Header Ads



அஸ்ரப்பின் மகனுடைய கோரிக்கை

வரலாற்று ஆதாரங்களை மாற்றியமைக்க வேண்டாம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஸ்ரப்பின் மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அமான் அஸ்ரப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், தமது தந்தையின் கொள்கைப்படி எந்தவகையிலும் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் முஸ்லிம் மாகாணம் அமைய வேண்டும் என்பதாகும் என்று அமான் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலின் ஆரம்பக்காலத்தில் அஸ்ரப், தமிழர்களுக்கு தனியான மாநிலம் வழங்கப்படுமானால் முஸ்லிம்களுக்கும் அதுபோன்று வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.

எனினும் பின்னர் அந்த கொள்கையில் மாற்றத்தை அவர் ஏற்படுத்தினார்.

மர்ஹும் அஸ்ரப், துறைமுக அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் தமது முதல் உரையில் தேசிய அரசியலுக்குள் முஸ்லிம்களின் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையிலேயே இவர் எப்போதும் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் என்ற பதத்தை முன்னிலைப்படுத்தினார்.

இதன் அடிப்படையிலேயே அவர் தேசிய ஐக்கிய முன்னணியையும் உருவாக்கினார். இந்தநிலையில் பசீர் சேகு தாவூத் அரசியல் முதிர்ச்சி பெறாதவர் என்ற காரணத்துக்காகவே அவரை காங்கிரஸின் அரசியல் உயர்பீடத்துக்கு அஸ்ரப் நியமிக்கவில்லை என்றும் அமான் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரிக்கப்படுகின்ற நாடு எப்போதும் தோற்கடிக்கப்பட்ட நாடாகவே இருக்கும் என்றும் அமான் சுட்டிக்காட்டிள்ளார்.

2
முஸ்லிம்கள் தனியான முஸ்லிம் மாகாணம் என்ற கொள்கையை கைவிடமுடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடியில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற கருத்தமர்வின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளில் இந்த விடயமும் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களை பொறுத்தவரையில் சுயநிர்ணய உரிமை என்ற விடயத்தை அவர்கள் கைவிடத் தயாரில்லை.

இதனைப் போன்று வடக்கு கிழக்கு இணைப்பையும் கைவிட அவர்கள் தயாரில்லை.

எனவே, முஸ்லிம்களுக்கு சுயநிர்ணயத்தையும், தாயகத்தையும் தருவதற்கு முஸ்லிம் மாகாணம் அமையவேண்டும்.

இதனை கைவிடமுடியாது என சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியான முஸ்லிம் அடையாளம் என்பது, சில நாடாளுமன்ற ஆசனங்களை பெறுவதையோ அமைச்சரவையில் இடத்தை பெறுவதையோ குறிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு தனியான மாகாணம் தேவை என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப்பும் உறுதிப்படுத்தியிருந்தாக சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

2 comments:

Powered by Blogger.