Header Ads



"முஸ்லிம்களுக்கு எவ்வித பிரச்சினையும், இல்லை என்பது போல.."

-மொஹமட் பாதுஷா-

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், இளவரசர் அல் ஹுஸைனின் அண்மைய விஜயம், முஸ்லிம்களின் நிகழ்கால அரசியல் மற்றும் சமூக வாழ்வில் எவ்வித தடயத்தையும் ஏற்படுத்தாது போயிருக்கின்றது. இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அவர், ஒரு நாற்பது நிமிடமாவது முஸ்லிம் பிரதிநிதிகளுக்காக நேரத்தை ஒதுக்காதது அல்லது அதற்கான சந்தர்ப்பத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் பெற்றுக் கொள்ளாதது, மக்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஹுஸைன், முஸ்லிம் மக்களை கண்டு கொள்ளாது விட்டாரா? அன்றேல், முஸ்லிம் தரப்பு அவரது வருகையை அலட்டிக் கொள்ளவில்லையா? என்ற குழப்ப நிலை இருந்தாலும், முஸ்லிம்களினதும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளினதும் வழக்கமான பொடுபோக்குதனமே, ஹுஸைன் முஸ்லிம்களை சந்திக்காமைக்கான காரணத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை. 'இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவர்கள் எல்லோரும் இன்றைய காலத்தில் மனக்குறைகள் இன்றி சுகமாக வாழ்கின்றனர்' என்ற தோற்றப்பாட்டை, சர்வதேசம் ஏற்படுத்த இதுவே போதுமானது. ஆனால், முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை வெளிக் கொணரும் விடயத்தில் பொறுப்பற்றவர்களாகவும் லாயக்கற்றவர்களாகவும் அவர்களுடைய அரசியல் தலைமைகள் இருக்கின்றார்கள் என்பதை, ஒரு கைதேர்ந்த இராஜதந்திரி என்ற அடிப்படையில் ஹுஸைன் விளங்கிக் கொள்ளாதிருக்க மாட்டார். ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர்களின் இலங்கை விஜயம் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அளவில் முக்கியத்துவமானதாகும். 

யுத்தத்துக்குப் பின்னரான நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மீள்குடியேற்ற நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க இலங்கை வருகின்றார் என்றால் அது எந்தளவுக்கு முக்கியமானது என்பது புத்தியுள்ளோருக்கு பட்டென புரியும்;. தமிழர் தரப்பு அந்த முக்கியத்துவத்தை எப்போதும் போல மிக சரியாகவும் உச்சமாகவும் விளங்கிச் செயற்பட்டது. வெளிநாட்டுப் பிரதிநிதிகள் யார் வந்தாலும், அவரை முறையாக சந்தித்து தம்முடைய மக்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தியமைதான் தமிழ் அரசியல்வாதிகளின் பலமாகும். அதன் காரணமாகவே, 'தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்தேயாக வேண்டும்' என்ற நிலைப்பாட்டில் சர்வதேசம் இன்று உறுதியாக இருக்கின்றது. எனவே, ஹுஸைனின் வருகைக்கு முன்னதாகவே, அவரை எதிர்கொள்வதற்கான திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய சிவில் அமைப்புக்களும் மேற்கொண்டிருந்தன. ஆனால், முஸ்லிம்கள் கடைசிக் கட்டம் வரைக்கும் வாழாவிருந்தனர்; என்றே சொல்ல வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை ஒரு சர்வதேச அமையம் என்பதாலும் ஹுஸைன் அரபு தேசத்தை சேர்ந்தவர் என்பதாலும் தம்மை அவர் தேடிவந்து சந்திப்பார் என்று முஸ்லிம்கள் நினைத்திருந்தது போல்தான் தெரிகின்றது. கடைசி நேரத்தில் தாம் எடுக்கும் தீர்மானங்கள் போல, ஐ.நா.விடமும் நேரமொதுக்கி கேட்கலாம் என்று முஸ்லிம் தலைவர்களும் அமைச்சர்களும் நினைத்திருப்பார்களோ தெரியாது. இவற்றுக்கெல்லாம் மேலாக, வெளிநாட்டில் இருந்து வருகின்ற இராஜதந்திரிக்கு மக்களின் பிரச்சினைகளைக் கூறப்போய், அதனால் அரசாங்கத்துடனான தேனிலவை குழப்பத் தேவையில்லை என்றே அநேகமான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நினைத்திருப்பார்கள். இதனால் இன்னுமொரு சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளது. இலங்கை வந்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஹுஸைன், ஜனாதிபதி, பிரதமர், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, பாதுகாப்பு தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றை சந்தித்தார். நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கும் சென்றிருந்தார். ஆயினும், இலங்கையில் உள்ள எந்த முஸ்லிம் கட்சியின் தலைவரையோ அன்றேல் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரையோ உத்தியோகபூர்மாக சந்திக்கவில்லை. இவ்வாறிருக்கையில், திருகோணமலையில் கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்த பிற்பாடு, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் சார்பில் சில கோரிக்கைகள் அவரிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. வட மாகாண முதலமைச்சரை சந்தித்த வேளையில், முஸ்லிம்களின் பிரச்சினைகள் உள்ளடங்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதுடன், நல்லூர் கோவில் வாசலில் குழுமியிருந்த முஸ்லிம் பொதுமக்களும் கிட்டத்தட்ட ஹுஸைனை வழிமறித்து மனுக்களை கையளித்துள்ளனர். கொழும்பில் வைத்து அளுத்கம கலவரம் தொடர்பாக ஒரு சிவில் சமூக பிரதிநிதி சில நிமிடங்கள் உயர்ஸ்தானிகருடன் உரையாடி இருக்கின்றார். 

