Header Ads



துருக்கி - ரஷ்யா போர் வெடிக்குமா..? பிரான்ஸ் எச்சரிக்கை

சிரியாவில் துருக்கி மேற்கொண்டு வரும் எறிகுண்டுத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும்படி, ரஷியா முன்வைத்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிராகரித்தது.
 இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
 சிரியாவில் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, 17 நாடுகள் அடங்கிய "சிரியா ஆதரவுக் குழு' ஜெர்மனியின் மியூனிக் நகரில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தியது. 
 அதில், "இன்னும் ஒரு வாரத்துக்குள் சிரியா முழுவதும் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்' என்று உடன்பாடு எட்டப்பட்டது. எனினும், போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கான கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையிலும், சிரியாவில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
 சிரியாவைச் சேர்ந்த குர்துப் படையினர், அமெரிக்க வான்வழித் தாக்குதலின் உதவியுடன், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரை வெள்ளிக்கிழமை கைப்பற்றினர்.
 இந்த நிலையில், சிரியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள குர்துப் படையினரின் நிலைகள் மீது, எல்லைக்கு அப்பாலிருந்து துருக்கி ராணுவம் எறிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.
 துருக்கியின் குர்து கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதால், சிரியாவிலுள்ள குர்துப் படையினர் மீது துருக்கி ராணுவம் எறிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்துவதாகக் கூறப்படுகிறது.
 இந்த நிலையில், சிரியாவில் துருக்கி மேற்கொண்டு வரும் எறிகுண்டுத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தக் கோரும் வரைவுத் தீர்மானத்தை, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அவசரக் கூட்டத்தில் ரஷியா முன்வைத்தது.
 எனினும், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நிரந்தர உறுப்பினர்கள் உள்பட 6 ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்கள் அந்த வரைவுத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க மறுத்ததால், அது நிராகரிக்கப்பட்டது.
 இதற்கிடையே, சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை, திட்டமிட்டமிட்டபடி வரும் வியாழக்கிழமை தொடங்காது என சிரியா விவகாரத்துக்கான ஐ.நா. அமைதித் தூதர் ஸ்டெஃபான் டி மிஸ்டுரா தெரிவித்தார்.
திசை திருப்பும் வேலை
 சிரியா அதிபர் அல்-அஸாதுக்கு ஆதரவாக தாங்கள் நடத்திவரும் வான்வழித் தாக்குதல்களிலிருந்து உலகின் கவனத்தை திசை திருப்பும் வகையில், துருக்கிக்கு எதிரான வரைவுத் தீர்மானத்தை ரஷியா முன்வைத்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிப்பதானால், முதலில் ரஷியா தனது வான்வழித் தாக்குதலை நிறுத்த வேண்டும்.
 - சமந்தா பவர்
ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர்
 பயங்கரத்தை நோக்கி..
 அல்-அஸாதுக்கு ரஷியா அளித்து வரும் நிபந்தனையற்ற ஆதரவு, சிரியா விவகாரத்தை ஆபத்தான கட்டத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. ரஷிய நடவடிக்கையால் நிலைமை நம் கைகளை மீறிப் போய், இதுவரை சந்தித்திராத பிரச்னைகளை நாம் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.
 - பிரான்சுவா டெலாட்ரி
 ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதர்
சிரியாவிலிருந்து அச்சுறுத்தல்
 சிரியாவிலிருக்கும் குர்துப் படையினரால் துருக்கியின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள அவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்துவது அவசியமாகிறது.
 - யாசர் ஹாலித் செவிக்
 ஐ.நா.வுக்கான துருக்கி தூதர்
 ரஷியா-துருக்கி இடையே போர்: பிரான்ஸ் எச்சரிக்கை
 பாரீஸ், பிப். 20: சிரியா விவகாரத்தில் துருக்கி தனது ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருப்பது துருக்கி - ரஷியா இடையிலான போரை உருவாக்கக் கூடும் என பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் எச்சரித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் கூறியதாவது:
 சிரியா விவகாரத்தில் துருக்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதில், போர் மூள்வதற்கான ஆபத்துகள் ஏராளமாக இருக்கின்றன. அத்தகைய ஆபத்து இருப்பதால்தான் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அவசரமாகக் கூடுகிறது.
 அல்-அஸாதுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதன் மூலம், ரஷியாவால் சிரியா விவகாரத்தை சமாளிக்க முடியாது. அமைதி முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு சிரியா அரசை நிர்பந்திக்க, ரஷியாவுக்கு அழுத்தம் கொடுப்போம் என்றார் அவர்.

No comments

Powered by Blogger.