"ஞானசாரர் விவகாரம்" நேற்று நீதிமன்றத்தில் நடந்தவைகள்..!
-MFM.Fazeer-
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை தூற்றி அச்சுறுத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் இருந்து வந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் செல்ல நீதிமன்றம் நேற்று -23- அனுமதியளித்தது.
இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரைப் பிணையில் செல்லவே ஹோமாகம பிரதான நீதிவான் ரங்க திஸாநாயக்க இவ்வாறு அனுமதி வழங்கினார்.
அத்துடன் பிரகீத் எக்னெலிகொட வழக்கிலோ அல்லது அவரது மனைவிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான வழக்கிலோ சாட்சிகளுக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது என எச்சரித்த நீதிவான், இது குறித்து விசாரணை செய்துவரும் அதிகாரிகள், வழக்குடன் தொடர்புபட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்தார்.
சந்தியா எக்னெலிகொடவுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான வழக்கு நேற்று பிற்பகல் ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது ஞானசார தேரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விஜய ஹெட்டி ஆராச்சி தலைமையில் மூன்று சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகினர். முறைப்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொட சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமவுடன் சட்டத்தரணி லஹிரு கலப்பதி நீதிமன்றில் பிரசன்னமானார்.
சட்ட மா அதிபர் மற்றும் விசாரணையாளர் தரப்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி ஜனக பண்டார மற்றும் ஹோமாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லியனகே ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
நேற்று இது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
நீதிமன்றிக்கு வழக்கு நடவடிக்கைகளை பார்ப்பதற்காக வருகை தர முயன்ற தேரர்கள் பலருக்கு நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைய அனுமதி மறுத்த பொலிஸார் கலகத் தடுப்பு மற்றும் ஆயுதம் தரித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊடாக இரண்டடுக்கு பாதுகாப்பு நடவடிக்கையினை நேற்று அப்பகுதியில் அமுல் செய்தனர்.
வழக்கு விசாரணைகள் ஆரம்பமான போது, சந்தேக நபரான ஞானசார தேரர் தொடர்பில் அவரது சட்டத்தரணிகள் கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்தனர்.
2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஞானசார தேரருக்கு எதிரான குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்ய முடியாது எனவும் அதனால் அவருக்கு பிணை வழக்குமாறும் அவர்கள் கோரினர்.
எனினும் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய முடியாது, வழக்கு தொடர முடியாது என்ற கருத்துக்களை நீதிவான் ரங்க திஸாநாயக்க நிராகரித்தார்.
அத்துடன் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டவாதி, ஜனக பண்டாரவும் சந்தேக நபர்கள் தரப்பு சட்டத்தரணிகளின் வாதத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டார்.
அத்துடன் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஞானசார தேரருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து இதுவரை சட்டமா அதிபர் தீர்மானிக்காத நிலையிலும் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும் தற்போதைய வழக்கின் நிலைமையை மட்டும் கருத்தில் கொண்டே நீதிவான் பிணை குறித்து முடிவெடுக்க வேண்டும் என அவர் வாதிட்டார்.
இந் நிலையில் முன்னாள் மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஏ.டப்ளியூ.ஏ. சலாம் மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோர் விசாரித்து தீர்ப்பு வழங்கிய இரு வழக்குகள் ஊடாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை சுட்டிக்காட்டிய நீதிவான், முன் வைக்கப்பட்ட வாதங்களுக்கு அமைவாக பிணை வழங்கத் தீர்மானித்தார்.
முன்னாள் மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஏ.டப்ளியூ.ஏ. சலாம் மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோரின் தீர்ப்புகளில் சந்தேக நபர் ஒருவரின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவது குறித்து பூரண ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபர் எதிர்காலத்தில் இந்த சந்தேக நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவோ அல்லது தாக்கல் செய்யாது விடவோ இடமுள்ள நிலையில், தான் அவரை பிணையில் செல்ல அனுமதிப்பதாக நீதிவான் அறிவித்தார்.
அத்துடன் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் ஞானசார தேரருக்கு எதிராக சாட்சிகள் பாதுகப்பு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தால் அதன் பின்னர் பிணையை ரத்துச் செய்வது அல்லது அவரை விளக்கமறியலில் வைப்பது குறித்து அந் நீதிமன்றம் முடிவெடுக்கும் எனவும், தனது முடிவு குறித்து அதிருப்தி இருப்பின் அதற்கெதிராக மேன் முறையீடு செய்து சிறந்த தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நீதிவான் ரங்க திஸாநாயக்க அறிவித்தார்.
இதனையடுத்தே இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்லவே ஹோமாகம பிரதான நீதிவான் ரங்க திஸாநாயக்க இவ்வாறு அனுமதி வழங்கியதுடன் பிரகீத் எக்னெலிகொட வழக்கிலோ அல்லது அவரது மனைவிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான வழக்கிலோ சாட்சிகளுக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது,
இது குறித்து விசாரணை செய்துவரும் அதிகாரிகள், வழக்குடன் தொடர்புபட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்தார்.
பிணையை அடுத்து வெளியே வந்த ஞானசார தேரர், தொடர்ந்தும் தான் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பப் போவதாகவும், பிக்குகளுக்கான சட்டம் தொடர்பிலும் கற்கை நெறியொன்றினை வழக்க வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றுக்கு செல்லும் பிரதான பாதையில் கூடியிருந்த பெளத்த தேரர்களால் ஞானசார தேர்ருக்கு பிரித் ஆசீர்வாத பூஜையும் நடத்தப்பட்டது.
இதனையடுத்து அவர் தனது விகாரையை நோக்கி தனது வாகனத்தில் சென்றார்.
விசப்பல் களட்டப்பட்டுள்ளது.
ReplyDeleteWaayai kattiwaikka wendum inimelum thiranthal maaaamiveettukku anuppanum
ReplyDeleteහිමියන් ඥානසාර හොඳ මානසික දාර්ශනික පිළියම් විශේෂඥ බැලිය යුතුය
ReplyDeleteபிக்குகளுக்கான சட்டம் ஏற்கனவே புத்த சாசனத்தில் கூறப்பட்டே உள்ளது. தேரர்கள் தங்கள் கொள்கைகளை ஒழுங்காக பின்பற்றினால் போதுமானது. சுகபோகம் தேடி செல்கின்ற போதுதான் பிரச்சினை எழுகின்றது.
ReplyDelete