை அவர் மறந்து செயற்படக்கூடாது என்றார்.

No comments

Powered by Blogger.