சண்டித்தனம் பண்ணும் ரணில், ஜீரணித்துக்கொள்ளாத மைத்திரி
-நஜீப் பின் கபூர்-
இந்த உலகில் நமக்குள்ள மிக நெருங்கிய உறவு முறை யார் என்று வினா எழுப்பினால் எந்த ஒரு மனிதனும் தாய் என்றுதான் ஆரம்பிப்பான். அந்த வகையில், நமது நாட்டுக்குள்ள மிகவும் நெருக்கமான நாடு எது என்று கேட்டால் விரும்பியோ விரும்பாமலோ இந்தியா என்றுதான் உச்சரிக்க வேண்டி இருக்கின்றது.
இதற்காக எண்ணற்ற நியாயங்களை அடுக்கிக் கொண்டு போகலாம். இயக்கர், நாகர் அதாவது இன்றுள்ள வேடுவர் சமூகத்தைத் தவிர்த்து இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து இனங்களினதும் பூர்விக பூமி இந்தியா. இங்குள்ள பிரதான மதங்களான பௌத்தம், இந்து ஆகியவற்றின் பிறப்பகமும், நமது மொழிகளின் பூர்வீகமும் இந்தியா. அதற்கு அப்பால் இன்றும் நமக்கு அதிகமான உறவுகளைக் கொண்டிருக்கின்ற நாடும் இந்தியா. நமது கலை காலச்சாரம் எல்லாம் அடிப்படையில் இந்தியா! இந்தியா! என்று தான் இருக்கின்றது. எனவே நல்லதற்கும் கெட்டதற்கும் இலங்கையின் முதல் தெரிவு இந்தியா என்று நாம் குறிப்பிட்டால் அதற்கு மாற்றுக் கருத்துக்களை எவராவது முன்வைக்கின்றார்கள் என்றால் அவர் வம்பு பண்ணுகின்றார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இலங்கை ஒரு தீவாக இருப்பதனால் இதன் தாக்கங்களை ஓரளவுக்கு இந்தியாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடிந்திருக்கின்றது. அதிஷ்டமாகவோ துரதிஷ்டவசமாகவோ இந்தியாவுடன் இலங்கை நேரடித் தரைவழித் தொடர்புகளைக் கொண்டிருந்தால் நிச்சயமாக இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலம் என்ற நிலையில் தான் இருந்திருக்க முடியும். தீவாக இருப்பதால் தனது தனித்துவத்தை இலங்கைக்கு உறுதிப்படுத்திக் கொள்ள முடியுமாக இருந்தாலும். அரசியல் ரீதியில் குறிப்பாக தென்னிந்தியாவின் ஆதிக்கம்-ஆக்கிரமிப்பு அவ்வப்போது இலங்கை மீது நிகழ்ந்திருக்கின்றது. அதேபோன்று இலங்கையில் வலுவான அரசர்கள் இருந்த காலங்களில் அவர்களின் ஆதிக்கம் தென்னிந்தியா மீதும் கடல் கடந்து போய் இருந்த வரலாறுகளும் இருக்கின்றன.
இந்திய விரோத நடவடிக்கை
இந்தப் பின்னணியில் இந்தியா விரோதப் போக்கு நாட்டில் எப்படி ஆரம்பிக்கின்றது என்று பார்ப்போம். பல தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கை வளமான தேசமாகவும், இந்தியா மிகவும் வறுமைப்பட்ட தேசமாகவும் இருந்தது. எனவே வயிற்றுப்பிழைப்புக்காக ஆண்டு தோறும் எண்ணிக்கையற்ற இந்தியர் தொழில் தேடி இங்கு வரும் நிலை இருந்தது. கள்ளத்தோணிகள் என்று அழைக்கப்படும் இவர்களைத் தடுப்பது தான் அன்று இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தின் முக்கிய பணியாக இருந்தது. கால ஓட்டத்தில் இந்திய அரசியல், பொருளாதார ரீதியில் தன்னைப்பலப்படுத்திக் கொண்டது. இன்று இந்திய உலகில் பலமான இராணுவத்தைக் கொண்ட நாடு. பொருளாதார ரீதியிலும் அந்த நாடு இன்று உலகின் முன்னிலை பெற்று நிற்கின்றது.
ஜேவிபி தலைவர் ரோஹன விஜேவீர தனது முதலாவது போராட்டக்காலப் பகுதியில் 1971களில் கடும் அமெரிக்க விரோதப் போக்கை கையாண்டார். அன்று இந்த நாட்டில் இந்தளவு வெளிநாட்டவர்களுக்கு உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் இல்லாத நிலையில் பெந்தோட்டையில் இருந்த பீச் ஹோட்டல்தான் அதிகளவில் அன்று உல்லாசப் பிரயாணிகள் வந்து தங்குகின்ற ஹோட்டலாக இருந்தது. இதனை அவர் ஆபத்தான ஒரு இடமாகவும் அமெரிக்க நலன்கான உளவு மையமாகவும் அதனை அவர் அடையாளப்படுத்தி இருந்தார். எனவே அமெரிக்க விரோதக் கோஷமே அன்று அவர்களின் இளைஞர்களைக் கவருகின்ற முக்கிய தொனிப் பொருளாக இருந்தது.
