இலங்கையர்களும், வைபரும்
தகவல்களை பரிமாறும் எப்ஸாக 2010 ஆம் ஆண்டு வெளியான வைபர் தற்சமயம் பிரபலமான தகவல் பரிமாறும் எப்ஸாக உருவெடுத்துள்ளது. ஏனைய மெசேஜிங் எப்ளிகேஷன்களை விட அதிகமாக ஸ்டிக்கர் மற்றும் (எமோட்டிகான்) உணர்ச்சி சித்திரங்களை கொண்டுள்ளது. தற்போது உலக நாடுகளில் சுமார் 600 மில்லியனுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படும் வைபரின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தெற்காசிய நாடுகளுக்கான பிராந்திய தலைமை அதிகாரி அனுபவ் நாயர் கேசரிக்கு விசேட செவ்வியொன்றை வழங்கினார்.
தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் தற்போது வைபர் பாவனையானது சடுதியாக அதிகரித்து காணப்படுகின்றது. இலங்கையில் உள்ள இளந் தலைமுறையினர் வைபரை வெறும் குறுந்தகவல்கள் அனுப்ப மாத்திரம் பயன்படுத்தாமல் வைபரில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இலங்கையின் இளம் தலைமுறையினர் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் மும்முரமாக இருக்கின்றனர் என அனுபவ் நாயர் தெரிவித்தார்.
வைபரின் தெற்காசிய நாடுகளுக்கான பிராந்திய தலைமை அதிகாரி அனுபவ் நாயரின் முழுமையான செவ்விவருமாறு
கேள்வி : - உலகளவில் இன்று தொழில்நுட்ப வளர்ச்சிகள் வியாபித்து காணப்படும் இத்தருணத்தில் தற்போது உலகநாடுகளில் வைபர் பாவனையாளர்கள் குறித்தான தரவுகளை பற்றி குறிப்பிட முடியுமா?
பதில்: - உலகநாடுகளில் இன்று 664 மில்லியன் மக்கள் வைபரை பயன்படுத்துகின்றனர். இதனடிப்படையில் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் வைபர் பாவனையாளர்களின் தொகையானது அதிகமானதாக காணப்படுகின்றது. அந்தவகையில் தற்போது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 20 வீதமானோர் வைபரை பயன்படுத்துவதோடு பெரும்பாலானோர் வைபர் ஸ்டிக்கரை பயன்படுத்துகின்றனர். மேலும் தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி உலகளவில் 50 வீதமானோர் வைபரை பயன்படுத்துகின்றனர்.
கேள்வி : - தற்போது உலகநாடுகளிடையே வைபர் எவ்வாறான வகையில் பரவலாக்கப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது?
பதில்: வைபர் மென்பொருளானது உலக நாடுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் பயணிக்கும் பாவனையாளர்களை அடிப்படையாக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தவகையில் தெற்காசியாவில் இந்தியா,தென்கிழக்கு நாடுகளில் பிலிப்பைன்ஸ், ரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய ராஜியம், ஜப்பான் ஆகிய நாடுகளில் எங்களது நிறுவனத்தின் கிளைகளானது பரந்தளவில் காணப்படுகின்றது. தற்காலத்தில் வைபர் பாவனையின் அதிகரித்த வளர்ச்சி காரணமாக நாடுகளுக்கிடையே வர்த்தக வாய்ப்புக்கள் மக்களிடையே அதிகரித்த போக்கை எடுத்து காட்டுகின்றது. மறுபுறம் உலகநாடுகளிடையே தொடர்பாடல் வசதிகளின் துரித வளர்ச்சிக்கு முக்கிய ஊடகமாகவும் வைபர் பயன்படுத்தப்படுகின்றது. தெற்காசிய நாடுகளில் தற்போது வைபர் பாவனையாளர்களின் எண்ணிக்கையானது வெகுவாக அதிகரித்துள்ளது.
கேள்வி : - இத்துறையில் உள்ள ஏனைய மென்பொருள்களின் போட்டித்தன்மை தற்போது உலக சந்தையில் எவ்வாறு வியாபித்துள்ளது என்பதனை விவரிக்க முடியுமா?
பதில்:- இலங்கையில் உள்ள app annie என்ற இணையத்தளத்தில் கையடக்க தொலைபேசியில் மென்பொருள்களை பயன்படுத்தப்படும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மென்பொருள்கள் தரவரிசைப்படுத்தப்படும். இதில் வைபர் இலங்கையில் முன்னிலையில் உள்ளது. ஏனைய மென்பொருள்களுடன் ஒப்பிடும் போது நாம் தரமான நிலையிலேயே உள்ளோம். நாம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றோம் என்பது வைபர் பாவனையாளர்களின் எண்ணிக்கையிலிருந்து புலப்படுகின்றது.
நாங்கள் எவ்வாறு வளர்ச்சியடைந்து இலங்கை மக்களிடையே நாங்கள் எவ்வாறு அவர்களின் விருப்பங்களை நிவர்த்தி செய்து அவர்களிடையே தொடர்ந்து செல்லுவதே எங்கள் போட்டி. ஒரு வைபர் பாவனையாளர் வைபரை விட்டு அகலாமல் தொடர்ந்து அதை பயன்படுத்த வைப்பதே எங்கள் நோக்கம் அதுவே எங்கள் போட்டி. எனவே ஏனைய இலவச மென்பொருள்களுடன் போட்டித்தன்மை காணப்பட்டாலும் எமது தனித்துவத்தை நிலைநாட்டிகொண்டே இருக்கின்றோம். எனவே இலகுவாக போட்டியிடக் கூடிய நிலையில் நாம் எமது செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுக்கின்றோம்.
