Header Ads



மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கை, பணிப்பெண் காப்பாற்றப்பட்டது எவ்வாறு..?

(நேர்காணல்: பிறவ்ஸ்)

இன நல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் அப்துல் காதர் மசூர் மெளலானா

கேள்வி: கல்லெறிந்து கொல்லுமாறு தண்டனை வழங்கப்பட்ட இலங்கை பணிப்பெண் யார்? என்ன குற்றம் செய்தார்?

பதில்: தலைநகரைச் சேர்ந்த இப்பெண் திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளன. இவர் 2013ஆம் ஆண்டு சவூதி அரே­பி­யா­வுக்கு பணிப்­பெண்­ணாக சென்றுள்ளார். இவர் அங்கு வேலைசெய்துகொண்டிருக்கும்போது இலங்கையைச் சேர்ந்த ஒரு இளைஞனுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 2014 ஏப்ரல் மாதத்தில் குறித்த பெண் திருமணமாகாத இளைஞனுடன் தகாத உறவு வைத்திருந்தாக எஜமானாரால் குற்றம்சாட்டப்பட்டது. மூதூர் றிஸானா நபீக்கின் எஜமானாரும் இந்தப் பெண்ணின் எஜமானாரும் அல்உதைபி என்ற ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாவர். 

கேள்வி: பணிப்பெண்ணை காப்பாற்றுவதற்கான தொடர்பு உங்களுக்கு எவ்வாறு கிடைத்தது?

பதில்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்புக்கான பிரதி பொது முகாமையாளர் ரந்தனி என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். கல்லெறிந்து மரண தண்டனை வழங்கப்பட்ட அப்பெண்ணை காப்பாற்றுமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். குறித்த தினத்தன்று பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் கடுமையாக விவாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. குறித்த பெண் முஸ்லிம் என்றுகூட எனக்கு தெரியாது. இலங்கையிலிருந்து சென்ற ஒரு பணிப்பெண்ணை காப்பாற்றுவதற்கான வழிமுறைகளை கையாண்டு அப்பெண்ணை விரைவாக விடுதலை செய்வதற்கு உதவுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்.

கேள்வி: அதற்கு நீங்கள் என்ன கூறினீர்கள்?

பதில்: சம்பந்தப்பட்ட பணிப்பெண்ணை தவாத்மி சிறைச்சாலையில் வைத்து கல்லெறிந்து கொல்லுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. மரணதண்டனை நிறைவேற்றப்போவதாக றியாத்திலுள்ள தூதரகம் அறிவித்திருந்த காலத்தில்தான் நாங்கள் இவ்விவகாரத்தை கையில் எடுத்தோம். நாட்டு தலைவரான ஜனாதிபதியின் அனுமதியில்லாமல் இந்த விவகாரத்தை கையாள முடியாது என்றும் முதலில் அவரின் அனுமதியை பெற்றுத்தருமாறும் கேட்டேன். அப்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கொரல என்னுடன் கதைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. அதற்கு நான், இவ்விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்துவிட்டு என்னுடன் பேசுமாறு கூறினேன்.  

கேள்வி: ஜனாதிபதி இதற்கு அனுமதி தந்தாரா?

பதில்: அதன்பின்னர் அமைச்சர் தலதா அத்துக்கொரல ஜனாதிபதியின் மகள் சத்துரிகாவுடன் பேசிவிட்டு ஜனாதிபதிக்கு விடயம் எத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் ஜனாதிபதியின் வீட்டிலிருந்து எனக்க அழைப்பு வந்தது. அதன்பின் நாங்கு ஜனாதிபதியின் வீட்டுக்கு சென்று குறித்த பணிப்பெண் தொடர்பாக ஆராய்ந்தோம். இந்தப் பெண்ணை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென ஜனாதிபதி கவலையுடன் தெரிவித்தார். அப்போது நான் ஜனாதிபதியின் வீட்டில் 6 மணித்தியாலங்களாக இருந்து இந்த பெண்ணை விடுதலைசெய்வதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளை ஜனாதிபதியுடன் இணைந்து மேற்கொண்டேன்.

கேள்வி: அங்கு நீங்கள் எவ்வகையான முயற்சிகளை மேற்கொண்டீர்கள்?

பதில்: ஜனாதிபதியின் வீட்டிலிருந்து சவூதி மன்னரின் மகனுடன் தொடர்புகொண்டு அவர்மூலம், மன்னர் சல்மானுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசினார். இலங்கை - சவூதி அரேபிய உறவுகள் குறித்து பேசிக்கொண்டு பணிப்பெண்ணின் மரணதண்டனை குறித்த விடயங்களையும் முன்வைத்தோம். தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுடன் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடுமாறு மன்னர் சல்மான் எங்களுக்கு பணிப்புரை விடுத்தார். அன்றையதினம் வெள்ளிக்கிழமை (விடுமுறைதினம்) என்பதால் பல பிரயத்தனங்களுக்கு மத்தியிலேயே எங்களுக்கு சவூதி மன்னருடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

கேள்வி: நீதிபதிகளுடன் பேசினீர்களா? அது வெற்றியளித்ததா?

