'விர்ச்சுவல் ரியாலிட்டி' கருவி
மொபைல் போன்களின் செயல்பாடுகளைப் பார்த்து, புல்லரித்துப் போயுள்ளவர்கள் மத்தியில், அதை விட அனைத்து அம்சங்களிலும் உயர்ந்த, துல்லியமான, தொட்டு உணர்ந்து, நுகர்ந்து உபயோகப்படுத்தக் கூடிய வகையிலான, 'விர்ச்சுவல் ரியாலிட்டி' தகவல் தொடர்பு கருவிகள் தயாரிப்பில், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், சாம்சங், எச்.டி.சி., போன்ற பெரிய நிறுவனங்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
அந்தப் போட்டியில், எச்.டி.சி., நிறுவனம், தன் புதிய கருவியை நேற்று -22- அறிமுகம் செய்து, தன்னை உறுதிபடுத்திஉள்ளது.தகவல் தொடர்புக்காக மட்டுமே இருந்த சாதாரண போன்களில், அதி நவீன வசதிகள் புகுத்தப்பட்டதும், 'ஸ்மார்ட் போன்'களாக மாறின. அந்தப் போன்களின் துல்லியம், சீரிய செயல்பாடு போன்றவற்றில் கூடுதல் புதுமைகளை புகுத்திய நிறுவனங்கள், அடுத்த கட்ட கண்டுபிடிப்பில் ரகசியமாக இறங்கின; அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்துள்ளன.
தலையில் மாட்டும் கருவி:
மொபைல் போனை கையில் வைத்து, அதன் ஸ்கிரீனை பார்த்து, அதில் உள்ள படங்கள், தகவல்களைப் பார்த்து மகிழும் நாம், விர்ச்சுவல் ரியாலிட்டி கருவியை தலையில் மாட்டி, கண் முன் காட்சிகளை கொண்டு வந்ததும், கற்பனையில் மட்டுமே எண்ணிப் பார்க்கக் கூடிய வகையிலான தரத்தில் படங்களைப் பார்க்க முடியும்.கண் முன் இருக்கும் அந்த காட்சிகளை, அகக்கரங்களால் தொட்டு உணர முடியும். ஏன், வாசனையை கூட அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர், விர்ச்சுவல் ரியாலிட்டி தயாரிப்பாளர்கள். சமீப காலமாக, ஸ்மார்ட் போன் விற்பனை குறைந்து வருவதாக, மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன. அமெரிக்கா மற்றும் சில நாடுகளில், ஆப்பிள் மொபைல் போன்களின் விற்பனை,சமீப காலமாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.
அதுபோல, சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களும், விற்பனையில் உச்சகட்டத்தை அடைந்து விட்டன. இந்நிலை எதிர்காலத்தில் ஏற்படும் என்பதை முன்னரே கணித்திருந்த அந்த நிறுவனங்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி கருவி தயாரிப்பில் ரகசியமாக ஈடுபட்டு வந்துள்ளன. பிற நிறுவனங்களை விட, நாம்முன் கூட்டியே அந்த கருவிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என எண்ணியும் இருந்துள்ளன.அந்த வகையில், கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், சாம்சங், எச்.டி.சி., நிறுவனங்களுக்கு இடையே ரகசிய போட்டி இருந்துள்ளது. சாம்சங் உட்பட சில முன்னணி நிறுவனங்களின், வி.ஆர்., கருவிகள் ஏற்கனவே சந்தைக்கு வந்துள்ளன. இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நேற்று நடைபெற்ற, சாம்சங் எம்.டபிள்யு.சி., எனப்படும், 'சாம்சங் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்' மாநாட்டில், எச்.டி.சி., மொபைல் போன் நிறுவனம், தனது, 'வைவ்' விர்ச்சுவல் ரியாலிட்டி தகவல் தொடர்பு சாதனத்தை அதிரடியாக அறிமுகம் செய்தது.
'வெயிட் அண்ட் சீ' வியூகம்:
ஏனெனில், இந்த கருவியை தயாரிக்கும் பணியில், முன்னணி நிறுவனங்கள், சில ஆண்டுகளுக்கு முன்பே இறங்கி விட்டன. விலை நிர்ணயிப்பதில், அவற்றுக்குள் குழப்பம் இருந்தது; அதனால், 'வெயிட் அண்ட் சீ' வியூகத்தில் இருந்தன.எச்.டி.சி., நேற்று, அதிகாரப் பூர்வமாக அறிமுகப்படுத்தி விட்டது; 52 ஆயிரம் ரூபாய் விலையில், வைவ் விர்ச்சுவல் ரியாலிட்டி தகவல் தொடர்பு கருவியை அறிமுகம் செய்து விட்டது.இந்த கருவிக்கான விற்பனை, 29ம் தேதி முதல் துவங்குகிறது; ஏப்ரல் முதல் வாடிக்கையாளர்களுக்கு கருவிகள் அனுப்பி வைக்கப்படும்.'மொபைல் ஹேண்ட்செட்' என அழைக்கப்படும் மொபைல் போன்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி கருவி வருகையால், வரும் காலங்களில், 'மொபைல் ஹெட் செட்' என அழைக்கப்படலாம்; ஏனெனில், அந்த கருவிகள், தலையில் அணியக் கூடியவை. எல்.ஜி., நிறுவனமும், இந்த கருவி தயாரிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அறிவித்துள்ளது.
'பேஸ்புக்' தலைவர் ஆர்வம்:
விர்ச்சுவல் ரியாலிட்டி தகவல் தொடர்பு சாதனத்தால், தனது, 'பேஸ்புக்' சமூக வலைதளத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்ற நம்பிக்கை கொண்டுள்ள, அந்த வலைதளத்தின் தலைவர் மார்க் ஸூக்கர்பெர்க், பார்சிலோனா மொபைல் போன் மாநாட்டில் கலந்து கொண்டதோடு, வருங்காலத்தில், அந்த தகவல் தொடர்பு சாதனம் வியத்தகு பங்காற்றும் என, பாராட்டும் தெரிவித்தார்.மேலும், தென் கொரியாவின், சாம்சங் நிறுவனத்தின், 'கியர் ௩௬௦ டிகிரி' வி.ஆர்., கருவியின் செயல்பாட்டை பாராட்டினார். அதன் மொபைல் போன் உற்பத்தி பிரிவின் தலைவர், டி.ஜே.கோஹ்வை பாராட்டவும் செய்தார். மேலும், வி.ஆர்., கருவி, சமூக வலைதள தொடர்புக்கு எந்த வகையில் ஒத்துழைக்கும் என்பதை ஆராய, தன் நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளதாகவும், அந்த கூட்டத்தில் அறிவித்தார்.
கண் முன் காட்சிகள்!
விர்ச்சுவல் ரியாலிட்டி தகவல் தொடர்பு சாதனம், ஸ்மார்ட் போன் போல செயல்படக் கூடியது தான். எனினும், கண் முன் காணும் காட்சிகள், கேட்கும் ஒலி, தொட்டு உணர்தல் மற்றும் வாசனை போன்றவற்றை, உள்ளது உள்ளபடியே அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வீடியோ விளையாட்டுகள், விமான பயிற்சி, போர் பயிற்சி போன்றவற்றில், இந்த கருவி போன்ற கருவிகள், இப்போதும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் துல்லிய தன்மை, மொபைல் போன்களை பின்னுக்குத் தள்ளி, விற்பனையில் கொடி கட்டி பறக்கும் என்பது இதன் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை
Post a Comment