ஜேஆர் - ரஜீவ், இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தைத் தொடந்து ஜேவிபி தனது இரண்டாவது கிளர்ச்சியை துவங்கியது. அப்போது அவர்கள் கடும் இந்தியா விரோதப்போக்கை கடைப்பிடித்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். நாட்டை நிலைகுழைய வைத்தனர். இந்தப் போராட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றார்களோ இல்லையோ, தனது தலைவர் ரோஹன விஜேவீரவை அவர்கள் இந்தப் போராட்டத்தில் பலி கொடுத்ததுடன், சோமவன்ச அமரசிங்ஹவைத் தவிர்ந்த அனைத்து மத்திய குழு உறுப்பினர்களையும் இந்தப் போராட்டத்தில் அவர்கள் இழந்துபோனார்கள். என்றாலும் இன்றும் அவர்கள் விதைத்த இந்திய விரோதக் கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் மஹிந்த விசுவாசிகளும் தற்போது இந்திய விரோதப் போக்குக்கு உரமூட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இது எந்தளவுக்கு இருக்கின்றது என்றால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலம் என்று வரும் ஆபத்தை எதிர்நோக்கி வருகின்றது என்று எச்சரித்து இருக்கின்றார். எனவே தற்போது தனது அரசியல் தேவைக்காக அவரும் இந்திய விரோத கடும் போக்காளராக மாறி இருக்கின்றார்.
இதற்கிடையில் தொழிற்சங்கங்களும் இந்தியாவுடன் இலங்கை செய்ய முனைகின்ற இந்திய இலங்கை பொருளாதார தொழிநுட்ப நல்லுறவு -நுவுஊயு உடன்பாடு என்ற இந்த உடன்பாட்டை கடுமையாக எதிர்த்து வருகின்றார்கள். அன்று சீபா என்ற பெயரில் மஹிந்த காலத்தில் இந்த உடன்பாட்டை கொண்டுவர முயன்ற போதும் கடுமையான எதிர்ப்பு வந்ததால் அது அன்று கைவிடப்பட்டது.
சண்டித்தனமும் எச்சரிக்கையும்
கூட்டுத் தொழிற்சங்கத் தலைவரும் ஜேவிபி முக்கியஸ்தருமான லால் காந்த இந்த - நுவுஊயு விடயத்தில் பிரதமர் ரணில் ஒரு சண்டியனைப்போல் நடந்து கொள்கின்றார். இவரை விட பெரிய சண்டியர்களை எல்லாம் நாம் சந்தித்திருக்கின்றோம். ரணிலைவிட உண்மையிலேயே பெரிய சண்டியன்தான் மஹிந்த ராஜபக்ஷ, அவரைவிடப் பெரிய கிள்ளாடிதான் கோத்தா. பசில் போன்றவர்களின் தலைக்குமேல் காகம் குருவிகூட பறக்க முடியாதிருந்தது. இவர்களை எல்லாம் எங்களுக்கு ஓட ஓட விரட்டியடிக்க முடியுமாக இருந்தால் இந்த ரணில் எம்மட்டு.
எனவே அரசாங்கத்தினதும் மக்களினதும் நலனை கருத்தில் கொண்டு, ரணில் தனது சண்டித்தனப் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும். என்று நாம் அவரை எச்சரிக்கை செய்கின்றோம் என்று கடும் தொனியில் பேசியதுடன் அவ்வாறு அவர் கூறுகின்ற படி யார் எதிர்த்தாலும் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஜூலையில் செய்தே தீருவோம் என்று சொன்னபடி செய்தாலும் இந்த ஒப்பந்தத்தை நாம் அமுல் படுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கர்ச்சித்திருக்கின்றார் லால் கந்த.
ஆளும் தரப்பு பல்டி
இதற்கிடையில் கடந்த வியாழக்கிழமை தனியார் தொலைக் காட்சி அலைவரிசையொன்று இந்த - ETCA விவகாரம் தொடர்பாக ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. அங்கு ஆளும் தரப்பு சார்பில் அர்ஷத சில்வா, அஜீத் பெரோ, எதிர்க் கட்சிகள் சார்பில் சுனில் ஹதுன்ஹெட்டி, உதய கம்மன்பில ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.
