Header Ads



ஆசியாவில் பிரகாசிக்கும் இலங்கை – நியூசிலாந்து பிரதமர் பெருமிதம்


இலங்கை ஆசியப் பிராந்தியத்தில் பிரகாசிக்கும் ஒளி என நியூசிலாந்து பிரதமர் ஜோன் பிலிப் கீ இலங்கையை வர்ணித்துள்ளார். நியூசிலாந்து தொழில் முயற்சியாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இலங்கையில் மிகப்பெரும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுடன் மேற்கொண்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தான் பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 2013ல் இலங்கைக்கு விஜயம் செய்ததாகவும் தற்போதைய விஜயத்தின்பேது நாட்டில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை தான் தனிப்பட்ட முறையில் அவதானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

குறுகிய காலப் பகுதியில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களைப் பாராட்டிய நியூசிலாந்து பிரதமர், நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களை வெற்றிகொள்ள வாழ்த்தியதோடு, அத்தகைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கையின் தலைமைத்துவத்திற்கு முடியுமென்றும் நம்பிக்கை வெளியிட்டார். ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கும் ஊழலை ஒழித்துக்கட்டுவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அவர் விசேடமாக குறிப்பிட்டார்.

விவசாய தேசங்களான நியூசிலாந்தும் இலங்கையும் அத்துறையில் கூட்டுறவை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றும் பிரதமர் கீ தெரிவித்தார். இலங்கையில் பாற்பண்னைத்துறைக்கு உதவ தனது அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் இலங்கையில் பாற்பண்னை உற்பத்தி நிறுவனம் ஒன்றை அமைத்து அதன்மூலம் இலங்கை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப அறிவை வழங்க முடியுமென்றும் தெரிவித்தார். இலங்கை விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு நாங்கள் உதவ விரும்புகின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  

நியூசிலாந்துக்கு இரண்டாவதாகவும் யாணைக்குட்டி ஒன்றினை அன்பளிப்புச் செய்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த பிரதமர் கீ, இலங்கையினால் முதலாவதாக அன்பளிப்பு செய்யப்பட்ட யானைக் குட்டி தற்போது 700 கிலோ நிறையை உடையதாக இருப்பதாகவும் உயிவியல் பூங்காவிற்கு வருகை தரும் பிள்ளைகளை அது பெரிதும் கவர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

நியூசிலாந்து பிரதமர் கீ அவர்களின் பிரதிநிதிகள் குழுவில் பல முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் வர்த்தக தூதுக்குழுவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.