Header Ads



"காலையில் மகிந்த, மாலையில் மைத்திரி" - மோதல் சூடு பிடிக்கிறது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பக்கம் பாய்வதற்குத் தயாராகிவரும் நிலையில், அதைத் தடுப்பதற்குரிய வியூகங்களை சு.கவின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வகுத்து வருகின்றார்.

இதன்பிரகாரம் இன்று 14ஆம் திகதி சுதந்திரக் கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை விசேட சந்திப்புக்காக அவர் அழைத்துள்ளார்.

நீர்கொழும்பிலுள்ள நட்சத்திர ஹேட்டலொன்றில் இந்தச் சந்திப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தவறாறு கலந்துகொள்ளுமாறு அனைத்து முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மஹிந்தவுக்கு சார்பான உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை தம்பக்கம் வளைத்துப்போடுவதற்குரிய சமரச முயற்சியிலும் ஜனாதிபதி மைத்திரிபால இறங்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், ஒரு வழிப்பயணத்தை ஆரம்பிப்பதற்கு அனைவரும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்றும் அவர் பகிரங்க கோரிக்கை விடுக்கவுள்ளார்.

உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு அவற்றின் நிர்வாகம் செயலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் இந்த வருடம் நடக்குமா என்பது உறுதியற்ற நிலையில் இருக்கின்றது. இவ்வருடத்துக்குள் நடப்பதற்கு சாத்தியப்பாடுகள் இல்லையென்றே கூறப்படுகின்றது.

இந்த நிலையில், சு.கவின் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி தங்களுக்கு மஹிந்த வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன், மைத்திரியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மகிந்த தரப்பு இன்று காலை நீர்கொழும்பில் கூட்டமொன்றையும் நடத்தியுள்ளனர்

இவ்வாறு விமர்சித்த 10 பேருக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு சு.கவின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால இன்று சந்திக்கவுள்ளார்.

அதேவேளை, இந்தச் சந்திப்பு முடிவடைந்த பின்னர் சு.கவின் உயர்மட்ட உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பின்னர் நாளை திங்கட்கிழமை இரவு ஜேர்மனுக்கு புறப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.


1 comment:

  1. பாற்சோறுக்கு கட்டச்சம்பல் தயாரிப்பது என்றால் சும்மாவா..?

    ReplyDelete

Powered by Blogger.