Header Ads



"அக்கறையற்ற முஸ்லிம் சமூகம்"

-மொஹமட் பாதுஷா-

புறப்பட்டுப் போய்விட்ட பஸ்ஸுக்குக் கைகாட்டுகின்ற, அதற்குப் பின்னால் நெடுந்தூரம் ஓடிவிட்டுத் திரும்பி வருகின்ற ஒரு சமூகமாக இலங்கை முஸ்லிம்களை இலகுவாக அடையாளப்படுத்தலாம். பஸ் தரிப்பிடத்தின் அழகில் மயங்கி, அதற்குள் உறங்கி விடுவதன் மூலம், போகவந்த பயணத்தை மறந்துவிடுகின்ற ஓர் அனுபவமில்லா பயணியை போல, சின்னச் சின்ன விடயங்களில் திளைத்திருக்கின்ற காரணத்தால், பெரிய பெரிய சந்தர்ப்பங்களை முஸ்லிம் சமூகம் தவறவிட்டுக் கொண்டிருக்கின்றது. இப்போது, தேசிய அரசியலில் பல முக்கிய விடயதானங்கள் பேசப்படுகின்றன. அரசியலமைப்பு மீளுருவாக்கம், தேர்தல் முறைமை மறுசீரமைப்பு, வடக்கு - கிழக்கு இணைப்பு, முஸ்லிம் மாகாண அலகு போன்ற பல பொறிமுறைகள் குறித்த உரையாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இவையெல்லாம் வரைவிலக்கண ரீதியாக ஒன்றுக்கொன்று எவ்வாறு வேறுபடுகின்றன, அவற்றுக்கிடையில் இருக்கும் இடைத்தொடர்பு என்ன என்பது குறித்த அறிவும் தெளிவும் 90 சதவீதமான முஸ்லிம் சாமானியர்களிடத்தே கிடையாது. மக்கள் இவ்வாறு தெளிவில்லாமல் இருக்கின்றார்கள் என்பதற்காக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோ அல்லது ஏனைய சிறு முஸ்லிம் கட்சிகளோ இவற்றை மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அன்றேல், தாமாக விளங்கிக் கொண்டு அது தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் தெரியவில்லை. 'குளியலறைப் பாடகர்கள்' போல, எங்காவது ஒரு மூடிய அறைக்குள் பேசிவிட்டு, வெளியில் வந்து சிங்கள தேசியத்தை திருப்திப்படுத்தும் முயற்சியையே எல்லா முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் செய்து கொண்டிருக்கின்றனர். மேலே சொல்லப்பட்ட விடயங்களுக்கு எல்லாம் புதிய உத்தேச அரசியலமைப்பே அடிப்படை பொறிமுறையாக இருக்கப் போகின்றது என்பது மிகவும் கவனத்துக்குரியது. புதிய அரசியலமைப்பை அடிநாதமாகக் கொண்டே ஏனைய கருத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. எனவே, இப்போதைக்கு அவசியமும் அவசரமுமான தேவை என்பது, முஸ்லிம்கள் புதிய அரசியலமைப்பு பற்றி தமக்குள் கலந்துபேசி, கருத்துக்களை முன்வைப்பதாகும். இவ்வாறான ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க சந்தர்ப்பம் ஏற்படும் என்பது கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே மக்களுக்கு தெரிந்திருந்தது. எனவே, மக்கள் பொருத்தமானவர்களை தெரிவு செய்திருந்தால், எல்லாவற்றையும் 'அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்' என்று அவர்கள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு பார்வையாளர்களாக இருக்க முடியும். இருப்பினும், கடந்த தேர்தலில் சரியான வேட்பாளர்களை நிறுத்துவதில் முஸ்லிம் கட்சிகளும் பெரும்பான்மை கட்சிகளும் தவறிழைத்தன. தமது ஊரைச் சேர்ந்தவர் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட வேண்டும், தம்முடைய ஆதரவைப் பெற்ற உறுப்பினர் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்ற அற்ப ஆசையை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கொண்டிருந்தமையால் உருப்படியான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதில் சமூகமும் தவறிழைத்திருக்கின்றது. ஆதலால், மக்கள் பிரதிநிதிகளைள நம்பியிருக்க முடியாது. அநேகமான முஸ்லிம் தலைமைகளும் அரசியல்வாதிகளும் மக்களுக்குக் காட்டுகின்ற முகம் வேறு, அவர்களது நிஜமான மறுபக்கம் வேறு என்பதை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். பிச்சைக்காரனின் புண்ணைப் போல, முஸ்லிம்களிடையே இருக்கின்ற