Header Ads



பாரிய நிதிமோசடி ஆணைக்குழுவுக்கு கூடுதல் அதிகாரங்கள் - விசேட வர்த்தமானி வெளியீடு

பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

இதன்படி இந்த ஆணைக்குழு வின் அதிகாரங்களை பலப்படுத்தும் வகையில் ஐவர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை கொண்டு ஆணைக்குழுவின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

மேன்முறையீட்டு நீதிபதி பிரீதிபத்மன் சூரசேனவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஐவர் அடங்கிய குழு இதற்கான பணிகளில் ஈடுபடவுள்ளது. பாரிய ஊழல் மோசடி, அரச சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் ஆராய 2015 மார்ச் மாதம் ஜனாதிபதியினால் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இதனூடாக கடந்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் தன்மைக்கேற்ப அவை தொடர்பில் செயற்படுவதற்காக அதிகாரங்களை அதிகரிக்குமாறு ஆணைக்குழுவினால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் பெப்ரவரி முதலாம் திகதி வெளியிடப்பட்ட 195212 ஆம் இலக்க வர்த்தமானியினூடாக ஆணைக்குழுவின் அதிகாரங்கள் ஜனாதிபதியினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆணைக்குழு உறுப்பினர்களாக மேல் நீதிமன்ற நீதிபதிகளான மென்திஸ் செனவிரத்ன, குலதுங்க கிஹான் ஹிமான்சூ, ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் பி.ஏ. பிரேமதிலக மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி விகும் அதுல களு ஆரச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏதும் நபர் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கையில் குறித்த நபரினதும் மட்டுமன்றி அவரது மனைவி, பிள்ளைகள் ஆகியோரின் வங்கிக்கணக்குகள் ஆவணங்கள் என்பவற்றை வழங்குமாறு வங்கி முகாமையாளர்கள் மற்றும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஆகியோருக்கு வர்த்தமானி ஊடாக பணிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.