Header Ads



"உத்தேச யாப்பு" தூரமாகி நிற்கும் முஸ்லிம்கள்..!

-நஜீப் பின் கபூர்-

'உத்தேச யாப்பு விடயத்தில் சம்பந்தன் ஐயா மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றார். மலையக மக்கள் தமக்கு தேசிய அங்கிகாரம் கேட்டு நிற்கின்றார்கள். இன்னும் ஒரு கூட்டம் அவர்களுக்குக் கொடுத்தால் எமக்கும் தா என்று நிற்கின்றது! வேடுவர் சமூகம் மிருக வேட்டைக்கு அனுமதி கேட்க, மகளிர் தரப்பொன்று கருக்கலைக்க உரிமை கேட்டு யாப்புக் குழு முன்சென்றிருக்கின்றது. இன்னுமொரு குழு சம உரிமை இருந்தால் போதும் என்று நிற்கின்றது. எந்தக் கோரிக்கைக்கும் வேட்டு வைக்கின்றோம் என்று ஒரு கூட்டம் வம்புக்கு வர காத்து நிற்கின்றது'

நாம் அறிந்தவரை எந்த ஒரு இனமும்-நாடும் எவ்வாறோ தான் பெற்றுக் கொண்ட ஒரு சுதந்திரத்தின் அல்லது விடுதலையின் பின்னர்தான் தமக்கென ஒரு அரசியல் யாப்பை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றது என்பது பொதுவான விதியாக இருந்து வந்திருக்கின்றது என்று கருத இடமிருக்கின்றது. ஆனால் நமக்கு சுதந்திரம் கிடைக்கின்ற போதே முன்கூட்டியே ஒரு யாப்பு தயார் நிலையில் இருந்தது. அதற்கு சோல்பரி அரசியல் யாப்பு என்று நாமம் சூட்டப்பட்டிருந்தது. 

எமக்கு ஜனநாயகத்தை கற்றுக் கொடுத்த பிரித்தானியாவுக்கு எழுத்துவடிவிலான யாப்பொன்று இன்றுவரை இல்லை. சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை கொடுத்தே அவர்கள் இந்த எழுதப்படாத யாப்பைப் பாதுகாத்து வருகின்றார்கள். இந்த சம்பிரதாய யாப்புக்கு சுமார் 1400 வருடங்கள் அதாவது 14 நூற்றாண்டு கால வயது.

ஒரு பௌத்தனால் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் யாப்பு இலங்கையைப்போல் அல்லாது சுதந்திரத்தின் பின்னர் அவர்களே தங்கள் யாப்பை வடிவமைத்துக் கொண்டார்கள். எனவே இந்தியாவின் யாப்புக்கு வயது 69. இந்த நீண்டகாலத்துக்குள் அவர்கள் தமது யாப்பில் இதுவரை 98 திருத்தங்களை மட்டுமே செய்திருக்கின்றார்கள். இலங்கை இந்த 68 வருடங்களில் ஒட்டுமொத்தமாக யாப்பை மூன்று முறை தலைகீழாக மாற்றி இருக்கின்றது. அத்துடன் அந்த யாப்பிலும் பலதிருத்தங்களை அடிக்கடி செய்தும் வந்திருக்கின்றது. 

இப்பேது உத்தேச யாப்புத் தொடர்பான கதைகள் என்ன என்று பார்ப்போம்.

தற்போது யாப்புத்திருத்தம் தொடர்பான மக்கள் கருத்துக்கோறும் பணிகள் கடந்த பெப்ரவாரி முதலாம் திகதி ஆரம்பமாகி நாளை அதாவது பெப்ரவாரி 29ம் திகதி முற்றுப் பெற இருந்தது. என்றாலும் தற்போது அதன் காலம் சில நாட்களுக்கு இன்னும் நீடிக்கப்பட்டுள்ளது. யாப்புத் திருத்தம் தொடர்பான முன்னோடியாக செயல்பட்டு வருகின்ற பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜயம்பத்தி விக்ரமரட்ன அதிகாரங்களைப் பகிர்வதால் நாடு ஒருபோதும் இரண்டாகப் பிளவுபடாது. அப்படி பிளவு பட்டதாக வரலாறும் எங்கும் கிடையாது என்று அவர் அடித்துக் கூறுகின்றார். 

கடந்த கால் நூற்றண்டுகளுக்கும் மேலாக இந்த நாடு எமக்குக்கற்றுத்தந்த பாடங்கள் அதிகாரப் பரவலாக்கத்தின் தேவையை உறுதி செய்கின்றது, என்று குறிப்பிடுவதுடன் நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வந்து இங்கு ஒரு நல்லாட்சி ஏற்படுவதை விரும்பாத சிலர் அதனைக் குழிதோடிப் புதைக்கப் பார்க்கின்றார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டுகின்றார். அத்துடன் எல்லோரையும் திருப்திப்படுத்துகின்ற விதத்திலே இந்த அரசியல் யாப்பு உறுவாக்கப்பட இருக்கின்றது என்றும் ஜயம்பத்தி குறிப்படுகின்றார். எல்லோரையும் திருப்திப்படுத்துவது எப்படி நடக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