இதற்கு புறம்பாக, திட்டமிட்ட அடிப்படையில் முறையான சந்திப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை. இது பற்றி கேட்டால், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரான இளவரசர் ஹுஸைனின் நிகழ்ச்சி நிரலில் முஸ்லிம் தரப்பினரை சந்திக்கும் விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதேவேளை, அவரை சந்திப்பதற்கான அவகாசமும் தமக்கு வழங்கப்படவில்லை என்று முஸ்லிம் தரப்பு கூறுகின்றது. அல் ஹுஸைனின் விஜயம் நீண்டகாலத்துக்கு முன்னர் திட்டமிடப்பட்டது. இரவோடிரவாக தீர்மானம் மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒன்றும் முஸ்லிம் கட்சிகளல்ல. அதற்கென்று வரண்முறைகள், நெறிமுறைகள் இருக்கின்றன. எனவே, அதன் பிரகாரம் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரல் ஒரு மாதத்துக்;கு முன்னரே தயாரிக்கப்பட்டு, இறுதிசெய்யப்பட்டு விட்டது. இலங்கை வெளிவிவகார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை கொழும்பிலுள்ள  ஐ.நா. அலுவலகம் மேலொப்பம் இட்டுள்ளது. இவ்வாறான நிலையில், ஹுஸைன் இலங்கைக்கு வந்திறங்குவதற்கு 10-11 நாட்களுக்கு முன்னரே, அவரை சந்திப்பதற்கு நேரமொதுக்கி தருமாறு முஸ்லிம்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, முன்னமே நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு விட்டதாலும் அதில் மாற்றம் செய்ய முடியாமையாலும், அதற்கான அவகாசம் மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக, கொழும்பிலுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சே நிகழ்ச்சி நிரலை முதலில் தயாரித்திருக்கின்றது. ஐ.நா. முஸ்லிம்கள் தொடர்பில் என்ன நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும், ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் தார்மீகக் கடமை இவ் அமைச்சுக்கு உள்ளது. ஹுஸைனின் விஜயம் என்பது, போருக்குப் பின்னரான எல்லா இனக் குழுமங்களின் நிலைமைகளையும் அவதானிப்பதாகும். அது தமிழர்களை முதன்மையாகக் கொண்டது. எனினும், அவர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட விடயமல்ல. ஆனால், முஸ்லிம்களை வெளிவிவகார அமைச்சு மறந்தது எங்ஙனம் என்ற கேள்வி எழுகின்றது. அதேபோல், எல்லா விடயங்களையும் நடுநிலையாக நின்று நோக்குகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகமானது மீள்குடியேற்றம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களுடன் முஸ்லிம்களும் வெகுவாக தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்பதையும் அந்த வகையில் ஹுஸைனின் நிகழ்ச்சி நிரலில் முஸ்லிம்களுடனான சந்திப்பு தவறவிடப்பட்டிருக்கின்றது என்பதை உணராமல் விட்டிருக்கின்றதே என்பதும் புதிராகவே இருக்கின்றது. சரி வெளிவிவகார அமைச்சு மறந்திருக்கின்றது, ஐ.நா. அலுவலகம் கவனிக்காமல் விட்டிருக்கின்றது என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? முஸ்லிம் கட்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகள், தேசியத் தலைமைகள் என்று தம்மை தாமே அழைத்துக் கொள்பவர்கள், தானைத் தளபதிகள், கெப்டன்கள் எல்லோரும், ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் போது, தூக்கத்தில் இருந்தார்களா என்ற கேள்விக்கு பதில் மிக சுலபானது. ஆனால், கொழும்பில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டு அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றது என்று கேள்விப்பட்டால் பல நாட்களுக்கு முன்னரே அங்கு கூடாரமடித்து விடுவார்கள். ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு நேரமொதுக்கி கேட்பார்கள், கெஞ்சிக் கூத்தாடுவார்கள், தோப்புக்கரணம் போடுவார்;கள். ஆனால், இது மக்களின் பிரச்சினைதானே என்று பெரிதாக அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரிடம் வேண்டுமென்று முஸ்லிம் மக்களுக்கு இருந்த முனைப்பை, முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் சில எடுத்துக் கொண்ட முயற்சியை முஸ்லிம் காங்கிரஸோ, மக்கள் காங்கிரஸோ, தேசிய காங்கிரஸ் போன்ற சிறு கட்சிகளோ அவ்வாறில்லாவிடின் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளோ மேற்கொள்ளத் தவறிவிட்டனர். 

