பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு
பிரான்ஸ் நாட்டில் ஆசிரியர் ஒருவரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது சட்டவிரோதமானது என்பதால் அவருக்கு பேஸ்புக் நிறுவனம் 20,000 யூரோ வரை அபராதம் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் வசித்து வந்த ஆசிரியர் ஒருவர் 19ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஒரு பெண்ணின் நிர்வாண ஓவியப்படத்தை கடந்த 2011ம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
ஆனால், பேஸ்புக் விதிமுறைகளை காரணம் காட்டி அந்த ஓவியப்புகைப்படம் நீக்கப்பட்டதுடன் ஆசிரியரின் கணக்கையும் பேஸ்புக் நிறுவனம் முடக்கியது.
பிரான்ஸ் நாட்டு சட்டப்படி பேஸ்புக்கின் இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் மீது ஆசிரியர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்தாண்டு மார்ச் மாதம் ஆசிரியருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது, அதனை எதிர்த்து பேஸ்புக் நிறுவனம் மேல் முறையீடு செய்தது.
இந்த மேல் முறையீடு வழக்கு நேற்று முன் தினம் நீதிமன்றத்திற்கு வந்தபோது ஆசிரியரின் வழக்கறிஞர் சில கருத்துக்களை நீதிபதி முன்னிலையில் வைத்துள்ளார்.
அவற்றில், ‘சமூக வலைத்தலமான பேஸ்புக்கின் விதிமுறைகள் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்திற்கு உட்பட்ட சட்ட விதிகளை பின்பற்றுபவையாக இருக்கிறது.
ஆனால், இந்த விதிகளை பிரான்ஸ் நாட்டில் பயன்பாட்டாளர்கள் பின்பற்றுவது என்பது பிரான்ஸ் நாட்டின் சட்டங்களுக்கு எதிரானது. இதனால் தனது கட்சிகாரரும் பாதிக்கப்பட்டுள்ளார்’ என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், பேஸ்புக் நிறுவனத்தின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஆசிரியருக்கு 20,000 யூரோ அபாரதம் வழங்க வேண்டும் என்றும், அவரது பேஸ்புக் கணக்கை திரும்ப செயல்பாட்டில் கொண்டுவர உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்னும் சில தினங்களில் இறுதி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், ஆசிரியருக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment