Header Ads



பதிலடிக்கு தயாராகும் மைத்திரி


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள தனக்கு விசுவாசமான உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை நீர்கொழும்புக்கு அழைத்து மைத்திரிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான தீர்மானங்களை நிறைவேற்றிய மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் பதிலடி கொடுக்கவுள்ளார்.

ஜேர்மன், ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய கையோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை அவர் சந்திக்கவுள்ளார்.

இதற்குரிய ஏற்பாடுகளை செய்யுமாறு கட்சியின் பொதுச் செயலாளரான துமிந்த திஸாநாயக்கவுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது. ஜனாதிபதியின் ஆலோசனையின்படியே அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா நேற்றுமுன் தினம் ஊடகவியலாளர் மாநாட்டையும் நடத்தினார் எனத் தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பலர் கடந்த ஞாயிறன்று நீர்கொழும்பு கொச்சிக்கடையில் ஒன்று கூடினர். மஹிந்தவின் ஆலோசனையின் பேரிலேயே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

அரசிலுள்ள சு.க. அமைச்சர்கள் வெளியேற வேண்டும், புதிய கட்சி ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது உட்பட 5 தீர்மானங்கள் இதன்போது நிறைவேற்றப்பட்டன.

சு.கவின் தலைவராகச் செயற்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே, தனக்கு சார்பான முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை அழைத்து அதிரடித் தீர்மானங்களை நிறைவேற்றி மஹிந்த தரப்புக்கு பதிலடி கொடுப்பதற்கு மைத்திரிபால சிறிசேன தயாராகி வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.

அதேவேளை, புதிய கட்சியொன்று அமைத்து போட்டியிட சு.கவின் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தயாராகி வருவதால், புதிய வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்குரிய அறிவிப்புகளையும் சு.க. விரைவில் வெளியிடவுள்ளது.

No comments

Powered by Blogger.