Header Ads



சுஸ்மா சுவராஜ், முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடல்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளி விவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இன்று சனிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று பிற்பகல் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி, பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலைமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், பிரதித் தவிசாளரும் சுகாதாரத்துறை பிரதி அமைச்சருமான பைசால் காசிம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் புதிய அரசியல் யாப்பு விடயத்தில் முஸ்லிம்களின் வகிபாகம் மற்றும் அபிலாஷைகள் குறித்து இந்திய வெளி விவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு, முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளினால் விளக்கிக் கூறப்பட்டது.

அமையப்போகும் புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் உரிமைகள், நலன்கள் உறுதிப்படுத்தப்படுவதுடன் அதிகாரப் பகிர்வில் முஸ்லிம்களுக்கான தீர்வு குறித்தும் சுஸ்மாவிடம் வலியுறுத்தப்பட்டதுடன் அதற்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக சந்திப்பில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் துருக்கிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதால் இச்சந்திப்பில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.