வகுப்பறையில் மாணவர்கள், துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு அனுமதி
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் அமைந்துள்ள டெக்ஸாஸ் பல்கலை மாணவர்கள் வகுப்பறையில் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
டெக்ஸாஸ் பல்கலை வளாகத்தில் அண்மையில் 14 பேரை பலிகொண்ட துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து,அதுபோன்ற நெருக்கடியான காலகட்டங்களில் மாணவர்கள், போலீஸாரை நம்பியிருப்பது பலன் தராது என்றும் வன்முறை சம்பவங்களில் இருந்து மாணவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள துப்பாக்கியை வைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றும் துப்பாக்கி உரிமை ஆர்வலர்கள் ஆதரவுக் குரல் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, கல்லூரி வளாகங்களில் துப்பாக்கி வைத்துக் கொள்ள முன்னர் தடை விதித்தது சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறி அந்த தடையை விலக்கி கொள்வதாக டெக்ஸாஸ் மாகாண சட்டமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் எதிரொலியாக, டெக்ஸாஸ் பல்கலை மாணவர்கள் வகுப்பறைகளில் துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டாவெறுப்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த பல்கலையின் வேந்தர் கிரிகரி ஃபென்வெஸ் கூறியதாவது: பல்கலை வளாகத்தில், அதிலும் குறிப்பாக, வகுப்பறையில் மாணவர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கியதை என்னால் ஏற்க முடியவில்லை. இருப்பினும் பல்கலை வேந்தர் என்ற முறையில் மாகாண சட்டத்தை அமல்படுத்துவது எனது கடமை.
இந்த முடிவு, சுதந்திரமான பேச்சு, விவாதம், விசாரணை அடிப்படையிலான கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்கும் பல்கலையின் இலக்கிற்கு முரண்பாடானதாக அமையும். பல்கலை வளாகங்களில் துப்பாக்கி வைத்துக் கொள்ளவது தொடர்பாக, ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் தங்களது எதிர்ப்புகளை கடிதங்கள், இ-மெயில் மூலமாக தெரிவிக்கும்படி ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தேன். இருப்பினும், துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான தடை விலக்கி கொள்ளப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
Post a Comment