ரணிலின் அறிவிப்பினால் பாராளுமன்றத்தை குழப்பவிருந்த, மஹிந்த அணியின் திட்டம் தடை..!
மாற்று எதிர்க்கட்சி எனக் கூறிக்கொள்ளும் மஹிந்த அணியை அங்கீகரிப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது தீர்வு பெற்றுத் தருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்பவிருந்த மஹிந்த அணியின் திட்டம் தடைப்பட்டது.
பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியபோது தினப்பணிகளைத் தொடர்ந்து ஆட்பதிவு செய்யும் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை அனுமதிப்பது தொடர்பான விவாதம் ஆரம்பமானது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன, மாற்று எதிர்க்கட்சியை அங்கீகரிப்பது தொடர்பான பிரச்சினையை இரண்டாவது நாளாக நேற்றும் முன்வைத்தார். இவ்விவகாரம் தொடர்பில் ஆளும் தரப்பினரும் எதிர்த்தரப்பினரும் வாதப் பிரதிவாதங்களை முன்வைத்தனர்.
இந்த விவாதத்தில் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐ.ம.சு.மு தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசாமல் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது எனவும், எதிர்க்கட்சித் தலைவர், ஐ.ம.சு.மு பாராளுமன்றக் குழுத் தலைவர், ஜனாதிபதி ஆகியோருடன் பேசி இதற்கு தீர்வு பெற்றுத் தருவதாகவும் குறிப்பிட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஐ.ம.சு.மு பாரளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன, எம்மை தனியான குழுவாக அங்கீகரித்து எமக்குரிய வரப்பிரசாதங்களைப் பெற்றுத் தருமாறு தொடர்ந்து கோரிவருகிறோம். இதற்கு உரிய பதில் வழங்கப்படாத நிலையிலேயே பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இடையூறு செய்ய நேரிட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை நடுவில் திரண்டிருக்கையில் சட்டமூலமொன்றை நிறைவேற்றியது சட்டவிரோதமானது என்றார்.
அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர், மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் இங்கு உரையாற்ற பூரண உரிமை இருக்கிறது. குழுவொன்றை அமைத்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணத் தயாராக இருக்கிறோம் என்றார்.
சபாநாயகர் கருத்து வெளியிடுகையில் தங்களை சுதந்திரக் கட்சி மாற்றுக்குழுவாக அங்கீகரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் நான் ஆய்வு நடத்தினேன். பிறநாட்டு நடைமுறைகள் சட்ட விதிகள் கடந்தகால அனுபவங்கள் என்பன தொடர்பிலும் கவனம் செலுத்தினேன். சுதந்திரக் கட்சியும் ஐ.தே.கவும் தேசிய அரசாங்கமாக இணைந்துள்ள நிலையில் தனியான சுதந்திரக் கட்சிக் குழுவொன்று இருக்க முடியாது. சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஏற்பவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அதனை நிறைவேற்றாமல் விடுவது நாட்டுக்கு செய்யும் பெரும் துரோகமாகும். இதனாலேயே எதிர்த்தரப்பின் இடையூறுக்கு மத்தியில் வேறு வழியில்லாமல் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தேன் என்றார்.
Post a Comment