பிரச்சினைகளை தீர்க்காமல் அவற்றை அப்படியே வளரவிட்டு அதிலிருந்து பிச்சைகளை சம்பாதித்துக் கொள்ள விரும்புகின்ற ஆட்களையே இன்று தலைவர்கள் என்றும் தளபதிகள் என்றும் இந்த சமூகம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. உத்தேச அரசியலமைப்பு தொடர்பான முன் யோசனைகளை முன்வைக்குமாறு அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது. பொது மக்களின் கருத்துக்களை அறிவதற்காக நிர்ணயிக்கப்பட்ட தினங்களில் உயர்மட்ட குழுவொன்று பிரதேசங்களுக்கு விஜயம் செய்கின்றது. இச் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களும் அவர்களது அரசியல்வாதிகளும் கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அரசியலைப்பின் முக்கியத்துவம், தமிழ் சமூகத்தால் நேரடியாகவே உணரப்படுவதால் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி தமிழ் மக்களும் மிகவும் விழிப்புடன் இருக்கின்றனர். சிங்கள தேசம் என்ன நினைத்தாலும் பரவாயில்லை, தமது உரிமைகளை வென்றெடுப்பது என்ற ஒற்றை முடிவில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். அரசியலமைப்பு மீளுருவாக்கம் மற்றும் ஏனைய விடயங்களை தொடர்பில் கட்டமைக்கப்பட்ட செயலமர்வுகள், கருத்துக் கணிப்புக்கள் என்பவற்றை நடாத்தி, கிட்டத்தட்ட இறுதித் தீர்மான ஆவணத்தை அவர்கள் கையில் வைத்துக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்களிடையே இந்த இலட்சணம் கிடையாது. அரசாங்கத்தை பகைத்துக் கொள்ளக் கூடாது என்றும், அதன் ஊடாக தமக்குக் கிடைக்கின்ற சலுகைகளை இழந்துவிடக் கூடாது என்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் நினைப்பதே இதற்கு முழு முதற் காரணமாகும். இது பற்றி கேட்டால், 'பிரிவினைவாதம் குழப்பக் கூடாது' என்று சொல்வார்கள். முஸ்லிம் சமூகததுக்குள் இருந்த அரசியல் ரீதியான ஒற்றுமையைக் குலைத்து, மக்களிடையே பிளவை உண்டுபண்ணிய சிறிய, பெரிய முஸ்லிம் அரசியல்வாதிகள், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை பற்றி பேசுவது நகைப்புக்கிடமான அரசியலாகும். இது விடயத்தில் பாரிய பொறுப்பை சுமந்திருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பொடுபோக்குத் தனமாக செயற்படுவதை அவதானிக்கலாம். இது இவ்வாறிருக்த்தக்ககதாக, அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப்; ஹக்கீம், 'சிறுபான்மை மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும்' என்று  நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். நல்லது, ஒரு முக்கியமான கருத்தை உயரிய சபையில் மு.கா. முன்வைத்திருக்கின்றது. இது பாராட்டப்பட வேண்டியது. ஆனால், தேர்தல் வெற்றியை கரிசனைக்குரிய விடயமாகக் கொண்ட தேர்தல் முறைமை மறுசீரமைப்பை விடவும், முஸ்லிம்களின் எதிர்கால இருப்பை ஒட்டுமொத்தமாக நிர்ணயம் செய்யப் போகின்ற புதிய அரசியலமைப்பு குறித்துக் கவனம் செலுத்துவது இன்றைய காலகட்டத்தில் முக்கியமானது. எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இதுவே காணப்படுகின்றது. அத்துடன் உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக கருத்துக்களை முன்வைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காலப்பகுதியாகவும் இது இருக்கின்றது. இப்போதைய யதார்த்தத்தின் படி நோக்கினால், முறையாக ஆவணப்படுத்தப்பட்ட, மக்கள் நலனை முன்னிறுத்திய, காத்திரமான யோசனைகளை முஸ்லிம் தலைமைகள் மற்றும் அரசியல்வாதிகள் முன்வைப்பார்கள் என்று கருத முடியாது. புதிய அரசியலமைப்பே, அரசியல் தீர்வுத் திட்டம், வடக்கு - கிழக்கு இணைப்பு விவகாரம் தொடர்பான பல்வேறு அடிப்படை நியதிகளை கொண்டிருக்க போகின்றது. