"ஈகோ"
-மொஹமட் பாதுஷா- முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஒற்றுமை பற்றி அடிக்கடி பேசப்படுகின்றது. 30 வருடங்களுக்கு முன்னர், முஸ்லிம்களுக்கென தனியானதோர் அரசியல் கட்சி தேவை என்ற பேச்சாடல்கள் எழத் தொடங்கின. அவ்வாறு ஒரு கட்சி உருவாக்கப்பட்ட பின், எல்லா முஸ்லிம்களும் ஒற்றுமையாக அக் கட்சியின் கீழ் ஒன்றுபட வேண்டுமென பேசப்பட்டது. பிறகு, முஸ்லிம் கட்சிகள் பல்கிப் பெருகிவிட்ட இன்றைய காலத்தில் முஸ்லிம் கட்சிகளிடையே ஒற்றுமை அவசியம் என்ற விடயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. ஒற்றுமை என்பது மிகப் பெரிய பலம். ஓர் இனக் குழுமம், தன்னுடைய அபிலாஷைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், அதிலுள்ள மக்களில் ஒரு சிறுபகுதியினர் சிதறுண்டு இருந்தாலும் கூட, பெரும்பாலானவர்கள் ஒற்றுமையாக ஒருமித்த நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும். இங்கு ஒற்றுமை என்பது, ஒரு பீங்கானில் சாப்பிட்டு, ஒரே பாயில் படுத்துறங்கும் அரசியல் அல்ல. மாறாக, ஓர் அவசியம் ஏற்படுகின்ற போது, சமூகத்துக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் ஒரு புள்ளியில் ஒன்றுகூடுவதாகும். வீதி விபத்தொன்று இடம்பெற்று விட்டால், யாரென்று தெரியாத யாவரும் உதவிக்கு ஓடோடி வருவதைப் போல, பக்கத்து வீட்டில் மரணம் நிகழ்ந்து விட்டால், பகைமறந்து அயல் வீட்டவர்கள் எல்லோரும் ஓடி வருவதைப் போல, அவசியமேற்படும் வேளையில் ஓரிடத்தில் ஒன்றுகூடிப் பிரிந்து செல்வது ஆகும். இன்று, இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் துண்டங்களாக பிளவு பட்டுப் போயுள்ளன. முஸ்லிம்களிடம் ஜாதி வேற்றுமையோ, மட்டக்களப்பான், யாழ்ப்பாணத்தான் என்பது போன்ற பிராந்திய வாதமோ இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால், கடந்த இரு தசாப்தங்களுக்குள் முஸ்லிம் மக்களிடையே பிரதேசவாதம் வளர்த்து விடப்பட்டிருக்கின்றது. இதற்கு முழுமுதற் காரணம் அரசியல்வாதிகளாவர். ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் ஒவ்வொரு ஊருக்கும் மாகாண சபையிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்புரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோஷம் வலுப் பெற்றதன் காரணமாகவும் அண்மைக்காலமாக தேசியப்பட்டியல் எம்.பி. பதவிக்கான பனிப்போரினாலும், பிரதேசவாதத்தால் முஸ்லிம்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமக்கென்று வாக்குவங்கிகளை கொண்டிராத அரசியல்வாதிகளுக்கு வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கு ஊர்ப்பற்று என்ற விடயமே பெரும்பாலும் மூலதனமாக இருக்கின்றது. இதில் அவர்கள் இலாபமடைந்தாலும் மக்கள் நன்மை அடைவதில்லை. இதைவிட முக்கியமாக மிக அண்மித்த காலப்பகுதிகளில் அவதானிக்கப்பட்ட விடயம் முஸ்லிம்களிடையே ஏற்பட்டிருக்கின்ற சமய ரீதியான கருத்து வேற்றுமைகள் எனலாம். சில வருடங்ளுக்கு முன்பு வரைக்கும் அரபு நாடுகளிலேயே இஸ்லாமிய மக்கள் மத்தியில் கோத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட மதப் பிரிவுகளும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட மத பிரிவுகளும் காணப்பட்டன. ஆனால், இந்நிலைமை இன்று இலங்கையிலும் உருவாகி வருக்கின்றமை மிகப் பெரிய துரதிர்ஷ்டமாகும். உண்மையாகவே, முஸ்லிம்கள் சமய ரீதியாக பிளவுபடவில்லை. அவர்களது அடிப்படை மதக் கொள்கையும் மூல தத்துவங்களும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதை எந்த பிரிவுகளும் மறுதலிப்பதில்லை. இலங்கையை பொறுத்தமட்டில் இங்கிருக்கின்ற பிரச்சினை சமயக் கிரியைகளையும் கடமைகளையும் எவ்வாறு நிறைவேற்றுவது என்பது பற்றிய வாதப் பிரதிவாதாகும். உதாரணமாக, கொழும்புக்கு போவதிலும் பஸ்ஸில் பயணிப்பதிலும் எல்லோரு பொது உடன்பாட்டுக்கு வருகின்றனர். அதில் எந்த கருத்து வேற்றுமையும் இல்லை. ஆனால், ஆசனத்தை சாய்த்துக் கொள்வதா சரி, இல்லை நேராக நிமிர்த்தி வைத்துக் கொள்வதா சரி என்ற சிறிய விடயத்தில் ஏற்படும் முரண்பாட்டுக்கு ஒப்பான ஒன்றாகவே இந்த கொள்கை வேறுபாடுகள் தோன்றுகின்றன. தேசிய அடிப்படையில் நோக்கினால், முஸ்லிம்களிடையேயான சமய மாற்றுக் கொள்கைகளைக் காட்டிலும், அரசியல் சார்ந்த பிளவுகளே மிக மோசமான நிலைமைக்கு இட்டுச் செல்கின்றன. முஸ்லிம்களின் அரசியல், மிகக் குறுகிய வட்டத்துக்குள் சுழலுவதாகவே இருக்கின்றது. பெரும்பாலும் முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றுமுள்ள அரசியல்வாதிகள் தம்முடைய பதவிக்கும் சொத்து சேகரிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். வாக்காளப் பெருமக்களுடைய வாழ்வாதாரத்தை விட, தம்முடைய, தமது பிள்ளைகளுடைய வங்கிக் கணக்குகள் பற்றி அவர்கள் கவலைப்பட்ட சந்தர்ப்பங்களே அதிகம். இலங்கையைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் அரசியல்வாதிகளை, முஸ்லிம் காங்கிரஸின் வழிவந்தவர்கள், ஐக்கிய தேசியக் கட்சிகாரர்கள், சுதந்திரக் கட்சி மற்றும் இதர கட்சிகளினூடாக அரசியல் செய்பவர்கள் என்ற 3 பிரிவுகளாக வகைப்படுத்த முடியும். இவர்களில் சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இதர உதிரிக் கட்;சிகளை சேர்ந்தவர்களின் அரசியல் என்பது வேறுபட்டதாகும். அவர்கள் பெரும்பான்மை கட்சிகளின் ஊடாக தம்மை பிரதிநிதித்துவம் செய்வதால், முஸ்லிம் சமூகத்துக்காக அவர்களால் ஓர் எல்லைக்கு அப்பால் இயங்க முடியாது. வடக்கு, கிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாண அலகு போன்ற சர்ச்சைமிகு கோரிக்கைகளை முன்வைப்பதை தவிர்க்கவே அவர்கள் விரும்புவர். ஆயினும் இவர்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்துவது மிக முக்கியமானது. அவர்கள் சார்ந்த மக்களை அதன்மூலம் ஒரு குடையின் கீழ் கொண்டு வர முடியும். ஆனால், தமக்கென்று தனியான கட்சிகள் இல்லாதவர்களின் இணைவைக் காட்டிலும், முஸ்லிம்களை மையமாக வைத்துக் கட்சிகளை நடாத்துகின்றவர்கள் ஒன்றிணையும் பட்சத்தில் அதன் பலமும் பலாபலனும் மிக உயர்வானதாகக் காணப்படும். முஸ்லிம் காங்கிரஸின் பாசறையில் அல்லது பண்ணையில் வளர்ந்து, பின்னர் பல கட்சிகளாக உடைவெடுத்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒற்றுமைப்படுத்துவது இதில் பிரதானமாகும். முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் இயக்கமொன்றை உருவாகி, அது அரசியல் கட்சியாக பரிணாமம் எடுக்கும் வரைக்கும், முஸ்லிம் சமூகத்தில் இருந்த அரசியல்சார் ஒற்றுமையைக் கெடுத்தவர்கள் இவர்கள் என்ற அடிப்படையில் இவர்களை ஒற்றுமைப்பட வைப்பதன் மூலம் பெருந்திரளான முஸ்லிம் மக்களை ஒரு புள்ளியில் ஒன்றுசேர்க்க முடியும். மு.கா.வை உருவாக்கிய அஷ்ரப் என்ற பெருந்தகை, அரசியல் என்றால் என்னவென்று தெரியாத பலரையும் தனது பாசறையில் பயிற்றுவித்தார். அவரது மரணத்துக்குப் பிறகு, ஒரே வகுப்பில் படித்த எல்லோருக்கும் வகுப்பாசிரியர் ஆசை வந்து விட்டது. இந்த தலைவர் ஆசை வந்தது முதலில் ஹக்கீமுக்கே. பேரியல் அஷ்ர‡ப் - ரவூப் ஹக்கீமை இணைத் தலைவர்களாக நியமித்தவர்களில் பெரும் பகுதியினர் சில மாதங்களுக்குள் தம்முடைய தீர்மானத்திலேயே அதிருப்தியுற்றனர். அப்போதிருந்த உற்சாகத்தில் ஒரு பிரிவினர் ஹக்கீமை தனித் தலைவராக அறிவித்தனர். 'விரால் இல்லாத குளத்தில் கொறட்டை மீன் அதிகாரி' என்று கிராமத்தில் சொல்வார்கள். ஹக்கீம் அப்படியே ஆகிப் போனார். அவர் பக்கம் அரசியல் காற்று வீச ஆரம்பித்ததில், பேரியல் ஒதுங்கிப் போக வேண்டி ஏற்பட்டது. ரவூப் ஹக்கீமை கொண்டாடியவர்கள் சில வருடங்களுக்குள்ளேயே, 'அவர் இதற்கு சரிப்பட்டு வரமாட்டார்' என்று கூறி இரண்டு, மூன்று கட்டங்களில் கட்சியில் இருந்து வெளியேறினர். அதாவுல்லா தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்தார். ரிஷாட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். அதற்குப் பிறகு இன்று வரைக்கும், அளவுகளில் வேறுபட்ட பல பிளவுகள் இடம்பெற்றிருக்கின்றன. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் - அஷ்ர‡பின் மரணத்திற்குப் பின்னரே ஆரம்பகால மு.கா.வில் உடைவு ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம். ஒன்று - ஹக்கீமின் தலைமைத்துவத்தில் உள்ள குறைபாடு, இரண்டாவது, மற்றவர்களுக்கு ஏற்பட்ட தலைவர் பதவி மீது ஏற்பட்ட ஆசை. ஆனால் இத்தனை கட்சிகள் உருவான போதிலும், அஷ்ரப் செய்த சேவைகளுள் நூற்றில் ஒரு பங்கையேனும் இவர்களால் கூட்டாக செய்ய முடியாமல் போயிருக்கின்றது. அரசியல் ரீதியான பிளவுகளும், ஊர் வாரியான வேறுபாடுகளும் வளர்த்து விடப்பட்டிருக்கின்றன. இவ்வாறான பின்புலத்திலேயே, முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல்கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டுமென மக்கள் பல வருடங்களாக எதிர்பார்த்துள்ளனர். இவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்படும் போது இரண்டு விதமான பதில்களை சம்பந்தப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் அளிப்பதுண்டு. 'எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்க கூடாது' என்பது முதலாவது பதிலாகும். 'அரசியல்வாதிகள் ஒற்றுமைப்படத் தேவையில்லை முஸ்லிம் மக்கள் முதலில் ஒற்றுமைப்படட்டும்' என்பது இரண்டாவது பதிலாகும். களவுக்கும் காரணம் கூற கற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் இவ்வாறான வியாக்கியானங்களுக்கு ஒன்றும் குறைச்சலில்லை. தமக்கு ஓர் இலாபம் கிடைக்கும் என்றால் யாரும் யாருடனும் சேர்ந்து அரசியல் செய்வார்கள். ஆனால், சமூகத்துக்காக ஒன்றுபடுவதில் அவர்களுக்கு முனைப்பு இல்லை என்பதையே இது வெளிக்காட்டுகின்றது. அண்மையில், 'மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார்' என்று, அகில இலக்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டிருந்ததாக ஒரு செய்தி வெளியானது. மு.கா. தலைவர் அடுத்த தேசியப்பட்டியல் எம்.பி.யை வன்னிக்கு வழங்குவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. தமது கோட்டைக்குள் ஹக்கீம் குடியேறுவது அரசியல் சவால்களை தோற்றுவிக்கும் என்று கருதியே, ரிஷாட் இவ் அழைப்பை விடுத்துள்ளார் என்று கூறப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் கருத்து வெளியிட்ட ஹக்கீம், 'அவ்வாறு இணைவதற்கான எந்த அவசியமும் இல்லை' தெரிவித்ததாக இணையச் செய்திகள் வெளியாகி இருந்தன. ரிஷாட்டின் அழைப்பும் ஹக்கீமின் மறுப்பும் உத்தியோகபூர்வமான ஊடக அறிக்கைகள் அல்ல. ஆனபோதும் இது கவனிப்பிற்குரியன. முஸ்லிம் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டுமென மக்கள் வேண்டி நிற்கின்ற ஒரு காலப்பகுதியில், அரசியல் கட்சியொன்றின் தலைவரின் சமிக்கையை மாற்றுக் கட்சித் தலைவர் உதாசீனம் செய்வாராயின் அது சமூக அக்கறையல்ல. ரிஷாட் பதியுதீன், ஹக்கீம் தலைமையிலான மு.கா.வில் ஹக்கீமுக்கு கீழ் செயற்பட்டவராக இருக்கலாம். ஆனால், இன்று அவரிடமும் ஒரு கட்சியுள்ளது. மு.கா. அளவுக்கு அது பெரிய கட்சி இல்லை என்றாலும் நாடாளுமன்ற உறுப்புரிமை அடிப்படையில் நோக்கினால் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதை மறந்து விடக் கூடாது. இணைந்து பணியாற்றுவதற்கான ஒரு சமிக்கையை கூட வெளியிடுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஈகோ பிரச்சினை இருக்கின்ற சூழலில், மெல்லியதாக ஒரு வாய்ப்புக் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எப்போதும், காந்தத்தின் ஒவ்வா முனைகளாக இருப்பதற்கே நினைக்கக் கூடாது. இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். அது என்னவென்றால், முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை என்று பேசுகின்ற போது, எல்லோரும் ஒரு கட்சியாக, ஒரு தலைவரின் கீழ் செயற்படுதல் என்ற ஒரு வரைவிலக்கணம் புனையப்படுகின்றது. அது தவறாகும். உண்மையில், முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை என்பது என்னவெனில், வேறு வேறு கட்சிகளில் இருந்தாலும், வேறு பாதையில் பயணித்தாலும் சமூகத்துக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்று வருகின்ற போது, அந்த காரணத்திற்காக எல்லா முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் ஒற்றுமைப்பட்டு செயற்படுவதாகும். ஒவ்வாத முனைகள், மக்களுக்காக நெருங்கி வந்து, சொந்த அரசியலுக்காக பிரிந்து செல்வதாக இருந்தாலும் பிரச்சினையில்லை.
Post a Comment