உலகிலேயே மிகவும் பரபரப்பான, விமான நிலையமாக துபாய் ஏர்போர்ட்
உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையமாக துபாய் ஏர்போர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கண்டங்களுக்கும் விமான போக்குவரத்து பாதைகளின் மையமாக இருக்கும் துபாய் சர்வதேச விமான நிலையம் 100-க்கும் மேற்பட்ட ஏர்லைன்ஸ் மூலம் சர்வதேச அளவில் 240 இடங்களுக்கு வான் போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு 70.4 மில்லியன் சர்வதேச பயணிகள் துபாய் விமான நிலையம் வழியாக வந்து சென்றுள்ளனர். இதையடுத்து, பிரிட்டனின் ஹீத்ரோ ஏர்போர்ட்டை விட அதிகமான பயணிகளை கையாண்டு முன்னிலை வகித்தது துபாய் விமான நிலையம். இந்நிலையில், 2015-ம் ஆண்டில் 10.7 சதவீதம் அதிகரித்து 7.8 கோடி பயணிகளை கையாண்டு உலகிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது.
குறிப்பாக, துபாய் விமான நிலையத்திற்கு 10.4 மில்லியன் இந்தியர்கள் வருகை தந்திருக்கிறார்கள். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 17 சதவீதம் அதிகமாகும். பிரிட்டன் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
துபாயில் இரண்டாவதாக அல்-மாக்தௌம் சர்வதேச விமான நிலையம் கடந்த 2013-ல் திறக்கப்பட்டது. இந்த விமான நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் ஒரு ஆண்டுக்கு 12 கோடி பயணிகளை கையாளும் அளவுக்கு திறன் வாய்ந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment