Header Ads



பொதுபலசேனா + சிங்க லே தடை செய்யப்படல் வேண்டும் - கத்தோலிக்க ஆணைக்குழு கோரிக்கை

இலங்கையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தி போராடியமைக்கு சிங்கள இனவாதமே காரணமாகும், இன்றும் அவ்வாறான இனவாத அமைப்புக்கள் சுதந்திரமாக செயற்படுகின்றார்கள்.

கடுமையான இனவாதத்தை கக்கி ஊர்வலங்களை நடத்துகிறார்கள். ஆனால் சட்டத்தை நடை முறைப்படுத்தவேண்டிய பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான இனவாதம் கக்கும் அமைப்புக்கள் இங்கே சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தால், இந்த நாட்டில் மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் உருவாகும்.

அவ்வாறான ஆயுத போராட்டத்தை நாடு தாங்காது. என யாழ்.கத்தோலிக்க மறைமாவட்ட நீதி, சமாதன ஆணைக்குழு அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழுவுக்கு கூறியுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழு நேற்றைய தினமும், இன்றைய தினமும் யாழ்.மாவட்டச் செயலகத்தில் பொதுமக்கள் கருத்தறியும் அமர்வுகளை நடத்தியிருந்தது.

இந்நிலையில்,  இன்றைய அமர்வில் கலந்துகொண்ட யாழ்.கத்தோலிக்க மறைமாவட்ட நீதி, சமாதான ஆணைக்குழு தமது கருத்துக்களை இவ்வாறு முன்வைத்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மையினரும் சரிசமனாக இனம், மதம், மொழி கடந்து மதிக்க கூடிய வகையில் நாட்டில் புதிதாக கொண்டுவரப்படவுள்ள உத்தேச அரசியலமைப்பு திட்டம் அமைய வேண்டும்.

குறிப்பாக மதங்களின் பெயரால் வன்முறையை தூண்டுகின்ற அமைப்புக்கள், குழுக்கள் தடை செய்யப்படல் வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியமைக்கான காரணம், தமிழ் தரப்பில் நடைபெற்ற சாத்வீக போராட்டங்கள் கருத்தில் எடுக்கப்படாது உதாசீனம் செய்யப்பட்டமையே.

இந்த வெறுப்புணர்வால் தான் தமிழ் இளைஞர்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடினார்கள். இதனை தென்னிலங்கை அரசியல் வாதிகள் புரிந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் மறுக்கப்பட்டமையால் தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள் என கூறியுள்ளார்.

கல்வி, தொழில், மற்றும் உரிமை என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் பாகுபாட்டினை ஏற்படுத்தும் அரசியல் கட்சிகள் தடைசெயயப்படல் வேண்டும்.

குறிப்பாக பொதுபலசேனா, சிங்களலே போன்றவை தடை செய்யப்படல் வேண்டும். தற்போதும் நல்லாட்சி எனும் அரசின் கீழும் அவர்கள் செயற்பட்டு வருவதனை காண்கின்றோம்.

அண்மையில் பொதுபலசேனா அமைப்பினர் கண்டிக்கு மேற்கொண்ட வாகன ஊர்வலத்தின் போது பொலிஸார் பார்வையாளர்களாக இருந்தனர்.

இனவாதத்தை வெளிப்படுத்தும் சுவரொட்டிகளை தமிழ், முஸ்லிம் இடங்களில் பொதுபலசேனா ஒட்டிய போதிலும் பொலிஸார் கண்டும் காணாதது போல் இருந்தனர்.

எனவே இவற்றுக்கு எதிரான காத்திரமான நடவடிக்கைகள் எடுப்பதற்கு இடம் கொடுக்கும் வகையில் அமையவுள்ள புதிய அரசியல் அமைப்பு இருக்க வேண்டும். இல்லா விட்டால் இன்னுமொரு வன்முறை ஏற்படும் அதனை நாடு தாங்காது.

தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. கடந்த கால யுத்தத்தில் இருபத்திமூவாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் உயிரிழந்து உள்ளனர்.

நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்து உள்ளார்கள். எனவே இவர்களை நினைவு கூற வேண்டிய உரிமை எமக்கு உள்ளது.

எவ்வாறு போரில் உயிரிழந்த சிங்கள இராணுவ வீரர்களை அவர்களது குடும்பங்கள் எவ்வாறு நினைவு கூறுகின்றனவோ, அவ்வாறு எமது போராளிகளையும் நினைவு கூறுவதற்கு அனுமதிக்க வேண்டும்.

இவர்கள் போராடிய காலத்தில் பொது மக்களின் அனுசரணை போராளிகளுக்கு இருந்தது. ஆகவே இவர்களை நினைவு கூறக்கூடாது எனும் தடை சட்டங்கள் எந்த விதத்திலும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்த முடியாது.

இந்த தடை சட்டங்கள் வரவுள்ள புதிய அரசியல் அமைப்பில் நீக்கப்படல் வேண்டும் என யாழ்.கத்தோலிக்க மறைமாவட்ட நீதி, சமாதன ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

1 comment:

  1. Nammada Minister maar allam Road thuppurawu pandraanga...

    ReplyDelete

Powered by Blogger.