Header Ads



"பௌஸியின் வாக்குமூலம்.."

புதிய கட்சியொன்றின் தேவை நாட்டில் தற்போது கிடையாது,மக்கள் அதை விரும்பவுமில்லை. மஹிந்த ராஜபக்சவும் அவரது சகாக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் அவர்கள் அரசியல் அநாதைகளாகி விடுவர் என அமைச்சர் ஏ. எச். எம். பௌஸி தெரிவித்தார்.

18 வது திருத்தத்தைக் கொண்டு வந்ததோடு அவரது அழிவு ஆரம்பமாகிவிட்டது. இப்போதும் அவர் தவறான வழியிலேயே செல்கிறார். சிறுபான்மை மக்களின் 14 இலட்சம் வாக்குகள் இல்லாமல் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதை அவர் உணர வேண்டும் என்றும் அமைச்சர் பௌஸி தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் தொடர்பில் நேற்றுத் தகவல் திணைக்களத்தில் விஷேட செய்தியாளர் மாநாடொன்று இடம்பெற்றது இம்மாநாட்டில் விளக்கமளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்மாநாட்டில் தொடர்ந்து விளக்கமளித்த அமைச்சர்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இடையில் சில தவறான வழிகளை பின்பற்றி விட்டார். இப்போதும் தவறான வழியிலேயே செல்கின்றார். அவரது வீழ்ச்சிக்கு அதுவே காரணம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பின்றி அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியாதவர்களே புதிய கட்சியொன்றை உருவாக்குமாறு அவரைத் தூண்டுகின்றனர். அதனை வைத்துக்கொண்டே மாற்றுக் கட்சியொன்றை மக்கள் கேட்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறிவருகிறார்.

நாட்டில் எந்த மக்களும் தனிக்கட்சியொன்று தேவையென்று கோரவுமில்லை அதனை விரும்பவுமில்லை என்பதே உண்மை. ஜனாதிபதியின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்திக்கொண்டு ஐ. தே. க வைத் தோற்கடிப்பதே மக்களின் எதிர்பார்ப்பதாக உள்ளது.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிபெறச் செய்வதே மஹிந்த ராஜபக்சவின் எதிர்பார்ப்பாகவுள்ளது. அவரது நடவடிக்கைகள் அவ்வாறாகவே உள்ளன. அதனால்தான் புதிய கட்சி பற்றி அவர் பேசுகிறார்.

புதிய கட்சி உருவானால் மக்கள் அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதும் அவரது ஆட்சியின் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவராலேயே எதிர்காலத்தை சிறப்பாக முன்னெடுக்கவும் முடியும்.

18 வது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்ததே முன்னாள் ஜனாதிபதியின் முதலாவது வீழ்ச்சிக்கும், அவரது அரசியல் வாழ்க்கை சீரழிவதற்கும் காரணமாகியது.

வரலாற்றில் வேறு எந்த ஜனாதிபதியும் செய்யாததை 18வது திருத்தத்தினூடாக செய்தார். ஜே. ஆர், சந்திரிகா போன்றவர்கள் இரண்டு முறை போட்டியிட்டார்கள் பின்னர் பிறருக்கு சந்தர்ப்பம் வழங்கி வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள்.

எனினும் மஹிந்த ராஜபக்ச கட்சியில் எத்தனையோ சிரேஷ்ட உறுப்பினர்கள் இருந்தபோதும் அவரது குடும்பத்தில் சகோதரர்களுக்குக் கூட ஜனாதிபதி பதவி போய்விடக்கூடாது என்று எண்ணினார்.

காலம் முழுவதும் தாமே ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்ற சுயநலத்திலேயே 18வது திருத்தத்தைக் கொண்டு வந்து பலவந்தமாக அதனை நிறைவேற்றினார். அவரது அழிவு அங்கிருந்து தான் ஆரம்பித்தது.

45 வருடம் கட்சிக்கு உழைத்த எனக்கு சிரேஷ்ட அமைச்சர் என்ற பதவியை வழங்கினார். என்னைப் போன்றே சிரேஷ்ட அமைச்சுப் பதவி பெற்ற 10 பேர் இருந்தனர். அவர்களும் பெரும் அதிருப்தியிலேயே இருந்தனர். நிமல் சிறிபால டி சில்வா, நாவின்ன சமிந்த திசாநாயக்க போன்றோர்களும் பெரும் அதிருப்தியிலேயே இருந்தனர்.

எம்மைப் போன்றோருக்கு எதிராக செயற்படுவதற்காக தொகுதி அமைப்பாளர்களாக புதியவர்களை நியமித்து எம்மைப் பலவீனப்படுத்தினார். அவர்களுக்கு நல்ல பதவிகளையும் சலுகைகளையும் மஹிந்த வழங்கினார்.

மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்றுப்போவார் என்பதை நாம் முன்கூட்டியே அறிந்திருந்தோம் சிறுபான்மை மக்களின் 14 லட்சம் வாக்குகள் கிடைக்காவிட்டால் தோல்வி நிச்சயம் என்பதை நாம் உணர்ந்திருந்தோம். தேர்தலுக்குப் பின் அரசியலிருந்தே விலகியிருக்கவே பலரும் தீர்மானித்திருந்தனர்.

எனினும் எமக்குக் கிடைக்கவுள்ளதை எவராலும் தடுக்க முடியாது. நாம் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆதரவளித்தோம். பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு அமைச்சுப் பதவிகளைத் தந்தார்.

மஹிந்த ராஜபக்ச இப்போது புது கட்சி பற்றி பேசுகிறார். அதற்கு நாட்டில் அவசியம் கிடையாது. தொடர்ந்து அவரும் அவரது குடும்பத்தினரும் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியில் ஜனாதிபதியுடன் இணைந்து செல்வதே அவர்களின் எதிர்கால அரசியலுக்கு உறுதுணையாக முடியும்.

3 comments:

  1. நீங்கங் எல்லாம் சிறு பான்மை யின மக்கள் என்று பேசுவதற்கு தகுதியற்றவர்.முதல் யாருடன் இருந்தீர்கள்.

    ReplyDelete
  2. எப்படியேனும் நம்மவர்கள் தமது பதவிகளைத் தப்ப வைத்துக்கொண்டு வண்டியை ஓட்டுகிறதில் வல்லவர்கள்!

    ReplyDelete
  3. இவரும் அஸ்வரும் சிறுபான்மையை சார்ந்தவர்கள் என்று அவர்களே நினைத்துள்ளார்கள் ஆனல் மக்கள் மத்தியில் அப்படியான சிந்தனை எடுக்கப்பட்டு ரெம்ப காலமாகிவிட்டது

    ReplyDelete

Powered by Blogger.