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பல விடயங்கள் தொடர்பிலான தீர்மானங்கள் புதிய அரசியலமைப்பின் பிரகாரமே கையாளப்படப் போகின்றன. தீர்வுத் திட்டத்துக்குப் புறம்பாக, தேர்தல் முறைமை மறுசீரமைப்பு, வடக்கு - கிழக்கு இணைப்பு விவகாரம், முஸ்லிம் மாகாண அலகு போன்ற பல கருத்திட்டங்களும் இதில் உள்ளடக்கம். மு.கா. தலைவர் ஹக்கீம், கிழக்கு மாகாணத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்தாலும் அவர் கிழக்கைச் சேர்ந்த அரசியல்வாதி அல்ல. கண்டியை தளமாகக் கொண்டு செயற்படுபவர். எனவே, உத்தேச அரசியலமைப்பு பற்றிய அவரது கோரிக்கைகள் மிகவும் சூதானமானதாகவே இருக்கும். அரசாங்கத்துக்கும் சிங்கள மக்களுக்கும் நோகாமல் அறிக்கை விடவும் முன்மொழிவுகளை முன்வைக்கவுமே அவர் பிரயத்தனப்படுவார். ஆகவே, அவராலும் அவரது ஏக கட்டுப்பாட்டில் இருந்து விடுபடாத முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய உறுப்பினர்களாலும் எந்த எல்லை வரை செயற்பட முடியும் என்பது உறுதியாக தெரியவில்லை. மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஆக்ரோஷமான அறிக்கைகளை விடுபவர் என்றாலும் கிழக்கில் அவரது கட்சிக்கான மக்கள் ஆதரவு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கின்ற சூழ்நிலையில், கிழக்கு மக்கள் விடயத்தில் மிக அக்கறை செலுத்துவார் என்றோ அரசியலமைப்பு உருவாக்கத்தில் காத்திரமான செல்வாக்கு செலுத்துவார் என்றோ எதிர்பார்ப்பது கடினம். அதாவுல்லா போன்ற வேறு அரசியல்வாதிகள் இதுபற்றி சிந்தித்திருப்பார்களா என்பது கூட சந்தேகமாகவே உள்ளது. அப்படியென்றால், இதனை செய்வதற்கான பொறுப்பு மக்களுக்கு உரித்தாகின்றது. எதிர்கால தலைமுறைகளை ஆளப்போகும் ஓர் அரசியலமைப்பு என்பதால் அது நிகழ்கால தலைமுறையின் கடமையுமாகும். இன்றைய அரசியல் நிலைமை மற்றும் எதிர்காலம் பற்றியெல்லாம் மக்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் சமூகம் ஒரு நாதியற்ற சமூகமாக ஆனதற்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலைக்கனம் தலைக்கேறி, தம் மனம்போன போக்கில் இன்று செயற்பட்டுக் கொண்டிருப்பதற்கும் முஸ்லிம் சமூகத்தில் இருக்கின்ற புத்திஜீவிகளும் முக்கிய காரணம் என்பதை மறந்து விடக் கூடாது. கையால் கிள்ளி எறிய வேண்டியதை உரிய நேரத்தில் செய்யாமல் இன்று கோடரி தேட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்றால், அதற்கு ஹக்கீமும், ரிஷாட்டும், அதாவுல்லாவும் மற்றுமுள்ள அரசியல் வியாபாரிகள் மட்டுமே காரணம் எனக் கூறி விட முடியாது. கைநிறைய உழைத்துக் கொண்டு தாமுண்டு தமது பாடுண்டு என்று, சமூக அக்கறையற்றவர்களாக இருக்கும் உள்ளூர் பிரமுகர்கள். வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஆய்வாளர்கள், பொறியியலாளர்கள், உலமாக்கள், மார்க்க பெரியார்கள், நலன்விரும்பிகள் என எல்லோருமே காரணம். எனவே  அதற்கு பிராயச்சித்தம் தேட வேண்டியிருக்கின்றது. அதன் ஒரு கட்டமாக, இன்றைய காலகட்டத்தில் அவசியமான பணியாக கருதப்படும் உத்தேச அரசியலமைப்பு பற்றியதான கலந்துரையாடல்கள், தெளிவுபடுத்தல்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. எல்லா ஊர்களிலும் சந்திப்புக்களை ஏற்பாடு செய்து அதில் மக்களை கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். மக்களின் எண்ணங்களை சேகரித்து அவற்றை ஆவணமாக்கி, அதன் சாரம்சத்தை யோசனையாக, அரசியலமைப்பு தொடர்பாக கருத்தறியும் குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காத்தான்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் இங்கு பாராட்டப்பட வேண்டியது. இதுபோல பல கலந்துரையாடல்கள் அங்குமிங்கும் சிறிய