உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை உடனடியாக நடத்தவும் - சகாவுல்லா
(எம்.இஸட்.ஷாஜஹான்)
மக்கள் புதியதொரு தேர்தல் முறையை கேட்கவில்லை. அவர்களுக்கு தமது தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள பிரதிநிதிகளே தேவைப்பட்டனர். எனவே உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை பிற்போடாமல் தொகுதி முறையிலோ அல்லது விகிதாசார முறையிலோ அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லா கூறிளார்.
மேல் மாகாண சபை அமர்வு நடைபெற்ற போது உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை பிற்போடாமல் உடனடியாக நடத்துமாறு கோரி மாகாண சபை உறுப்பினர் மெரில் பெரேரா கொண்டு வந்த பிரேரணையில் தனது கருத்தை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லா அங்கு தொடரந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
இந்த நாட்டில் ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என சகலரும் தெரிவு செய்யப்படுவதற்கு பிரதான காரணம் அடிமட்டத்திலிருந்து செயல்படும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளாகும். பிறகு அரசியலில் உயர்ந்த இடங்களுக்கு சென்றபிறகு உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளை மறந்து செயற்படுவதையிட்டு நான் கவலையடைகிறேன்.
இங்கு உரையாற்றிய எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் கடந்த அரசாங்கம் தேர்தல் எல்லையை தீர்மானித்த விதம் தொடர்பில் குற்றச்சாட்டு தெரிவித்தனர். அதனை நான் முழுமையாக மறுக்கிறேன். நானும் மாநகர சபையிலிருந்து மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினராவேன். கடந்த அரசாங்கம்எல்லை நிர்ணயங்களை மேற்கொள்ளும்போது அதிகாரிகள் எம்மிடம் அதுதொடர்பாக கருத்து கேட்கவில்லை. எம்மிடமே இதுதொடர்பாக ஆலோசனைகளையும் கருத்துக்களையும கேட்டிருக்க வேண்டும். நாங்களே இது தொடர்பாக நன்கு அறிந்தவர்கள். பிரதேச மக்களினதும் கிராம மக்களினதும் குறைகளை நன்கு அறிந்து அவற்றை தீர்த்து வைப்பவர்கள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களே. காரணம் அவர்களே மக்களுக்கு மிக நெருக்கமானவர்கள்.
குப்பைக்கூலங்கள், வீதி விளக்குகள் தொடர்பான பிரச்சினைகளையும் மக்கள் இவர்களிடமே முறையிட்டு தீர்வுகளைப் பெற்றுக்கொள்கின்றனர். மக்கள் புதியதொரு தேர்தல் முறையை கேட்கவில்லை. அவர்களுக்கு தமது தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள பிரதிநிதிகளே தேவைப்பட்டனர். எனவே உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை பிற்போடாமல் தொகுதி முறையிலோ அல்லது விகிதாசார முறையிலோ அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். சுயாதீன தேர்தல் ஆணைக் குழு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Post a Comment