இந்த விவாதம் நடந்து கொண்டிருந்த போது வழக்கம் போல் ஜேவிபி ஹந்துன் ஹெத்தி சுவரில் சாத்தி அறைவது போல் ஆளும் தரப்பில் அங்கு ஆஜராகி இருந்தவர்களை நிலைகுழைய வைத்துக் கொண்டிருந்த போது, இல்லை இல்லை நீங்கள் பேசுகின்ற படி எதுவும் இந்த உடன்பாட்டில் கிடையாது! உங்கள் கைகளில் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவினால் கையளிக்கப்பட்டிருக்கின்ற தகவல்கள் அதிகாரிகளின் தவறுகளால் நடந்திருக்கின்றது.
இந்த உடன்பாடு தொடர்பான இலங்கைக்குப் பாதகமான அம்சங்கள் எதுவும் கிடையாது. இந்த அம்யூலன்ஸ் இலங்கைப் பிரதமர் ரணிலின் வேண்டுகோளுக்காக இந்தியா அரசு முற்றிலும் இலவச சேவையாகவே இதனை எமக்குத் தருகின்றது என்று, ஒரு புதிய உடன்பாட்டு அம்சங்கள் அடங்கிய விபரங்களை அங்கு முன்வைத்த அர்ஷத சில்வா தான் இந்த விடயத்தை பொறுப்புடன் கூறுவதாகவும் இதற்கு மேல் நீங்கள் குற்றம் சாட்டுகின்றவாறு உடன்பாட்டை அரசு முன்னெடுக்குமானால் தான் அரசியலில் இருந்து விலகிவிடுவதாகவும் அங்கு உறுதி மொழி வழங்கினார்.
இப்படி நீங்கள் சொல்லுகின்ற படி உடன்பாடு நாட்டுக்கு சாதகமாக நடக்குமானால் நாங்கள் இதனை ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை. இரு கரங்களையும் தூக்கி ஆதரிப்போம். நாடுகளுடன் இணக்கப்பாடுகள் உடன்பாடுகளை மேற் கொள்ளாது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்று நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். என்று ஹந்துன் ஹெத்தி குறிப்பிட்டதுடன் நாட்டில் இந்த உடன்பாட்டுக்கு எதிராக மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டுதான் இந்த மாற்றங்கள் நடந்திருக்கின்றது என்று அங்கு குறிப்பிட்டார்.
நாங்கள் பேசவந்த விடயங்களை இப்போது பேச வேண்டிய தேவை இல்லாமல் போய் இருக்கின்றது என்று நிகழ்ச்சித் தொகுப்பாளரும் எதிரணி சார்பில் வந்தவர்களும் அங்கு சுட்டிக்காட்டினார்கள். எனவே மலிக் சமரவிக்கிரம முன்வைத்த உடன்பாட்டு விடயங்கள் தற்போது செல்லாக்காசகப் போய் இருக்கின்றது என்று தெரிகின்றது.
விவாதம் பூராவிலும் ஆளும்தரப்பு சார்பில் விவாதத்துக்கு வந்திருந்த பிரதி அமைச்சர் அஜீத் பெரேரா உதய கம்மன்பிலவுடன் வம்புத்தனமாக தர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது அலர்ஜியாக இருந்தது.
ரோ உளவாளிகள்
இந்த ETCA உடன்பாட்டின் முதல் கட்டமாக இங்கு வைத்திய சேவைக்காக கொண்டுவரப்படவுள்ள அம்யூலன்ஸ் சேவையானது எமக்குத் தெரிந்தவரை இந்தியா ரோ அமைப்பின் உளவு வேலையின் ஒரு அங்கமாக இருக்கின்றது என்று தெரிகின்றது. இதில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றவர்களும் ரோ உளவுத்துறையை சேர்ந்தவர்களாக இருப்பதற்கே அதிக வாய்ப்புக்கள் இருந்து வருகின்றது என்று விமல் வீரவன்ச சாடுகின்றார்.
பிரதமர் ரணில் ஊடகங்கள் மற்றும் ETCA விடயத்தில் நடந்து கொண்ட முறை ஜனாதிபதி மைத்திரிக்கும் ஜீரணிக்க வில்லை என்று தெரிகின்றது. என்ன பிரதமரே சற்று ஒவராக இருந்தது என்று கேட்க இல்லை இல்லை அப்படித்தான் இவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டி இருந்தது என்று சமாளித்திருக்கின்றார் பிரதமர். கட்சியில் சிரேஷ்ட தலைவர்கள் கூட ரணிலிடத்தில் இது விடயத்தில் சற்று பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை சொல்லி இருக்கின்றார்கள்.
இந்த நுவுஊயு விடயத்தில் இதுவரை ஜனாதிபதி மைத்திரி எந்த விதமான கருத்துக்களையும் வெளியிடாது இருப்பதும் பெரும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
Post a Comment