Header Ads



"மாட்டிறைச்சி தடை" முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கிறது" - அமெரிக்க எம்.பி.க்கள்

இந்தியாவில் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் 34 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், செய்தியாளர்கள் மத்தியில் அந்தக் கடிதம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் ஆகிய மதச் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் கவலையளிக்கின்றன. மதச் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, உங்களது (மோடி) அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவோரை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.

ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும்படி பாதுகாப்புப் படைகளுக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்திலுள்ள 50 கிராமப் பஞ்சாயத்துகள், ஹிந்து அல்லாத மதங்களின் பிரசாரம், வழிபாடு உள்ளிட்டவற்றை தங்களது கிராமங்களில் தடை செய்யும் தீர்மானத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவேற்றின. அந்தத் தீர்மானத்துக்கு பின்னர், பஸ்தர் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைகளும், அடக்குமுறைகளும் அதிகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. கிறிஸ்தவ குடும்பங்களுக்கு உணவு, குடிநீர் மறுக்கப்படுவதுடன், அவர்கள் ஹிந்துக்களாக மாற வற்புறுத்தப்படுகின்றனர்.

அதேபோல், மாட்டிறைச்சி மீதான தடை நடவடிக்கையானது, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிப்பதாக இருக்கிறது. மேலும், கல்வி, வேலைவாய்ப்புகளில் சீக்கியர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும் கவலையளிக்கின்றன என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.