Header Ads



தீவிரவாதி என குற்றம் சுமத்தப்பட்ட, உமர் காலித்தின் போராட்ட குணம்...!


தோழர்களே, உங்களுக்கு நான் ஆலோசனை கூற வேண்டிய தேவையில்லை. நாம் அஞ்ச வேண்டிய, பதட்டப்பட வேண்டிய தேவையில்லை. அவர்களிடம் பெரும்பான்மை இருக்கலாம், நாடாளுமன்றத்தில் நிறைய சீட்டுகள் இருக்கலாம், அரசு இயந்திரம் காவல்துறை, இராணுவம் இருக்கலாம், இருந்தும், அவர்கள் கோழைகள். அவர்கள் நம்மை கண்டு அஞ்சுகிறார்கள். அவர்கள் நமது போராட்டங்களை கண்டு அஞ்சுகிறார்கள். நாம் சிந்திக்கிறோம் என்பதே அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

தரகர் வேலையைத் தவிர ஒன்றுமே அறியாத இவர்கள், அரசாங்கம் என்ற பெயரில் அமர்ந்து கொண்டு, அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் கனிம வளங்களை, இயற்கை வளங்களை, மனித வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று வருகிறது. கல்வியை விற்கிறது. உலக வர்த்தக ஒப்பந்த மாநாட்டில் மண்டியிட்டு நிற்கிறது. இவர்கள்தான் தேசபக்தி என்றால் என்ன என்று எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்.அவர்கள் நம்மை தேசவிரோதிகள் என்கிறார்கள். உலக தேசவிரோதிகளே ஒன்று சேருங்கள். மக்களின் மீதான பிரியத்தில் ஊன்றி நின்று, மக்களின் உரிமைகளுக்காக போராடுங்கள். நமக்கு எல்லைகள் கிடையாது, கட்டுகள் கிடையாது. உலகெங்கிலும் இருக்கிற அரச ஆளும் வர்க்கத்திற்கு எதிராக திரள்வோம். இதுபோன்ற இழிவான உத்திகளால், அவர்கள் எம்மை அச்சுறுத்த முடியாது. எங்களை மெளமாக்க முடியாது.

கடந்த சில நாட்களில் மட்டும் 800 போன் கால்களை பேசியிருக்கிறேனாம். ஊடகங்களுக்கு இது குறித்து எந்த ஆதாரமும் தேவையில்லை. பொய்யென்றாலும் அதை உண்மை போல உறுதியாக சொல்கின்றன. காஷ்மீருக்கு, வளைகுடாவுக்கு என்று தொடர்ந்து சொல்கிறார்கள். ஒரு ஆதாரத்தையாவது காட்ட வேண்டாமா? அப்படி கால் செய்திருந்தால் ஒன்றும் நிகழப்போவதில்லை என்பது வேறு விசயம், ஆனால், செய்திருந்தால் ஒற்றை ஆதாரத்தையாவது காண்பிக்க வேண்டாமா? விசாரணையில்லாமல், ஆதாரமில்லாமல் எதை வேண்டுமானாலும் இவர்கள் சொல்வார்கள். அதாவது இவர்களுக்கு வெட்கம் என்பது வருவதேயில்லை. அவர்களுக்கு வெட்கம் வர வேண்டும் என்று எதிர்பார்த்தோமேயானால், நம்மை நாமே முட்டாள்களாக்குவதற்கு சமம்.

நம்மை தவறாக சித்தரிப்பதற்காகவே இந்த ஊடகங்கள் நடத்திய விசாரணை, அரசாங்க தரப்பிலிருந்து மொஹம்மதோடு எந்த தொடர்பும் இல்லை என்று வந்த பிறகும், மன்னிப்பு கேட்க வேண்டுமென்று இவர்களுக்கு தோன்றவே இல்லை. இப்படி மிகக்கேவலமாக சொல்லப்பட்ட இந்த பொய்களால், ஊடகங்கள் நாங்கள் அடங்கிவிடுவோம் என்று நினைத்தால், அது நடக்காது. ஆதிவாசிகள் என்றால் மாவோயிஸ்டுகள் என்பதும், இஸ்லாமியர் என்றால் தீவிரவாதிகள் என்பதும் என்ற தொடர் பரப்புரையில் அரசு இயந்திரமும், ஊடகமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இப்படியான குற்றச்சாட்டுகளில் அகப்படுகிற அப்பாவிகளின் குரல் பல நேரம் வெளியில் கேட்பதில்லை. ஆனால், இந்த முறை தவறான இலக்கை அவர்கள் தேர்வு செய்து விட்டார்கள். ஜேஎன்யூ மாணவர்கள் இதற்கு சரியான பாடம் கற்பிப்பார்கள். ஒவ்வொரு ஊடகமும் இதற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் .

நான் என்னை பற்றி கவலைப்பட்டதில்லை. நீங்கள் ஆயிரக்கணக்கில் என்னோடு இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால், என் சகோதரி மற்றும் தந்தையின் பேட்டிகளை படித்த பிறகுதான் எனக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.

எனக்கு ஏராளமான சகோதரிகள் இருக்கிறார்கள், அவர்களையெல்லாம் சமூக வலைதளங்களின் வழியாகவும் மற்ற வழிகளிலும் வன்புணர்ந்துவிடுவோம் என்றும், அமிலம் ஊற்றி விடுவோம் என்றும், கொலை செய்து விடுவோம் என்றும் கேவலமான முறையில் தொடர்ந்து மிரட்டி வந்திருக்கின்றனர். பஜ்ரங் தள் கூட்டம் கந்தமாலில் கிருஸ்துவ சகோதரியை வன்புணர்ச்சிக்குள்ளாக்கிய போது பாரத் மாதா கி ஜெய் என்றுதான் முழக்கமிட்டார்கள்.தோழர் கண்ஹையாவின் அன்றைய உரையை நினைவுப்படுத்த விரும்புகிறேன். உங்கள் பாரத மாதாவில் எங்கள் அன்னையும், சகோதரியும் இல்லையென்றால், அதை எங்கள் பாரத மாதாவாக ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படி சொல்வதில் எங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை.

தேசவிரோதியாவது அனைத்திலும் எளியது. நீங்கள் சிந்திக்க தொடங்கிவிட்டாலே உங்களுக்கு தேசவிரோதி முத்திரை விழுந்துவிடும்.”

என் மேல் நடந்த மீடியா விசாரணையை பற்றி ஒரு சிறிய விசயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த வளாகத்தில் அரசியல் செய்து வருகிறேன். ஒரு கணம் கூட என்னை இஸ்லாமியனாக உணர்ந்தது கிடையாது. என்னை முஸ்லீமாக வெளிப்படுத்தியதும் கிடையாது. நான் புரிந்து கொண்டவரையில் சமூக ஒடுக்குமுறை என்பது இஸ்லாமியர்கள் மீதும் மட்டும் இல்லை, தலித்துகளின் மீதும், பழங்குடிகளின் மீதும் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் எங்களை போன்றவர்கள், உடனடி அடையாளத்திலிருந்து வெளிவந்து, அனைத்து பிரச்சினைகளையும் முழுமையாக பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக இஸ்லாமியனாக எண்ணாத எனக்கு கடந்த பத்து நாளில்தான் நான் இஸ்லாமியன் என்று தோன்றியது. ரோஹித்தின் சொல்லில் கூற வேண்டுமானால், நான் என் உடனடி அடையாளத்தில் சுருக்கப்பட்டு இருக்கிறேன். என்னை பாகிஸ்தானின் ஏஜெண்ட் என்று சொல்கிறார்கள்.


No comments

Powered by Blogger.