Header Ads



தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமைக்கு, கண்ணீர் வடிப்பதால் பயன் இல்லை


 இலங்கையின் 68வது சுதந்திர தின விழாவில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் கண்களில் இருந்து கண்ணீர் வந்ததாக வெளியான செய்தி, அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

சம்மந்தன் ஐயா, சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டிருந்தபோது, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, கண்கள் கனிந்து கண்ணீர் முட்டியதாக வந்த செய்தி எம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. எமது பிள்ளைகள், சிறையிலிருந்து விடுதலை பெறுவது பற்றி கனவு கண்டு கொண்டு, பல தடவைகள் ஏமாற்றமடைந்து விரக்தியுடன் இருப்பது பற்றி நினைத்து வராத கண்ணீர், காணாமல் போன உறவுகளின் நிலையறியாது, நாளும் பொழுதும் கண்ணீருடன் வாழும் ஆயிரமாயிரம் தாய்மார்கள் கதறி அழும்போது வராத கண்ணீர், யுத்தத்தின் இறுதி நாட்களில் அம் மக்களை விடுவிக்க வந்த சந்தர்ப்பத்தை நளுவ விட்டு விட்டோம் என்ற குற்ற உணர்வில் வராத கண்ணீர், தேசிய கீதம் தமிழில் பாடபட்டபோது மாத்திரம் எப்படி வந்தது? 

இது ஆச்சரியமானதே. இதுவரை காலமும் மேலே குறிப்பிட்ட சம்பவங்களில், குறிப்பிடப்பட்டவர்கள் சிந்திய கண்ணீர், ஆறாக பெருக்கெடுக்க கூடியதாகும். சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளாது, ஏதேனும் ஒரு பொது இடத்தில் இருந்து கொண்டு அரசுக்கு கண்ணீரை காட்டியிருந்தால், அரசாங்கத்தின் மனது கரைந்திருக்கும். 

தாங்கள் செய்தது வெறும் கேலிக்குரியது என்பது, மக்களின் கருத்தாக உள்ளது. பதவியை துறப்பதாக கூறியிருந்தாலும், ஓர் பெரிய சாதனையைச் செய்து காட்டினார் என புகழ் கிடைத்திருக்கும் அல்லவா? இன்றைய காலக் கட்டத்தில், வடக்கு, கிழக்கில் ஆயிரக்கணக்கான மாற்று திறனாளிகள், பல்லாயிரம் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், பல அரசியல் கைதிகள் ஆகியோரின் நிலை தொடர்பில், என்றாவது ஒருநாள் சிந்தித்து கண்ணீர் வடித்தது உண்டா என தங்களை கேட்க விரும்புகிறேன். 

இன்றும் பல முன்னாள் போராளிகள் வேலை வாய்ப்புகளுக்காக காத்திருப்பதும், கல்வி தகமை இருந்தும் அவர்களுக்கான தொழிலை பெற்றுக் கொள்ள முடியாதவாறு தத்தளிப்பதையும் கண்டு நான் வருகிறேன். மாற்று திறனாளிகளாக்கப்பட்டு மற்றொருவருடைய உதவியுடன், எஞ்சிய காலத்தை கழிக்கும் பல்லாயிரம் இளைஞர் யுவதிகள், கணவனை இழந்த இளம் பெண்கள் தொடர்பில், தாங்கள் எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்று பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், அரசுக்கு ஏதாவது ஒரு அழுத்தத்தையும் கொடுக்க தங்களால் முடிந்தது? அது உங்கள் கடமை அல்லவா? மக்களின் பசியைத் தீர்க்க என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து செய்யுங்கள். 

அதை விடுத்து சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமைக்கு கண்ணீர் வடிப்பதால், எவ்வித பயனும் மக்களுக்கு, குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் கிடைக்க போவதில்லை என்பதை தாங்கள் உணர்ந்து செயற்படுவீர்கள் என நம்புகிறேன்´ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

2 comments:

  1. Ada aralai peyarntha Sangari Aiya ungalai Thamil makkal eppavo thooki erinthu viddargal. Arikkai arasiyalai viddu sattu oiyu edungo,punniyamai pogum

    ReplyDelete
  2. இவ்வாறான ஒரு தேசிய கீதம் தமிழில் பாட விடாமல் இருந்ததுதான் இனத்துவேசம் உருவாகி நீங்கள் சொன்ன இழப்புகலல்லாம் வந்தது இனியாவது அவ்வாறு வராது என்றொரு நம்பிக்கையில் ஆனந்தக்கண்ணீர் விட்டிருக்கார்கள் ஐயா சம்மந்தன் இதில் என்ன தப்பு.நீங்கள் செய்யவும் மாட்டீர்கள் மற்றவர்களை சமாதானமான முறையில் அணுகி செய்ய விடவும் மாட்டீர்கள்.நீங்க எல்லோரும் எவ்வலவு பேசினாலும் உங்கள் அடிமனத்தில் தமிழ் மக்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதே உங்களின் விருப்பம்.

    ReplyDelete

Powered by Blogger.