ஈரான் + ரஷ்யா உதவியோடு சிரியா முன்னேறுகிறது - துருக்கிக்கு அச்சுறுத்தல் - தையிப் எர்துகான்
ஈரான் மற்றும் ரஷ்யாவின் உதவியோடு சிரிய அரச படை மேற்கொண்டுவரும் பாரிய தாக்குதல்கள் மூலம் அந்தப் படைய துருக்கியின் எல்லையை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு எதிராக கடந்த ஐந்து ஆண்டுகளாக நீடிக்கும் போராட்டம் பெரும் கேள்விக்குறியாக இருப்பதாக கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தரை வழியாக ஈரான் ஆதரவு ஷியா ஆயுததாரிகள் மற்றும் வான் வழியாக ரஷ்ய போர் விமானங்களும் தீர்க்கமான பங்காற்றும் நிலையில் அரச படை மூலோபாயம் கொண்ட வட பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறை முன்னேற்றம் காண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
“மேலும் நிலங்களை இழப்பது மாத்திரமன்றி, எமது முழுமையான இருப்பும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது” என்று லிவா அல் தவ்ஹீத் அரச எதிர்ப்பு கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் அல் நஜ்தாவி குறிப்பிட்டுள்ளார். “உக்கிரமான வான் தாக்குதல்கள் காரணமாக எமது இழப்பை குறைக்க பின்வாங்கி வருவதோடு அவர்கள் முன்னேறி வருகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் ஆதரவுடன் சிரிய இராணுவம் அண்மைய ஒருசில தினங்களில் மேற்கொண்டு வரும் பாரிய இராணுவ நடவடிக்கை அந்நாட்டு உள்நாட்டு யுத்தத்தில் பெரும் திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது. இதன்போது இரண்டு ஆண்டுகளின் பின் ஜெனீவாவில் ஆரம்பிக்கபட்ட அமைதிப் பேச்சுவார்த்தையும் கடந்த வாரம் நிறுத்தப்பட்டது.
கடந்த திங்கட்கிழமையாகும்போது சிரிய இராணுவம் மற்றும் அதன் ஆதரவு போராளிகள் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு தால் ரபாத் நகரில் சுமார் ஐந்து கிலோமீற்றர் வரை முன்னேறியுள்ளது. இதன்மூலம் துருக்கி எல்லையை 25 கிலோமீற்றர் வரை நெருங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டகளில் சிரிய படை துருக்கி எல்லையை அதிகம் நெருங்கி இருப்பது இது முதல்முறையாகும்.
சிரியாவின் மிகப்பெரிய நகரான அலப்போ மீதான இந்த தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் கோரி துருக்கி எல்லையை நோக்கி படையெடுத்துள்ளனர். ஏற்கனவே துருக்கியில் 2.5 மில்லியன் சிரியர்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர்.
கடந்த இரு தினங்களாக ரஷ்யாவின் போர் விமானங்கள் வடமேற்கு அலப்போ, அனதான் மற்றும் ஹரிதான் நகரங்களில் கடுமையாக குண்டுகளை போட்டதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிரிய உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கும் முன்னர் அலப்போ நகரில் 2 மில்லியன் மக்கள் வாழ்ந்தனர். தற்போது இந்த நகர் அரச மற்றும் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதிகள் என இரண்டாக பிரிந்துள்ளது. இந்த நகரை முழுமையாக கைப்பற்ற அரச படை முயற்சிக்கிறது. இந்த நகரில் வெல்லும் பட்சத்தில் 250,000க்கும் அதிகமான மக்களை பலிகொண்டு 11 மில்லியன் மக்களை வீடிழக்கச் செய்த சிரிய உள்நாட்டு யுத்தத்தில் பெரும் முன்னேற்றத்தை காணமுடியும் என்று அஸாத் அரசு நம்புகிறது.
எனினும் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு அலப்போ நகரில் தற்போதும் 350,000 பேர் வரை வசிப்பதாக குறிப்பிட்டிருக்கும் தொண்டு பணியாளர்கள் இவர்கள் விரையில் அரசின் பிடியில் சிக்கும் நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம் துருக்கி அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்திருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி தையிப் எர்துகான் வார இறுதியில் குறிப்பிட்டிருந்ததோடு துருக்கி தொடர்ந்து அகதிகளுக்கு தனது எல்லையை மூடியே வைத்துள்ளது.
தற்போது துருக்கி எல்லையின் சிரியா பக்கமாக சுமார் 77,000 அகதிகள் தங்கி இருப்பதாக துருக்கி துணைப் பிரதமர் நுமான் குர்துல்மூஸ் திங்களன்று குறிப்பிட்டிருந்தார். இந்த மோசமான நிலை நீடித்தால் துருக்கி எல்லைக்கு 600,000 பேர் வரை திரளும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
சிரிய படையின் வேகமான முன்னேற்றம் அலப்போவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டுப் பகுதியில் துருக்கியுடனான ஒரே விநியோகப்பாதையை துண்டிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
ரஷ்யாவின் வான் தாக்குதலுக்கு பயந்தே பெரும்பாலான மக்கள் துருக்கி எல்லைக்கு படையெடுத்து வருவதாக துருக்கி செம்பிறை சங்க தலைவர் கெரம் கினிக் குறிப்பிட்டுள்ளார். அலப்போ நகருக்கான வீதி தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் நிலையில் முற்றுகையில் இருக்கும் கவுதா மற்றும் மதாயா நகரின் நிலை அந்த நகரக்கும் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளார்.
அரச படையில் முற்றுகையில் இருக்கு கவுதா மற்றும் மதாயா நகர மக்கள் பட்டினியால் உயிராபத்தான சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.
“அலப்போ வீதி முற்றாக மூடப்பட்டிருக்கிறது. இந்த வீதியூடாகத்தான் சிரியாவுக்கான அனைத்து விநியோகங்களும் சென்றன. வீதி மீண்டும் திறக்கப்படாத பட்சத்தில் நாளுக்கு நாள் அலப்போ வீழ்வதை பார்க்கலாம். மதாயா மற்றும் கவுதா போன்று பாரிய மனிதாபிமான அவலத்தையும் ஏற்படுத்தும்” என்று எச்சரித்தார்.
Post a Comment