Header Ads



"பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க, விரும்பும் இந்தியா.."

அவன் தணிந்த குரலில் கதைத்தான். வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டுவிட்டுக் கதைத்தான். அந்த இடைவெளிக்குள் அகப்பட்டு, அவஸ்தைப்பட்டு அவஸ்தைப்பட்டு வெளியே வந்தான். இரண்டு வார்த்தைகளுக்கிடையிலான மெளனத்தில் என் மனம் நசிந்தது. இது ஒரு வலி. பட்டால் மட்டும் புரியும் வலி.

இது ஈழத்தமிழர் குணா கவியழகன் எழுதிய ‘நஞ்சுண்ட காடு’ நாவலில் வரும் வரிகள். எளிய செய்திகளுடன் இந்தப் பேட்டி,

உங்கள் முதல் நாவலான நஞ்சுண்டகாடுவில் விடுதலைப் புலிகள் மீதும் விமர்சனம் செய்து இருந்தீர்கள் அல்லவா?

ஆம். நான் எழுதுவதென்று முடிவெடுத்தவுடனே ஒரு விஷயத்தில் திடமாக இருந்தேன்... அது சமரசமற்றதாக இருக்க வேண்டுமென்று. அதனால் அவர்கள் செய்த பிழைகளையும் நான் விமர்சனம் செய்திருந்தேன். இந்தக் காரணத்தால் நான் எதிர்கொண்ட விமர்சனங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஆனால், நான் என் எழுத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறேன்! இறுதியாக நடந்த இன அழிப்பு போரை நீங்கள் தவிர்த்து இருக்கலாம் என்று எண்ணியதுண்டா...? போருக்கு காரணம் புலிகளின் ராஜதந்திர தோல்வி என்று கூறலாமா?

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஈழ மக்கள் என்றுமே போரை விரும்பியதில்லை. உலக நாடுகளின் இராஜதந்திர விளையாட்டில் ஈழம் சிக்கி, சின்னாபின்னமானது. இந்த போரை விரும்பியது சீனா, அது சிங்கள அரசிற்கு துணை நின்றது. நியாயமாக சீனாவின் அரசியல் எதிரிகளான இந்தியாவும் அமெரிக்காவும் புலிகளின் பக்கமல்லவா இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. சீனாவின் பிடி இலங்கையில் இறுகக் கூடாது என்று இந்தியா நினைத்தது. அதுவும் இலங்கை அரசின் பக்கம் நிற்கிறது. ஆசிய கண்டத்தில் இந்தியாவை பகைத்துக் கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை. அதுவும் இந்தியாவின் நிலைப்பாட்டையே ஆதரிக்கிறது. ஆனால், புலிகள் தோற்கடிக்கப்படவேண்டும் என்று மட்டும்தான் அமெரிக்கா விரும்பியது. அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டுமென்பது இந்தியாவின் விருப்பமாக இருந்தது.

சரி. இப்போது ஈழமக்களுக்கு எது தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

வடகிழக்கை இணைப்பது. போலீஸ், வருவாய் போன்ற அதிகாரங்களை மையப்படுத்தாமல். அதைப் பகிர்ந்தளிப்பது!

சரி. இந்த கேள்வி இல்லாமல் பேட்டி முற்றுப்பெறாது... எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த கேள்வியை கேட்பதில் உடன்பாடில்லை... பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறாரா?

நான் இந்த சந்தேகத்தை கிளப்புவதே இந்திய அரசு என்றுதான் நினைக்கிறேன். அவரின் தியாகம் முக்கியமானது. அவர் இறந்து விட்டார் என போரை நடத்திய இலங்கை அரசே சொல்லிவிட்டது. இவர்கள் இப்படி ஒரு சந்தேகத்தை கிளப்ப காரணம், ’பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று அவர்கள் அறிவித்தால், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். ராஜீவ் கொலை வழக்கை முடிக்க வேண்டும். அப்படி அந்த வழக்கு முடியும் பட்சத்தில், அந்த வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை சாத்தியம் ஆகும். அதை இந்தியா விரும்பவில்லை.

இதை தவிர்க்கவே இந்திய அரசு ஒரு குழப்ப நிலையை உண்டாக்கி, பிரபாகரனை உயிர்ப்புடன் வைத்திருக்க முனைகிறது என நினைக்கிறேன். இந்த இந்திய அரசின் இராஜதந்திரத்திற்கு, இங்குள்ள தமிழ் ஈழத் தலைவர்கள், தெரிந்தோ, தெரியாமலோ பலிக்கடா ஆகிக் கொண்டிருக்கிறார்கள்!’’ என்றவர் பெருமூச்சோடு சாய்ந்து அமர்ந்து கொள்கிறார்.

சின்ன இடைவேளைக்குப் பின் சன்னமான குரலில் சொல்கிறார்.

நான் அரசியலே பேசக் கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால், நீங்கள் அது போன்ற கேள்விகளையே கேட்டதால், பேச வேண்டியதாகிவிட்டது. நான் இப்போது தீவிர அரசியலில் இல்லை, இலக்கியம் மட்டுமே என் பணி. அதிலேயே இயங்க விரும்புகிறேன்! ஒரு அழுத்தமான கைக்குலுக்கலுடன் விடைபெற்றேன்.

No comments

Powered by Blogger.