பதில்: இப்பெண்ணுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள தவாத்மி சிறைச்சாலையில் வைத்துத்தான் றிஸானா நபீக்குக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. இதனை கருத்திற்கொண்டு அப்பிரதேசத்திலுள்ள நலன்விரும்பிகள் சிலர் அங்குள்ள முக்கிய அதிகாரிகளை அணுகி, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுடன் கலந்தாலோசிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தனர்.  அப்போது சவூதி அரேபிய தூதுவர் அஸ்மி தாஸிமின் அறிவுறுத்தலுக்கமைய தவாத்மி சிறைச்சாலையிலுள்ள நீதிமன்ற தீர்ப்புக்குழுவின் தலைவருடன் கலந்துரையாடினோம். சம்பந்தப்பட்ட பெண் 4 தடவைகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதினாலேயே கல்லெறிந்து கொல்வதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறினார்கள். நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யவேண்டும். ஆனால், பல மாதங்கள் கடந்தபின்னர்தான் நாங்கள் மேன்முறையீடு செய்திருந்தோம். இருப்பினும் எங்களது மேன்முறையீடு நிராகரிக்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மேன்முறையீட்டுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் 10,000 றியால்கள் ஒரு மணித்தியாலத்துக்குள் வழங்கப்பட்டு வழக்கறிஞருக்கு வழங்கப்பட்டது.

கேள்வி: இதற்காக நீங்கள் சவூதி செல்லவில்லையா?

பதில்: ஜனாதிபதியுடன் பேசிவிட்டு மூன்றாவது நாள் அவசரமாக நான் சவூதிக்கு சென்றேன். அங்கு அரச குடும்பத்திலுள்ள முக்கியஸ்தர்களை சந்தித்து இதுதொடர்பாக கலந்துரையாடினேன். அத்துடன் பெண்ணை விடுவிப்பது தொடர்பாக சவூதி அரேபிய தூதுவர் அஸ்மி தாஸிமிடமும் கலந்துரையாடினேன்.

கேள்வி: இவ்விடயம் தொடர்பாக பிரதமர் என்ன நிலைப்பாட்டில் இருந்தார்?

பதில்: ஜனாதிபதியுடன் பேசி மறுநாள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னுடன் தொடர்புகொண்டு பணிப்பெண்ணை எப்படியாவது மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்தார்.

கேள்வி: பிரதமரின் கோரிக்கைக்கு என்ன பதிலளித்தீர்கள்?

பதில்: றிஸானா நபீக் விவகாரத்தைல் பல்வேறு தரப்புகள் கையில் எடுத்துக்கொண்ட காரணத்தினால் நாம் அதில் தோல்விகண்டோம். எனவே, இந்த விடயத்தில் நான் தன்னிச்சையாக செயற்படுவதற்கு அனுமதியளிக்குமாறு கேட்டேன். அதற்கு அவர் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் தந்தார்.

கேள்வி: வேறு அமைச்சர்கள் யாராவது இவ்விடயம் தொடர்பாக பேசினார்களா?

பதில்: வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர என்னுடன் பேசினார். இவ்விடயத்தில் நான் சுயாதீனமாக செயற்படுவதற்கான அனுமதியை அவரும் வழங்கினார்.  சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கா மற்றும் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நிஹால் ரணசிங்கவுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி கலந்துரையாடினோம். அங்கிருந்து சம்பந்தப்பட்ட பலருடன் கதைத்தோம். அதன்பின்னர் எனது முயற்சியின் பலனாக அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர், சவூதி அரேபிய தூதுவரிடம் பெண்ணுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமென நம்பிக்கை தெரிவித்தார்.

கேள்வி: இறுதியாக பணிப்பெண்ணுக்கு என்ன தீர்ப்பு கிடைத்தது?

பதில்: ஏற்கனவே வழங்கப்பட்ட கல்லெறிந்து கொல்லும் தண்டனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரத்துச் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். 3 வருடங்களில் அதனை கழித்துவிட்டு மிகுதி ஒன்றரை வருடங்கள் அவர் சிறையில் இருக்கும் வகையில் தண்டனையை எளிதுபடுத்திக் கொடுப்பதற்கு உதவிசெய்தோம்.

கேள்வி: ஒரே குற்றத்தில் ஈடுபட்ட ஆணுக்கு ஒரு தண்டனையும் பெண்ணுக்கு வேறு தண்டனையும் வழங்கப்பட்டது ஏன்?

