நல்லாட்சி அரசாங்கம், பொதுமக்கள் விரோத பாதையில் பயணிக்கிறது - சுனந்த
நல்லாட்சி அரசாங்கம் படிப்படியாக மக்கள் விரோதப் போக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ஜனநாயக செயற்பாட்டாளரும், மூத்த பத்திரிகையாளருமான சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிங்கள இணையத்தள சஞ்சிகையொன்றுக்கு அவர் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். குறித்த கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிக நீண்டகாலமாக ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
2002-2004 ஆண்டுகளுக்கிடையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவைக் கலைத்த அவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றையும் சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில் இம்முறை பதவிக்கு வந்த பின் அண்மையில் இனவாத ஊடகங்களுக்கு எதிராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரத்தக் காட்டேறிகள், அரக்கர்கள் போன்ற கடும் வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் கண்டனம் தெரிவித்திருந்தார். இனவாத ரீதியில் பேனையைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் பிரதமரின் கண்டனம் நியாயமானது.
அதே நேரம் பிரதமர் தொடர்ந்தும் அதே போக்கைக் கையாள முற்படுவது ஊடகங்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும். அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது.
பிரதமர் முதலில் அரச ஊடகங்களில் இருக்கும் கூலிக்கு மாரடிக்கும் ஊடகவியலாளர்களை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ஊடகங்களுக்கு ஓரளவு கருத்துச் சுதந்திரம் இருப்பதை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.
மேலும் இந்தியாவுடனான பொருளாதார ஒப்பந்தத்தை எதிர்த்து வீதிக்கு இறங்கி போராட்டங்களை நடத்துவோருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுங்கட்சியும் ஆதரவாளர்களை வீதிக்கு இறக்கவுள்ளதாக பிரதமர் அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. பொதுமக்களின் கருத்துக்களை அச்சுறுத்தி அடக்க முயற்சிப்பதற்கு ஒப்பானது.
அத்துடன் அரச மருத்துவர் சங்கம் அமைச்சர் ஹரினுக்கு எதிராக பதுளையில் மேற்கொண்ட வேலைநிறுத்தத்தின்போது இந்த எதிர் ஆர்ப்பாட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இனி அரசாங்கத்தின் ஆதரவுடன் நாடுமுழுவதும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நம்பலாம்.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலமாக நல்லாட்சி அரசாங்கம் பொதுமக்கள் விரோத பாதையில் பயணிக்க முற்படுகின்றமை புலப்படுகின்றது என்றும் சுனந்த தேசப்பிரிய தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
Post a Comment