சிறையிலிருந்து ஞானசாரர் எழுதிய கடிதம், இன்று வெளியானது - "வன்முறையாளன்" என ஒப்புதல்
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெலிக்கடை சிறையிலிருந்து ஊடகங்களுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் தான் பௌத்த மதத்தை பாதுகாக்கவே சற்று வன்முறைத்தனமாக நடந்து கொண்டதாகவும், அரசியல்வாதிகளும், மகாநாயக்க தேரர்களும் மௌனமாக இருக்கும் நிலையில் அதனைத் தவிர தனக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்கள் இலங்கையில் அடிப்படைவாதத்தை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இவற்றுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாகவே தான் இப்போது சிறைக்கம்பிகளுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை சிறையில் அடைப்பது தொடர்பில் முஸ்லிம், கிறிஸ்தவ இயக்கங்கள் மட்டுமன்றி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பின்னணியில் செயற்பட்டுள்ளதாகவும் ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இக்கடிதம் இன்றைய திவயின (07) பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிறைச்சாலை விதிகளின் பிரகாரம் தடுப்புக் காவல் அல்லது தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு கைதியும் எதுவிதமான கடிதங்கள், எழுத்து ஆவணங்களை வெளியில் அனுப்ப முடியாது.
சிறைச்சாலை நிர்வாகத்தினால் வழங்கப்படும் கடித உறையில் எழுதிக் கொடுக்கப்படும் கடிதங்கள் மட்டும் கடும் பரிசீலனையின் பின்னர் கைதிகளின் உறவினர்களுக்கு அனுப்பப்படும்.
ஆனால் கலகொட அத்தே ஞானசார தேரர் விடயத்தில் குறித்த விதி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. அவர் தனது வழக்கு தொடர்பாக விமர்சனங்களை வெளியிட்டுள்ள கடிதம் நேரடியாக ஊடகங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன எழுதியனுப்பிய கடிதம் ஒன்றும் திவயின பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Ai janasara! You must learn good lesson in the prison
ReplyDelete