பிராந்திய ரீதியாக ஊழல் விசாரணை, கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் - அப்துர் ரஹ்மான்
'ஊழல் மோசடிகளிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் விசேட கட்டமைப்புக்களை கண்டு சிலர் இப்போது பயப்படத் தொடங்கியிருக்கிறார்கள். வீடொன்றில் இருக்கும் பெறுமதியான பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு வளர்க்கப்படும் காவல் நாய்களைக் கண்டு பயப்படுபவர்கள் கள்வர்களாகவே இருக்க முடியும்.' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஊழல் மோசடிகளை விசாரணை செய்து நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக இந்த அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டிருக்கும் FCID விசாரணைப்பிரிவினை அகற்ற வேண்டும் என மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்படும் குழுவினர் அழுத்தம் கொடுத்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் கூட இந்த விசாரணைக்குழு அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை அண்மையில் பகிரங்கமாகவே விடுத்திருந்தார். இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது ..
'இந்த நாட்டை ஆக்ரமித்திருந்த உள்ளூர் ஆக்ரமிப்பாளர்களிடமிருந்து நமது உயிரையும் பணயம் வைத்து இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம். இந்த ஆட்சி மாற்றத்தினை பல்வேறு காரணிகள் அவசியப்படுத்தின. கட்டுக்கடங்காமல் இந்த நாட்டில் தலைவிரித்தாடிய ஊழல் மோசடி அதில் ஒரு பிரதான காரணமாகும். சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் வெளிநாட்டு ஆக்ரமிப்பாளர்களால் இந்த நாட்டின் வளங்களும், சொத்துக்களும் எந்தளவு தூரம் சூறையாடப்பட்டதோ அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் உள்ளூர் ஆக்ரமிப்பாளர்களினால் இந்த நாட்டின் வளங்கள் சுதந்திரத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் சூறையாடப்பட்டிருக்கிறது.
எனவேதான், இந்த நாடு ஒரு உண்மையான நல்லாட்சியை நோக்கி நகர வேண்டுமாக இருந்தால் ஊழல் மோசடிகள் நிறுத்தப்படுவதும் கடந்த காலங்களில் சூறையாடப்பட்ட பொதுச் சொத்துக்கள் மீட்கப்படுவதும் கண்டிப்பாக அவசியப்படுகின்றன.
இதனால்தான் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் உருவான புதிய அரசாங்கம் ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தியது.
அதில் ஒன்றுதான் FCID எனப்படும் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவாகும். கடந்த ஒரு வருட காலமாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த இந்தப் பரிவு இப்போது நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. இதனைக் கண்டு சிலர் இப்போது நடுங்கத் தொடங்கியிருக்கிறார்கள். காத்தான்குடியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அரசியல் வாதியும் FCID அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இங்கு ஒரு உதாரணத்தைச் சொல்லியாக வேண்டும். 'பெறுமதியான பொருட்களைப் பாதுகாப்பதற்காக வீட்டில் காவல் நாயை நாம் நிறுத்தி வைக்கும் போது அதனைக்கண்டு பயப்படுபவர்கள் யார்..? கள்வர்களே பயப்படுவார்கள். அந்த வீட்டிற்கு சாதாரணமாக வந்து போகின்ற ஏனையவர்களுக்கு அது ஒரு பிரச்சினையாக இருக்காது.
எம்மைப் பொறுத்தவரை இந்நாட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகளுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால் இப்போதிருக்கின்ற கட்டமைப்பு போதாதென்று நாம் சொல்கின்றோம்.
ஏனெனில் இந்நாடு கிராமம் கிராமமாக பிரதேசம் பிரதேசமாக சூறையாடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இதனை கையாளுவதற்கு கொழும்பில் இருக்கின்ற ஆணைக்குழுக்கள் மாத்திரம் போதாது எனக் கருதுகின்றோம். எனவேதான் பிராந்திய ரீதியாக ஊழல் விசாரணை கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிடம் தேர்தலுக்கு முன்னரே நாம் கோரிக்கை விடுத்திருந்தோம்.
எமது தேசிய உணர்வின் காரணமாகவும், தேசத்தின் நலன்கள் மீது எமக்கிருக்கும் அக்கறை காரணமாகவுமே, ஊழல் மோசடிகளுக்கெதிரான போதுமான கட்டமைப்புகள் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம். ஆனால் தேசத்தின் வளங்களை கொண்ளையடிக்கும் திருடர்கள், இருக்கின்ற கட்டமைப்புக்களையம் இல்லாமல் செய்ய முயற்சிக்கிறார்கள்."
Not regional level. It must be setup in district levels
ReplyDelete