கேள்வி : - public chat தொடர்பில் தெளிவுப்படுத்த முடியுமா?
பதில்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைபர் மென்பொருளின் கீழ் (public chat) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் உலகநாடுகளிடையே பிரசித்திப்பெற்ற நபர்கள் தங்கள் ரசிகர்களிடமிருந்து கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கான இதனை பயன்படுத்த கூடிய வசதியினை இது பெற்று கொடுக்கின்றது. குறிப்பாக புகழ்பெற்ற நபர்களின் வாழ்கையில் மறைமுகமான விடயங்கள் குறிப்பாக அவர்களின் உண்மையான வாழ்க்கை வட்டத்தை பிரதிபலிப்பதாக இந்த (public chat) காணப்படுகின்றது.
இலங்கையினை பொறுத்தவரை இராஜ், பாதிய மற்றும் சந்தோஷ் போன்ற பிரபல பாடகர்கள் மற்றும் யுரேனி ரோஷிக போன்ற நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இதனை பயன்படுத்துகின்றனர். அதாவது பிரபலங்கள் தமது எண்ணங்களை இதன் பகிர்ந்து கொள்கின்றனர். உதாரணமாக பாதியா சந்தோஷ் அண்மையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவை பதிவு செய்ய முன்னர் படப்பிடிப்புக்களின் போது எடுக்கப்பட்ட படங்களை public chat இல் பதிவு செய்திருந்தார். இது அனைவராலும் லைக் செய்யப்பட்டது. இவ்வாறு மறைமுகமான அனுபவங்களை ரசிகர்களிடையே பிரபலங்கள் பகிர்ந்துகொள்ள public chat உதவியாக உள்ளது.
கேள்வி : - இலங்கையில் எதிர்வரும் காலங்களில் நீங்கள் அடைய திட்டமிட்டுள்ள இலக்குகள் தொடர்பில் குறிப்பிடுங்கள்?
பதில்: - இலங்கையில் முக்கியமான மூன்று பிரதேசங்களை தற்போது இனங்கண்டுள்ளோம். அந்தவகையில் குறிப்பிட்ட இந்த பிரதேசங்களில் வைபரை பயன்படுத்தும் பாவனையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சில செயற்பாடுகளை முன்னெடுக்க பாரிய அளவிலான மூதலீடு திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.
கேள்வி : - வைபர் வலையமைப்பு முகவர் நிலையமொன்றை இலங்கையில் அமைக்க திட்டமிட்டுள்ளீர்களா?
பதில்: இல்லை, நாங்கள் தனி ஒரு நபரிடம் தங்கி நிற்காமல் வெவ்வேறு தனியார் துறை கம்பனிகளுடன் இணைந்து எங்களினது உற்பத்திகளை மக்களிடையே கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். வளர்சியடைந்து வரும் தொழில்நுட்பத்தில் நாங்கள் மக்களின் தேவைகளை இனங்கண்டு மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு எங்களின் சேவையினை கொண்டு செல்வதே எங்களின் இலக்கு.
கேள்வி : வைபரை பயன்படுத்தி எவ்வாறு ஒரு நிறுவனம் தமது விளம்பரங்களை சந்தைபடுத்த முடியும் என ஆலோசனை கூற முடியுமா?
பதில்: - இவை தொடர்பாக குறிப்பிட வேண்டுமாயின் அதற்கு பல்வேறு ரீதியிலான உதாரணங்களை குறிப்பிடமுடியும் அந்தவகையில் இவற்றில் ஒன்று (public chat) அதன் மூலம் தங்கள் பாவனையாளர்களிடம் தங்கள் புதிய உற்பத்தி, புதிய வசதிகள் மற்றும் தங்களின் உற்பத்தியை அறிமுகம் செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் காணப்படுகின்றன. மறுபுரம் பாவனையாளர்கள் தங்களின் நிகழ்சிகள் மற்றும் விருப்பமான வடிவில் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்குக்காக உருவாக்கும் sticker viber மூலமாக அதனை தரவேற்றி அந்தவகையிலும் இலாபத்தை பெற்று கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
கேள்வி : - எதிர்வரும் காலங்களில் வைபர் வலையமைப்பில் உள்வாங்க திட்டமிட்டுள்ள புதிய சேவைகள் தொடர்பில்?
பதில்: - எமது வலையமைப்பின் கீழ் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதில் பணப்பரிமாற்ற சேவையினை விஸ்தரித்தல் உள்ளிட்ட சில விடயங்களில் மாற்றங்களை உள்வாங்கி அதனை விரைவில் செயற்படுத்துவதோடு மக்களின் தேவைக்கு ஏற்றவறான சேவைகள் மூலமாக தொடர்சியாக மக்களை திருப்திப்படுத்துவோம்.
கேள்வி : - இறுதியாக இலங்கை வாழ் வைபர் பாவனையாளர்களுக்கு நீங்கள் குறிப்பிட விரும்புவது?
பதில்: உலக சந்தைகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மிக விரைவாக வைபர் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எம்மீது நம்பிக்கையினை கொண்டு எமது வலையமைப்பினை பயன்படுத்தும் எங்களது அனைத்து பாவனையாளர்களுக்கும் எங்களது நிறுவனத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம். இலங்கையின் இளந் தலைமுறையினர் வைபரை வெறும் குறுந்தகவல்கள் அனுப்ப மாத்திரம் பயன்படுத்தாது அதில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இலங்கையின் தற்போதைய இளைய சமூதாயத்தினர் நவீன தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவது சிறந்த விடயம்.
Post a Comment