யுத்தகாலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள், புலிகளாலும் ஒட்டுமொத்த ஆயுதக்குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள், வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், காணி மற்றும் சிவில் நிர்;வாக பிரச்சினைகள், இனவாத ஒடுக்குமுறை என்று பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் சர்;வதேசத்திடம் எடுத்துரைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இருப்பினும் ஹுஸைனிடம் உத்தியோகபூர்வமாக பேசுவதற்கு இலங்கை முஸ்லிம்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்பது போலவே முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் நடந்து கொண்டன. ஹுஸைன் இலங்கைக்கு வந்த போது மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் வெளிநாடு சென்றிருந்ததாக கூறப்படுகின்றது. இங்கிருக்கின்ற சிக்கல், ஒரு மாதத்துக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சை தொடர்பு கொண்டு நேரம் ஒதுக்கிப் பெறவில்லை என்பதாகும். அதேபோல் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேறு வேலையில் மும்முரமாக இருந்தார். வேறு சில முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு, அல் ஹுஸைன் இலங்கையை வந்தடைந்ததாக செய்தி வெளியாகும் வரைக்கும் அவர் வரப் போகின்றார் என்பதே தெரியாது.  இப்படித்தான் முஸ்லிம்களின் பல பிரச்சினைகள் கிடப்பில் கிடக்கின்றன. எல்லா சந்தர்ப்பத்தையும் தவற விட்டுவிடுகின்ற ஒரு சமூகமாக முஸ்லிம்கள் இருக்கின்றனர். கொழும்பு தொடங்கி  ஜெனிவா வரை இதுதான் நடக்கின்றது. இதன் காரணமாகவே, தீர்வுத்திட்டம் என்று வரும் போது மட்டும் முஸ்லிம்கள் உரிமை கோருவதை தமிழ்த் தரப்பு அதை விமர்சிக்க தலைப்படுகின்றது. நாம் எந்த முயற்சியும் செய்யாமல் இருந்துவிட்டு, அதாவது, மரத்தின் கீழே பால் கோப்பையை கை வைக்காமல் இருந்துவிட்டு, பழம் நழுவி பாலில் விழுமென எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும். போன பஸ்ஸிற்கு கைகாட்டிவிட்டு, 'ஐயோ பஸ் போய்விட்டது. சாரதி எம்மைப் புறக்கணித்து விட்டார்' என்று கூப்பாடு போடுவது திட்டமிட்ட சமூகத் துரோகமாகும். 

No comments

Powered by Blogger.