"ஹுஸைனின் விஜயமும், திராணியற்ற முஸ்லிம் ஊடகவியலாளர்களும்”
-அப்துல் ஜப்பார்-
முஸ்லிம் தலைமைகள் விடும் தவறுகளையும் பிழைகளையும் சுட்டிக்காட்டி பூதாகரப்படுத்திவரும் முஸ்லிம் ஊடகங்களும் முஸ்லிம் ஊடகவியலாளர்களும் சமூகம் சார்ந்த விடயங்களை தட்டிக்கேட்கும் அரிய சந்தர்ப்பங்களை கோட்டை விட்டு நிற்பது சமூகத்தின் சாபக்கேடு என்ற குற்றச்சாட்டு மேலெழுந்துள்ளது.
ஐ நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் இளவரசர் சைட் அல் ஹுஸைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நான்கு நாட்கள் இங்கு நின்ற போதும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் மனக்குமுறல்கள், வேதனைகள் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இளவரசருக்கு சரிவர எடுத்துச் சொல்லப்படவில்லை என்ற ஆதங்கமும் வேதனையும் இன்று முஸ்லிம் சமூகத்திலே ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
முஸ்லிம் என்ற பெயரைத்தாங்கி தலைப்பாகை கட்டி இயங்கிவரும் முஸ்லிம் அமைப்புக்களும் முஸ்லிம் மீடியாக்களும் இந்த விடயத்தில் எந்த விதமான அக்கறையும் காட்டாமல் இருந்தது தான் வேதனையான விடயம். இது ஒரு வரலாற்றுத்தவறாக பதியப்படவேண்டிய ஒன்று.
.மேடைகளிலும் ஏசி அறைகளிலும் ’முஸ்லிம் சமூகம், முஸ்லிம் சமூகமென’ கூப்பாடு போட்டுவிட்டு கூட்டமுடிவில் புரியாணியையும் வட்டிலப்பத்தையும் உண்டு விட்டு ஏப்பம் விட்டுச்செல்வது தானா சமூக உணர்வு?
’முஸ்லிம்களுக்கு தனியான ஊடகம் தேவை, தனியான ஊடகம் தேவை’ என எப்போதும் கூப்பாடு போட்டு வரும் முஸ்லிம் மீடியாக்காரர்களே!!! உங்களுக்கு கிடைத்த ஓர் அரிய சந்தர்ப்பத்தை நீங்கள் பயன்படுத்தினீர்களா? இந்த பதவி உங்களுக்கு அமானிதமானது என்பதை மனதிலிருத்திக்கொள்ளுங்கள். இறைவனுக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
ஐ நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் சைட் அல் ஹுஸைன் தனது விஜயத்தின் இறுதி நாளான நேற்று மாலை இரண்டுமணிக்கு பெளத்தலோக மாவத்தையிலுள்ள ஐ நாவுக்கான இலங்கை தூதரகத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். இந்த மாநாட்டில் கேவலம் ஒரு முஸ்லிம் ஊடகவியலாளரேனும் அங்கு சென்று சமூகத்தின் பிரச்சினையை எடுத்துரைத்தீர்களா?
நாளாந்த, வாராந்த, மாதாந்த முஸ்லிம் பத்திரிகைகள் என்று எத்தனை பத்திரிகைகளை நடத்துகின்றீர்கள். இன்னும் பல்வேறு பத்திரிகைகளில் கொழுத்த சம்பளம், வாகன வசதிகளுடன் வலம் வருகிறீர்களே “உங்கள் மூளைகள் சலவை செய்யப்பட்டு விட்டதா? அல்லது நமக்கேன் வீண் வம்பென்று வாளாவிருக்கின்றீர்களா? முஸ்லிம் அரசியல் வாதிகள் தவறு செய்தால் அல்லது அவர்களைப்பற்றி ஏதாவது கிசு கிசுக்கள் கிடைத்துவிட்டால் மட்டும் கொட்டை எழுத்துக்களில் பிரசுரிப்பது மட்டும்தானா உங்கள் சமூகப்பற்று?
உங்களுக்கு சமூகத்தைப்பற்றிய கவலை வந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் நீங்கள் அடுத்த்வரைப்பற்றி குறை கூறிக்கொண்டிருக்கக்கூடாது.
நல்லூர் கோவிலுக்கு முன்னே பாதிக்கப்பட்ட நமது முஸ்லிம் உறவுகள் வீதியோரத்தில் குந்தியிருந்து சுலோக அட்டைகளை தாங்கியிருக்காவிட்டால் இலங்கையிலே முஸ்லிம் சமூகமென்று ஒன்று இருக்கின்றதென்ற செய்தி இளவரசருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
முஸ்லிம் அகதிகள் ’அஸ்ஸலாமு அலைக்குமென’ கூறி தங்களது பிரச்சினைகள் குறித்த மகஜரை கையளித்திருக்காவிட்டால் கொழும்பு ஊடகவியலாளர் மாநாட்டில் மனித உரிமை ஆணையாளர் நாயகம் முஸ்லிம் அகதிகளை சந்தித்தேன் என்று கூறியிருக்க மாட்டார்.
ஐ நா அலுவலகத்திற்கு வெளியே பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் அமைதியான போராட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்த போது ’பின்கதவால் வந்து பின்கதவாலேயே போன’ இளவரசரிடம் குறித்த “ ஊடகவியலாளர் மாநாட்டில் அந்த மக்களின் கவலை தொடர்பில் சுட்டிக்காட்டி கேள்விகளைக் கேட்க எந்தவொரு முஸ்லிம் ஊடகவியலாளரும் அங்கு பிரசன்னமாயிருக்கவில்லை.
வெறுமனே முஸ்லிம் தலைமைகளைப்பற்றியே உங்கள் எழுத்துக்களில் நச்சரித்துக்கொண்டும் குறை கூறிக்கொண்டும் இருக்கும் நீங்கள் பொருத்தமான தருணம் ஒன்றை கோட்டைவிட்டு முள்ளந்தண்டில்லாத, நாதியற்ற ஊடகவியலாளர் சமூகமாக மாறிவிட்டது தான் கேவலமானது.
i was thinking of writing about this USELESS REPORTERS LABELLED AS MUSLIMS.........U PUBLISHED........THANK YOU BROTHER
ReplyDelete