Header Ads



குழந்தை அழுகிறதா..?


காரணமே இல்லாமல் குழந்தை அழுகிறதா? செரிமானப் பிரச்னையாக இருக்கும்... ஓம வாட்டர் கொடுத்தால் சரியாகி விடும் என்கிற நம்பிக்கை இன்றும் பல வீடுகளில் இருக்கிறது. குழந்தைகளுக்கான மருத்துவத்தில் நவீன மாற்றங்கள் வந்துவிட்ட நிலையில், ஓம வாட்டர் போன்ற பாரம்பரிய மருந்துகளுக்கு இன்றும் இடம் இருக்கிறதா? பதில் அளிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் பத்ரிநாத்.

இன்றைய மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாக, ஓம வாட்டர், வசம்பு போன்ற பாரம்பரிய மருந்துகளைப் பயன்படுத்துவது முழுவதுமாக குறைந்து விட்டது. இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால், வீட்டுப் பெரியவர்கள் இயற்கையாக ஓம வாட்டரை தயாரித்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தனர். அந்த அடிப்படையில், குழந்தைகளுக்கு ஓம வாட்டரை தாராளமாக கொடுக்கலாம். ஆனால், அது கட்டாயம் இல்லை. அதிலும் குறிப்பாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு ஓம வாட்டர் தேவையே இல்லை. ஏனென்றால், தாய்ப்பால் குடித்து வரும் குழந்தைகளுக்கு வயிற்று பிரச்னை உட்பட எவ்வித பாதிப்புகளும் வராது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.

இன்று பெரும்பாலான குழந்தைகள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பசும்பால், ஊட்டச்சத்து பானங்கள் போன்றவற்றை குடித்து வருகின்றனர். சில குழந்தைகளுக்கு இன்றும் ஆட்டுப்பால் கொடுத்து வருகின்றனர். அத்தகைய குழந்தைகளுக்கு ஓம வாட்டரை தாராளமாக கொடுக்கலாம். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த தண்ணீரை கொடுத்து வரலாம். பசி அதிகரிக்க வேண்டுமானால், இதை  சாப்பிடுவதற்கு முன்பும், செரிமான ஆற்றல் அதிகமாக  வேண்டும் என்றால் உணவுக்குப் பிறகும் ஓம வாட்டரை  கொடுக்கலாம். 

மருந்து, மாத்திரைகள், உணவு வகைகளில் அலர்ஜி வருவதைப் போல ஓம தண்ணீரால் அலர்ஜி ஏதும் வராது. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதால், அரை டீஸ்பூன் அல்லது ஒரு டீஸ்பூன் தினமும் கொடுத்து வரலாம். அளவைத் தாண்டாத வரை ஆபத்தில்லை...’’

No comments

Powered by Blogger.