நிதி மோசடி விசாரணை பிரிவு தேவையற்றது, உடனடியாக கலைக்க வேண்டும் - ஹிஸ்புல்லாஹ்
நிதி மோசடி விசாரணை பிரிவு என்பது தேவையற்ற ஒன்றாகும் என்பதுடன் சட்டவிரோதமான அந்நிறுவனம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர்; எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அரசுக்கு வேண்டுகோள்விடுத்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
குறிப்பிட்ட சிலரை இலக்காக கொண்டு இயங்கி வரும் நிதி மோசடி விசாரணை பிரிவு (எவ்.சி.ஐ.டி) சட்டவிரோதமான ஒன்றாகும். நாடாளுமன்றத்தினால் அங்கீகாரம் வழங்கியுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு என்பன நிறுவப்பட்டு செயற்பாட்டில் உள்ளன. இந்நிலையில் எவ்.சி.ஐ.டி என்பது அவசியமற்றதாகும்.
யாரேனும் ஊழல், மோசடி செய்திருப்பாராயின் அதற்கு இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைவாக நீதிமன்றத்தின் மூலம் தண்டனைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். மாறாக ஒரு நிறுவனம் தன்னிச்சையாக குறிப்பிட்ட சிலரை பலிவாங்கும் வகையில் செயலாற்றுவது மிகவும் மோசமான ஒன்றாகும். – எனத்தெரிவித்தார்.
Post a Comment