Header Ads



பொலிஸ் நிதி மோசடி, குற்ற விசாரணை பிரிவின் வேட்டை தொடரும்

இலங்கை பொலிஸ் நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவினால் அனைவரும் அரசியல் கைதிகளாக மாறுவார்கள் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டு பொலிஸ் நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது சட்ட ரீதியான ஒன்று அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவானது சரி்யாக ஒரு வருடம் சட்டபூர்வமற்ற முறையில் இயங்கி வருவதாக குறிப்பிட்ட தினேஷ் குணவர்தன, அதனை உடன் தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அச்சுறுத்தல்களை மேற்கொள்வதற்காக மாத்திரமே பொலிஸ் நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது பழிவாங்கும் நடவடிக்கையாக மாற்றமடைந்துள்ளதாகவும் தினேஷ் குணவர்தன இதன்போது கூறியுள்ளார்.

அத்துடன், இந்த அரசாங்கத்தின் கீ்ழ் அரசியல்வாதிகள், மாத்திரமன்றி ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

மேலும், பொலிஸ் நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவானது ஜனநாயகத்திற்கு மாத்திரமன்றி, அரசியலமைப்புக்கும் முரணானது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் நாட்டை இருள்சூழ்ந்த யுகமொன்றை நோக்கி கொண்டு செல்வதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

யோஷித ராஜபக்ஸவை கைது செய்வதற்கு பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு எவ்வித அதிகாரங்களும் கிடையாது என சுட்டிக்காட்டி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, இது முடிவற்ற வேட்டையாக மாற்றமடைந்துள்ளதாகவும் கூறினார்.

No comments

Powered by Blogger.