உலகிலேயே மிக இள வயதில், பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த இரட்டையர் - சுவிட்ஸர்லாந்தில் சாதனை
ஸ்விட்ஸர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளும் அவர்களின் சகோதரியும். ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளில், கல்லீரல், நெஞ்சுப் பகுதியில் ஒட்டிப் பிறந்த இரு குழந்தைகள் அரிய அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டன.
ஸ்விட்ஸர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளும் அவர்களின் சகோதரியும். ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளில், கல்லீரல், நெஞ்சுப் பகுதியில் ஒட்டிப் பிறந்த இரு குழந்தைகள் அரிய அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டன.
ஸ்விட்ஸர்லாந்தில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள், பிறந்த எட்டே நாளில் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மாயா, லிடியா ஆகிய அந்த இரு பெண் குழந்தைகள்தான் உலகிலேயே மிகவும் இளைய வயதில் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஸ்விட்ஸர்லாந்து ஊடகங்களில் ஞாயிற்றுக்கிழமை வெளியான தகவல்:
பெர்ன் நகரில் ஒரே பிரசவத்தில் மாயா, லிடியா, கமீலா ஆகிய மூன்று பெண் குழந்தைகள் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி பிறந்தன.
இரண்டு மாத குறைப் பிரசவத்தில் பிறந்த அந்த மூன்று குழந்தைகளில் மாயா, லிடியா ஆகிய இரு குழந்தைகளும் ஈரல்கள் மற்றும் நெஞ்சுப் பகுதிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டியவாறு பிறந்தன.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க சில மாதங்கள் காத்திருக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
எனினும் பிறந்த ஒரு வாரத்தில், ஒட்டிய இரட்டைக் குழந்தைகளின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது.
ஒரு குழந்தைக்கு உயர் ரத்த அழுத்தமும், மற்றொரு குழந்தைக்கு குறை ரத்த அழுத்தமும் ஏற்பட்டது.
இவை இரண்டுமே குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை.
அவர்களது உயிரைக் காப்பாற்ற உடனடி அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே முயற்சி என்ற நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக அந்தக் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
ஐந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள், இரண்டு செவிலியர், ஆறு மயக்க மருத்துவ நிபுணர்கள் ஐந்து மணி நேரம் போராடி அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
அந்த அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது என்பதாலும், குறிப்பாக ஈரல்களைப் பிரிப்பது மிக மிக ஆபத்தானது என்பதாலும், அந்த இரு குழந்தைகளின் உயிரிழப்புக்கும் தங்களைத் தயார்படுத்திக் கொண்டே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
ஆனால் அதிருஷ்டவசமாக, அந்த அறுவை சிகிச்சை வெற்றியடைந்தது.
Post a Comment