எமக்குக் கிடைக்கின்ற தகவல் படி இந்த அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் புதிய அரசியல் யாப்பில் அதிகாரங்கள் பகிர்வு பற்றி சாதகமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். என்றாலும் இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற சிலர் அதிகாரப் பகிர்வு என்று இறுதித்தீர்மானங்கள் வருகின்ற போது தமது நிலைப்பாட்டில் இருந்து பல்டி அடிப்பதற்கும் நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இதற்கிடையில் தற்போது மாற்று எதிர்க்கட்சி என்று ராஜபாக்ஷக்களை முன்னிருத்தி அரசியல் செய்கின்றவர்கள் இந்த அதிகாரப் பகிர்வு விடயத்தில் ஒரு குழப்பத்தை உண்டு பண்ண நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதற்கிடையில் கடும் போக்கு இனவாதிகள் அதிகாரப் பகிர்வு பற்றிய வார்த்தைகளை உத்தேச யாப்பு உச்சரிக்கின்ற போது கூச்சலிடுவதற்கும்,குழப்பம் விளைவிப்பதற்கும் தயார் நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படியான ஒரு பின்னணியில் இந்த உத்தேச யாப்புத் தொடர்பாக தமிழர் தரப்பில் பல அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள்  கருத்துக்களை  முன்வைத்தாலும் ஏறக்குறைய ஒருமித்த கருத்தாக அவை முன்வைக்கப்பட்டிருக்கின்றது என்று எடுத்தக் கொள்ள முடியும். பிளவு படாத தேசத்துக்குள் சமஷ்டி அல்லது சுயாட்சி என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. 

தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் புதிய யாப்பு விடயத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகவே எமக்குப் புலப்படுகின்றது. சில தினங்களுக்கு முன்னர் இந்த விடயத்தை எவரும் குழப்பி விடாதீர்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. அத்துடன் இந்த யாப்பு நல்லதொரு தீர்வைத் தரும் என்பதும் அந்தத் தீர்வை நாம் வென்றெடுப்போம் என்பது அவர் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. 

தற்போது தமிழ் மக்களின் மூத்த அரசியல் வாதி அவர் என்பதில் எமக்கு எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது என்றாலும் அவரின் இந்த நம்பிக்கை விடயத்தில் எமக்கு நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன. நமது இந்த சந்தேகங்கள் அவர் தொடர்பானதல்ல. இந்த யாப்பை கருக் கட்ட வைக்கின்ற முயற்சிகள்தான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. சின்னச் சின்ன காரணங்களுக்காக இந்தக் கரு அடிக்கடி கலைந்து போக நிறையவே இடமிருக்கின்றது. எனவே தான் பெரியவரின் நம்பிக்கை மீது எமக்கு ஒரு பயப்பாடு இருக்கின்றது. எனவே நாம் எதிர் பார்க்கின்ற யாப்பு இப்போது வெறும் கானல் நீர் மட்டுமே! எனவே இது விடயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவைப்படுகின்றது.

அதிகாரப் பகிர்வு, சமஷ்டி, தன்னாட்சி, தனியலகு என்ற வார்த்தைகள் உச்சரிக்கப்படுகின்றபோது பேரினத்தை வீதியில் கொண்டுவருதற்கு நிறையவே முயற்சிகள் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியும். சில வேளை  இந்த அதிகாரங்களைக் கொடுப்போம் என்று இன்று பேசுகின்றவர்களும் ஒரு கட்டத்தில் வாயடைத்துப் போய் விடுவார்களோ என்ற ஒரு அச்சம் எமக்கு இருக்கின்றது. 

இந்த நாட்டில் வாழ்கின்ற இந்திய வம்சாவழி மக்கள் தங்களை ஒரு தேசிய இனமாக யாப்பு அங்கிகாரம் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள் நியாயமான கோரிக்கை. இதன் பின்னர் இந்தியாவை இவர்கள் தங்களது தாய் நாடாக அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்றுதான் இதன் அர்த்தமாக இருக்க வேண்டும். எனவே எங்களையும் இந்த நாட்டுப் பிரசை என்று எழுத்தில் கொடுங்கள்  என்று அவர்கள் எதிர்பார்ப்பு இருக்கின்றது. இது தேசிய ஐக்கியத்துக்கு நல்லதொரு சமிக்ஞை என்றுதான் கருத வேண்டும். இதனை பேரினம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் என்று தெரியவில்லை.

மலையக மக்கள் தரப்பிலும் பல கருத்தகள் முன்வைக்கப்ட்டிருக்கின்ற போதும் அவையும் பொதுவாக சமந்திரப் போக்குடையதாக இருக்கின்றது. அவர்கள் நிலத் தொடர்பற்ற தனியலகு என்று ஒரு கோஷத்தை முன்வைத்திருக்கின்றார்கள். அதில் மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள சில பிரதேசங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பது அவர்கள் முக்கிய கோரிக்கையாக இருக்கின்றது. இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தெரியவில்லை.

