மொபைலில் மாணவியர், பேசினால் அபராதம்
பள்ளி மாணவியர், மொபைல் போன் பயன்படுத்த, குஜராத் மாநில கிராமம் ஒன்றில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில், முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்துக்குட்பட்ட மெக்சானா மாவட்டம், சூரஜ் கிராமத்தில், பள்ளி மாணவியர், மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் மட்டுமே, பெற்றோரின் மொபைல் போனில் பேசலாம் என்றும், வீட்டுக்கு வெளியில், மொபைல் போனில் பேசும், 18 வயதுக்குட்பட்ட மாணவியருக்கு, 2,100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், பஞ்சாயத்து அறிவித்துள்ளது.
இது குறித்து, அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் தேவ்ஷி வன்கர் கூறியதாவது: மொபைல் போனால் மாணவ, மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுகிறது. மொபைல் போனில் விளையாடுவதில் காட்டும் ஆர்வத்தை, அவர்கள், படிப்பில் காட்டுவதில்லை. அத்துடன், மாணவர்கள், மொபைல் போன் மூலம், மாணவியரை காதல் வலையில் விழ வைத்து, அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதாக, பெற்றோர் புகார் கூறுகின்றனர்.
சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில், 18 வயதுக்கு உட்பட்ட மாணவியர், மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமென, ஒட்டு மொத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையேற்று தான், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லுாரிகளில் படிக்கும் மாணவியருக்கு, வாழ்க்கையில் கஷ்ட, நஷ்டங்கள் தெரியும். அதனால், அவர்கள், மொபைல் போனில் பேச தடை விதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment