Header Ads



துருக்கியுடன் உடன்படிக்கைக்கு திட்டமிட்டுள்ளோம் - பாராளுமன்றத்தில் ரணில் அறிவிப்பு

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை இந்த வருட நடுப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட உள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து இன்று (23) பாராளுமன்றில் விஷேட உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

குறித்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து அறியாமல் தற்போது சிலர் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருவதாக கூறினார்.

அந்த உடன்படிக்கை குறித்து சரியாக அறிந்து கொண்டு விமர்சனங்களை முன்வைக்குமாறும், அதற்கான சுதந்திரம் இருப்பதாகவும் அந்த விமர்சனங்களை வரவேற்பதாகவும் பிரதமர் கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது நாம் மக்களின் ஆணையைப் பெற்றுக் கொண்டது நாட்டை உயர் நிலைக்கு கொண்டு செல்வதற்கே.

பத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் வேலைத் திட்டம் தொடர்பாக நாம் மக்களிடம் வாக்குறுதி வழங்கி இருந்தோம்.

அதன்படி இந்த புதிய உடன்படிக்கையினூடாக இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் அதிகரிப்பதே உண்மையில் நடக்கப் போகின்றது.

அதேவேளை சீனா, சிங்கப்பூர் மற்றும் துருக்கி போன்ற நாடுகளுடனும் இதுபோன்ற உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

நாங்கள் இவை அனைத்தையும் நடைமுறைப்படுத்துவது நாட்டிற்காகவும் நாட்டின் எதிர்காலத்திற்காகவுமே. வேகமாக முன்னோக்கிச் செல்லும் உலகத்துடன் சேர்ந்து நாமும் வேகமாக முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

உலகத்துடன் நாமும் போட்டி போட வேண்டும். உலக சந்தையில் நாம் வெற்றி கொள்ள வேண்டும். வெவ்வேறு நாடுகளுடன் நாம் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வது உலகத்தை வெற்றி கொள்ளும் நோக்கிலேயே.

பொய்களையும் கட்டுக் கதைகளையும் கூறி நாட்டிற்கு தீ வைக்க யாருக்கும் இடமளிக்கமாட்டோம். வெறுப்புணர்வை பரப்பி மக்களை திசை திருப்பவதற்கு நாம் எவருக்கும் இடமளிக்க மாட்டோம்.

இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படும் அனைத்து விடயங்களும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். இதில் உள்ளடக்கப்படும் அனைத்து விடயங்களையும் மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

இது இரகசியமாகவோ திருட்டுத்தனமாகவோ முன்னெடுக்கப்படும் வேலை அல்ல. அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி முன்னெடுக்கப்படும் வேலை. நாங்கள் வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது வெளிப்படைத் தன்மையுடனே.

இந்த ஒப்பந்தத்தின் இறுதி வரைவை படித்ததன் பின்னர் உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். சபையில் இது தொடர்பில் கலந்துரையாடுங்கள். வீதிகளில் வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

No comments

Powered by Blogger.