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகம் இந்த யாப்பு விடயத்தில் எவ்வளவு தூரம் ஆரோக்கியமான கருத்துக்ள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது என்ற விடயத்தில் அந்த சமூகத்தின் மத்தியில் ஏமாற்றமான நிலைப்பாடே காணப்படுகின்றது. முன்னாள் மு.கா. அமைச்சர் பஷீர் சேகுதாவுத் முஸ்லிம் மாகாணம் பற்றி கருத்து முன்வைத்திருந்தார். இதற்கு இந்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரஃபின்  மகன் அமான் தனது தந்தை ஆரம்பத்தில் இப்படி தனி மாகாணம் பற்றி பேசினாலும் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். எனவே பஷீர் இப்போது புரியாமல் பேசுகின்றார் எனவேதான் தேசிய ஐக்கிய முன்னணியை (நுஆ) என்ற அமைப்பை அவர் பிற்காலத்தில் தோற்று வித்தார் என்று அஷ்ரஃப்  மகன் அமான் குறிப்பிடுகின்றார்.  

ஆனால் மு.கா. செயலாளர் ஹசனலியோ தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்றால் எமக்கும் வேண்டும் என்ற  ஊடகங்களுக்கு சொல்லி இருக்கின்றார். இது என்ன அரசியல் என்ன கோரிக்கை என்று எமக்குப் புரியவில்லை! அவர்களுக்குக் கொடுத்ததால் எமக்கும் வேண்டும் என்பது? உங்களுக்கு என்று எதாவது கோரிக்கை இல்லாததாலா அவர்களுக்கு கொடுத்தால் எமக்கும் கொடு என்ற கோரிக்கை! இது என்ன நியதியோ? உங்களுக்கு என்று பசி,  தாகம் என்று ஒன்றுமில்லையா என்று கேட்கத் தோன்றுகின்றது. 

புவியல், பொருளாதார மற்றும் சமூகக் காரணங்களுக்காக  மாகாண சபைகளின் எண்ணிக்கையை நான்காக மாற்றி அமைக்க வேண்டும் 

1.மேல் 83 தென் 42மாகாணங்கள் இணைந்த மாகாண சபை உறுப்பினர்-125  
2.வடக்கு 29 கிழக்கு 28மாகாணங்கள் இணைந்த மாகாண சபை. உறுப்பினர்-57  
3.வடமேல் 40 வடமத்தி 29 மாகாணங்கள் இணைந்த மாகாண சபை.உறுப்பினர்-69
4.மத்திய 43 சப்ரகமுவ 32 ஊவா 26 மாகாணங்கள் இணைந்த மாகாண சபை. உறுப்பினர்-101

கிழக்கில் சூரியா என்ற மகளிர் அமைப்பு பெண்களுக்கு கருக் கலைக்கும் உரிமை வேண்டும் என்று கேட்டிருக்கின்றது பாலியல் தொல்லை மற்றும் உடல் நல - சுகாதாரக் காரணங்களுக்காக தமக்கு இந்த உரிமை வேண்டும் என்பது அவர்களது  கோரிக்கை.

வேடுவர் சமூகம் தங்களுக்கு மிருகங்களை வேட்டையாடுவதற்கு உரிமை வேண்டும் என்று கேட்டிருக்கின்றது. எனவே யாப்பு திருத்தத்தில் பல்வேறு தரப்பினர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும் சிறுபான்மை இனங்கள் தொழில்வாய்ப்பு விடயத்தில் வலியுறுத்த வேண்டிய முக்கிய கோரிக்கை, அரசு தொழிவாய்ப்புக்களை வழங்குகின்ற போது இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப அவற்றைப் பகிர்ந்தளிக்க வேண்டும். 

எமக்கு தெரிந்தவரை நாடுபூராவிலும் சிறுபான்மை சமூகங்களின் 9 சதவீதத்திற்கும் குறைவானவர்களே அரச தொழிவாய்ப்பைப் பெற்றிருக்கின்றார்கள். 28 சதவீதமாக இருக்க வேண்டிய எண்ணிக்கை இப்படி அமைந்திருப்பது சிறுபான்மைச் சமூகங்களிடையே தொழில்வாயப்;பின்மைக்கு முக்கிய காரணம். எனவே இதனை பெற்றுக் கொள்ள யாப்பிலே உத்தரவாதங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் மாகாண, மாவட்ட, பிரதேச, கிராமசேவகர் எல்லைகள் நிர்னயம் செய்யப்படும் போது அவை நடுநிலையான ஒரு சுயாதீன ஆணைக்குழு மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அபிவிருத்திக்கு நிதிகளை ஒதுக்கும் போது சகல இனங்களுக்கும் அவை நியாயமாக பகிர்ந்தாளிக்கப்படுவதற்கான உத்தரவாதம் யாப்பிலே உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறான விடயங்களில் சிறுபான்மை சமூகங்கள் கூடுதலாக தமது கவனத்தை செலுத்த வேண்டும். என்பது எமது கோரிக்கையாகும். 

1 comment:

  1. உச்தே அரசியல் யாப்பு சீர்திருத்தம் என்றால் என்னவென்றே அறியாதவர்கள் பலர் - அதுவும் உயர் கல்வியறிவுள்ளவர்கள் - நம்மில் அதிகமாக இருக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.