பதில்: திருமணம் செய்த ஆணோ பெண்ணோ இன்னொருவருடன் தகாத உறவில் ஈடுபட்டால் அவர்களது கணவனோ அல்லது மனைவியோ கடுமையாக ஆத்திரம்கொள்வார்கள். அவர்களது கையில் ஆயுதம் இருந்தால், அவர்களின் துரோகத்துக்காக கொலை செய்துவிடுவார்கள். இந்நிலையில், திருமணம் முடித்தவர்கள் தகாத உறவில் ஈடுபட்டால் மரண தண்டனையும், திருமணமாகாமல் இச்சையை அடக்கமுடியாமல் ஈடுபட்ட காரணத்தினால் 100 கசையடியும் வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் திருமணமாகி 2 பிள்ளைகளுக்கு தாயாக இருக்கின்ற நிலையில், தனக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று தெரிந்திருந்தும் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அவருக்கு கல்லெறிந்து கொல்வதற்கான மரண தண்டனை வழங்கப்பட்டள்ளது. இவருடன் சம்பந்தப்பட்ட இளைஞர் திருமணமாகாதவர். ஆதலால், அவருக்கு 100 கசையடி வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி: மரண தண்டனையை ரத்துச்செய்து சிறைத்தண்டனை பெற்றுக்கொடுத்துள்ளதை, குற்றவாளியை காப்பாற்றியுள்ளதாக எடுத்துக்கொள்ளலாமா?

பதில்: நிச்சயமாக இல்லை. மனிதன் என்பவன் தவறு செய்யக்கூடியவன். தவறு செய்யாத மனிதர்கள் யாருமில்லை. இருப்பினும் மனிதாபிமான உதவிகமை மட்டுமே நாங்கள் செய்துள்ளோம். அவர் செய்த குற்றத்துக்கு அவர்தான் பிராயச்சித்தம் தேடவேண்டும்.

கேள்வி: இவரைக் காப்பாற்றிய உங்களால் ஏன் றிசானா நபீக்கை காப்பாற்ற முடியாமல் போனது?

பதில்: றிசானா நபீக் விடயத்தில் நான் தீவிரமாக ஈடுபட்டது எல்லோருக்கும் தெரியும். இந்த வழக்கில் சவூதி அரசாங்கத்தினாலும், மரணித்த குழந்தையின் பெற்றோரினதும் மன்னிப்பு தேவைப்பட்டது. எங்களது முழு முயற்சியின் பலனாக அரச குடும்பத்திலிருந்து மன்னிப்புக்கான சைகை கிடைத்தது. ஆனால், பெற்றோர்களின் மன்னிப்பை பெறும் விடயத்தில் பலர் தலையீடு செய்த காரணத்தினாலும், அசட்டைத்தனத்தினாலும் அது சாத்தியமில்லாமல் போனது. இதன்போது ஒவ்வொரு தரப்பினரும் றிசானா நபீக் விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டதால் இரு தோணியில் கால்வைத்த கதைபோன்ற நிலைதான் ஏற்பட்டது. இதனால் அம்முயற்சி தோல்வியிலேயே முடிவடைந்தது.

கேள்வி: றிசானா நபீக் விவகாரம் போன்று இப்பெண்ணின் பிரச்சினைகள் பெரிதாக எடுபடவில்லையே?

குடும்பத்தின் வறுமை காரணமாகத்தான் இப்பெண்மணி வெளிநாடு சென்றுள்ளார். அவருக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றனர். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி நாங்கள் இந்த விவகாரத்தை ஊடங்கள் வாயிலாக பெரிதுபடுத்தவில்லை. இது அந்தரங்கம் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் அவருடைய சுயவிபரங்களை பகிர்ந்துகொள்வதையும் தவிர்த்துக்கொண்டோம்.

கேள்வி: இலங்கை - சவூதி அரேபிய உறவில் உங்களது வகிபாகம் என்ன?

பதில்: இலங்கை எனது தாய்நாடு. நான் சவூதியில் திருமணம் முடித்திருப்பதால் அந்த நாட்டின் பிரஜையாக இருக்கிறேன். இதனால் இரு நாடுகளையும் என்னுடைய இரண்டு கண்களைப் போலவே பார்க்கிறேன். இலங்கை - சவூதி இராஜதந்திர உறவை மேம்படுத்துவதில் என்னாலான அனைத்து விடயங்களையும் அன்றுதொடக்கம் இன்றுவரை செய்துவருகிறேன். நாட்டுக்கான கடமை ஒருபுறம் இருக்கிறது. மற்றது இஸ்லாமிய மார்க்க ரீதியான கடமை ஒருபக்கமும் இருக்கிறது. ஹஜ், உம்ரா போன்ற விடயங்களை நிறைவேற்றவதற்காக சவூதி செல்வதால் இலங்கையுடன் மிகவும் நெருக்கமானதொரு உறவு பேணப்பட்டு வருகிறது. சவூதி அரேபியா தீவிரவாதத்தை பரப்புவதாக மாற்று மதத்தினர் மத்தியில் தப்பப்பிராயம் நிலவுகிறது. இதுகுறித்து முடியுமானளவு நான் தெளிவுபடுத்திவருகிறேன். சவூதி ஒருநாளும் தீவிரவாதத்தை ஆதரிக்கப்போவதில்லை. சவூதியில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. அதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக அந்நாட்டு அரசாங்கம் தீவிரவாதத்துக்க எதிராக போராடி வருகிறது என்பதை மாற்றுமதத்தவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

No comments

Powered by Blogger.