மகிந்த மீது ஒழுக்காற்று விசாரணை, குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்சியிலிருந்து நீக்கம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியினை பிளவுபடுத்தும் நோக்கில் கட்சிக்கு முரணாக செயற்பட்டிருந்தால் அவர் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்றும், இதன்போது அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் தராதரம் பார்க்காமல் கட்சியின் உறுப்புரிமை பறிக்கப்படும் என்றும் கடும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கட்சியின் ஒழுக்காற்று விடயத்தில் தராதரம் செல்வாக்கு செலுத்துவதில்லை என்றும் கட்சியின் எந்த ஒரு உறுப்பினரும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம் என்றும் கூறினார்.
இந்த விடயம் குறித்து கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றை பேச்சுவார்த்தைகளின் மூலம் உடன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். மஹிந்த ராஜபக் ஷவாக இருந்தாலும் சரி வேறு ஒரு அங்கத்தவராக இருந்தாலும் சரி கட்சியின் விதிமுறைகளுக்கு அமையவே செயற்பட வேண்டும் என்றும் எவரேனும் அதனை மீறி செயற்பட்டால் அது யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே என்றும் கூறினார்.
எனவே, மஹிந்த ராஜபக்ஷ கட்சிக்கு விரோதமாக செயற்பட்டிருந்தால் அவரை கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கலாம் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment