"இணையதள வன்மம் தவிர்ப்போம்"
-டி .ஏ. ஆசிம்-
விஞ்ஞான உலகம் மனிதன் பயன்படுத்த புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இறைவன் வழங்கியுள்ள ஞானத்தால் உருவாகும் பொருட்கள் ஆக்கத்திற்கும், அழிவிற்கும் பயன்படுத்தபடுகிறது.
அந்த வகையில் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞான வளர்ச்சியாகவும் தகவல் தொழில் நுட்பத்தில் புரட்சியாகவும் செயல்படும் பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூகவலைத்தளங்களை கூறலாம்.
ஆரம்பத்தில் எட்டாக்கனியாக இருந்த இணையதள பயன்பாடுகள் இன்று சாமான்யருக்கும் விரலுக்கெட்டும் தூரத்தில் உள்ளதும், அடிப்படை கணினி அறிவு இல்லாதவர்கள் கூட சமூக வலைத்தளங்களை தங்கள் செல்போன் மூலம் பயன்படுத்த துவங்கியுள்ளதும் சமூக மாற்றத்திற்கான முதல்படி என்றே கூறலாம்.
மேற்க்கத்திய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் சமூக வலைத்தளங்களை மிகச் சிறந்த தஃவா ஊடகமாக பயன்படுத்தி வருகின்றனர். இஸ்லாத்தை பற்றி மாற்று மத்தவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்படி குழுமங்களை உருவாக்கி குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையிலான வாழ்வியல் சிந்தனைகளை பரப்பக்கூடிய ஒரு மகத்தான சேவையை செய்து வருகின்றனர். ஆனால் நமது நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் வன்மம் வளர்ப்பதே குறியாகக் கொண்டு சிலர் செயல் படுவது வருந்தத்தக்கது.
இஸ்லாத்தைக் குறித்தும், முஸ்லிம்களைக் குறித்தும் மோசமாக கருத்துக்களை பதிவிடும் ஒரு சில மாற்று மதத்தவர்களை அதே பாணியில் வாசிக்க அருவருப்பான எழுத்துக்களால் பதிவிடுவது மோசமான கலாச்சாரமாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது.
இஸ்லாத்தின் உயரிய கருத்துக்களான அமைதி, சகிப்புத்தன்மை, கோபம் தவிர்த்தல், அண்டை அயலாரை நேசித்தல், பிற மதத்தவர்களிடம் இணக்கமாக வாழுதல் உள்ளிட்டவைகளை பரப்பும் அரிய வாய்ப்பை பயன்படுத்தாமல் வன்மம் வளர்க்கும் கருவியாக சமூக வலைத்தளங்கள் பயன்படுவது துரதிஷ்டவசமானது.
மேலும், சமூகத்தின் உள்ளே விவாதிக்கப்படும் மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றிய விஷயங்கள் பகிரங்கமாக வலைத்தளங்களில் பரவ விடுவதும், சமுதாய தலைவர்களையும், மார்க்க அறிஞர்களையும் மரியாதைக் குறைவான வார்த்தைகளால் திட்டுவதும் தவிர்க்கப்படவேண்டும்.
கூடவே உள்ளூரில் ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால் உரிய முறையில் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்காமல் வெளிநாடுகளிலிருந்து பதிவிட்டு பிரச்னையை வேறு கோணத்தில் திசை திருப்பி கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறியும் செயலும் வலைத்தளங்களில் நடைபெறுகிறது.
ஏற்கனவே முஸ்லிம் சமுதாயம் மார்க்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், துண்டு துண்டாக, சின்னாபின்னமாக சிதறியுள்ள நிலையில் அனைத்து சமூகத்தவரும் பார்வையிடும் சமூக வலைத்தளங்களில் பிடிக்காதவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், ஒருமையில் திட்டி கமெண்ட் பதிவதும் தொடர்வது சமூக ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
மேலும், தங்களை விட வயதில் பெரிய மார்க்க அறிஞர்களைக் கூட அருவருக்கத்தக்க வகையிலான புகைப்படங்களில் இணைத்து அதை உலாவ விடுவதும், கப்று வணங்கிகள், பித்அத் வாதிகள், நரக வாதிகள், அஹ்லே குஃப்று ஜமாஅத் வாதிகள் போன்ற மார்க்கம் அனுமதிக்காத பட்டப்பெயர்களில் அவமானப்படுத்துவதும் தவறான திசையில் இளைய சமுதாயம் பயணிப்பதையே காட்டுகிறது.
அமைப்பு சார்ந்து, இயக்கம்சார்ந்து பிறரை கொச்சைப்படுத்தும் நபர்களை பொறுப்புதாரிகள் கண்டிக்காமல் விடுவதே இந்த போக்கு வளர மற்றுமொரு காரணமாகும்.
எனவே, சமூக வலைத்தளங்களில் வன்மம் தவிர்த்து அனைவரிடமும் இணக்கமாக வாழ முயற்சிப்போம்.
Post a Comment