அளவில் இடம்பெற்றாலும் அவை மூடிய அறைகளுக்குள் மந்திரம் ஓதுவதாக இருக்காமல், மக்கள் களரியில் பகிரங்கமாக இடம்பெறும் நிகழ்வாக இருக்க வேண்டும். தற்போது மக்களின் கருத்தறியும் பணி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நல்லநேரம் பார்த்துக் கொண்டிருக்காமல், உடனடியாக மக்களை தெளிவுபடுத்த வேண்டும். இதில் எல்லா படித்த மக்களும், பாமரர்களும், புத்திஜீவிகளும் தவறாது கலந்து கொண்டு தம்முடைய அபிப்பிராயங்களை பதிவு செய்ய வேண்டும். பிள்ளைகளுக்கு உறுதியான வீடு கட்டுவதை விட, பேரப்பிள்ளைகளுக்கு சொத்து சேகரித்து வைப்பதை விட, நல்லதொரு அரசியலமைப்பு மிக அவசியமானது என்பது நினைவிருக்கட்டும். 

1 comment:

  1. It is therefore time now a "New Political Force" or an Alternate Sri Lanka Muslim Political Entity" should emerge as an alternate to the SLMC, ACMC, NMC,NUA,MULF and the Muslim camps of the UNP and the SLFP, to lead the Sri Lankan Muslim Community's POLITICAL DESTINY, Insha Allah. The Sri Lanka Muslim Youth should begin to give thought to this, Insha Allah. With regards to the North and East, based on that structure, the Muslim community too should be given an equal stakeholder status in the whole process. That is our view and it doesn’t matter if you call it unitary or federal but our main demand is that the Muslims too should be recognised as a separate community which is another reality any government should start to consider. The Muslims should in the East have their own Provincial Council, in that case, is still another reality to be considered. The areas can be connected, should have separate Muslim majority power-sharing structure comprising non-contiguous areas similar to the Pondicherry model in India, can be the best political solution under a new constitution. Whatever said and done and the Sinhala politicians are squabbling over whether it is a "Yahapalaya government" or a "Hybrid government of the SLFP and UNP" the government of President Maithripala Sirisena should not forget that, if not for the Muslim votes and the Tamil votes adding to the UNP vote bank, HE. Mahinda Rajapaksa would have NOT been defeated. Muslim politicians and journalists living in Colombo, fail to understand the need for our political aspirations needed in the North and East. If the Tamils are given a Federal enclave or separate political territory, then the Muslims should also be treated equally and a territory for the governance of the Muslims should also be given. It is the Muslims in the North and East who got the brunt of the atrocities of the LTTE, Tamil militant groups, the IPKF and to some extent, the Security forces. The Muslim politically engaged/active masses, intellectuals, youth, professionals, journalists, Ulema and those concerned about the Muslim community, should rise to the cause now, Insha Allah. The Jaffana Muslims.com should be appreciated for allowing comments/opinions in English also to be published in their webpages.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP stalwart and Convener - The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.